தற்போது நடைபெறவிருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் யாரும் போட்டியிடக் கூடாது. எந்த அணியின் சார்பாகவும் பேசாமல் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. கட்சியின் தலைமை அறிவுறுத்தியுள்ளது. என்றாலும், தேர்தலில் அவர்கள் வாக்களிக்க எந்த தடையும் இல்லை என்றும் சொல்லப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரான நடிகர் சரத்குமார், நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தனது தலைமையிலான அணிக்கு அ.தி.மு.க. தலைமையின் ஆதரவு இருக்கிறது என்று காட்டிக் கொள்வதற்காக, அவர் அ.தி.மு.க.வை சேர்ந்த நடிகர் – நடிகைகள் சிலரை தனது அணி சார்பில் வேட்பாளர்களாக நிறுத்த விரும்பினார். இவரது அணியின் சார்பில் ஏற்கெனவே தியாகு, பாத்திமா பாபு, சி.ஆர்.சரஸ்வதி, குண்டு கல்யாணம் நால்வரும் களமிறங்கியிருந்தனர்.
இதேபோல் இவர்களது எதிரணியான விஷால் அணியில் அ.தி.மு.க. உறுப்பினர்களான ஆனந்தராஜ், ஜே.கே.ரித்தீஷ் இருவரும் இணைந்திருந்தனர். இப்படி ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களே இரண்டு அணியிலும் கலந்திருப்பதால் ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் தலைமை யாருக்கு ஆதரவளிக்கப் போகிறது என்பது தெரியாமல் தவித்துப் போயிருந்தார் சரத்குமார்.
சரத்குமாரைவிடவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகர் சிவக்குமார்தான் மிக நெருக்கமானவர். சிவக்குமாரை தன் குடும்ப நண்பராகவே பாவிக்கிறார் முதல்வர். இதனால் ஜெயலலிதாவுக்கே சங்கடத்தைக் கொடுத்துவிட்டது இந்த நடிகர் சங்கத் தேர்தல். அதிலும் நடிகர் சங்கத்தில் நடந்திருக்கும் குளறுபடிகளெல்லாம் உளவுத்துறை மூலமாக ஜெயலலிதாவின் பார்வைக்கும் போயிருக்கிறது.
இதனால்தான் சிவாஜி கணேசன் மணிமண்டம் பற்றி சட்டப் பேரவையில் பேசும்போது, ‘நடிகர் சங்கம் அதில் இத்தனையாண்டுகளாக ஆர்வம் காட்டாததால்தான் இப்போது தமிழக அரசே மணி மண்டபத்தைக் கட்டித் தரும் பொறுப்பை ஏற்கிறது’ என்று வெளிப்படையாகவே தெரிவித்தார் ஜெயலலிதா. இது சரத்குமாருக்கு மிகப் பெரிய அவமானமாக இருந்தாலும், கூட்டணி தர்மத்தினால் அவரால் வேறு எதுவும் பேச முடியவில்லை.
நடிகர் சங்க விவகாரத்தில் ஏதோ தவறுகள் நடந்திருப்பதை யூகித்து ஆரம்பத்திலிருந்தே ஜெயலலிதா இந்த விஷயத்தில் தள்ளியே இருக்கிறார். சமீபத்தில் இரண்டு அணியினரும் ஆசி பெற வேண்டி சந்திக்க அனுமதி கேட்டபோதும் அதற்கு மறுத்துவிட்டார்.
இந்த நேரத்தில் அ.தி.மு.க.வில் உறுப்பினராக இருப்பவர்கள் இந்த நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மூத்த அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மூலமாக அ.தி.மு.க.வில் அங்கம் வகிக்கும் நடிகர், நடிகையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இதனால்தான் இரண்டு அணிகளிலுமே தியாகு, பாத்திமா பாபு, சி.ஆர்.சரஸ்வதி, ஆனந்தராஜ், ரித்தீஷ் ஆகியோர் போட்டியிட முடியாமல் போய்விட்டது.
மேலும் இவர்களில் யார் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் அது கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதாலும், சங்கத்தைவிட கட்சியே முக்கியம் என்று ஜெயல்லிதா முடிவெடுத்ததினாலும்தான் இந்தத் திடீர் தடை என்கிறது அரசியல் வட்டாரம்.