full screen background image

‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன..? முழுமையான கட்டுரை..!

‘புலி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன..? முழுமையான கட்டுரை..!

இனிமேல் விஜய்யின் திரைப்பட விழாக்களை இதுபோல சென்னையைவிட்டு தள்ளி மாமல்லபுரத்தையும் தாண்டித்தான் வைக்க வேண்டும். இங்கே வைத்தும் கூட்டத்தை சமாளிக்கத்தான் முடியவில்லை.

சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் ‘புலி’யின் தீவிர ரசிகர்கள் தங்களது ரசிகர் மன்றத்தின் கொடியை பைக்கில் கட்டிக் கொண்டு மகாபலிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

சென்னையில் இருந்து பழைய ஓ.எம்.ஆர். சாலையில் கொட்டிவாக்கத்தில் துவங்கி மாமல்லபுரத்தில் இருக்கும் அந்த ரிசார்ட்வரையிலும் சாலையில் இடதுபுறத்தில் நூறு அடிக்கு ஒரு கட் அவுட் வைத்து அசத்தியிருந்தார்கள் விஜய் ரசிகர்கள்.

நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள யாரிடத்திலும் கேட்கவே தேவையில்லை என்பதுபோல இந்த கட்அவுட்டுகளை பார்த்தபடியே சென்றாலே போதும் என்று நினைத்து செயல்படுத்தியிருந்தார்கள்.

ரிசார்ட் வாசலிலும் பெரும் கூட்டம். அத்தனை ரசிகர்கள் கைகளிலும் ரசிகர் மன்றத்தின் விஜய்யின் முகம் தாங்கிய கொடிகள். எப்பாடுபட்டாவது உள்ளே செல்ல வேண்டும் என்று துடித்தபடி அழைப்பிதழ் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தார்கள் சிலர். அழைப்பிதழோடு வந்து உள்ளே சென்றவர்களை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

காவல்துறையினரோடு தனியார் செக்யூரிட்டி அலுவலர்களும், ரிசார்ட்டில் பணிபுரிபவர்களும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தும் ரசிகர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அரங்கத்திற்கு ரசிகர்கள் வருவதற்கு முன்பாகவே விஜய் வந்துவிட்டார். வாசலின் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார். முக்கிய பிரமுகர்கள் வரும்போது மட்டும் வாசல் பகுதிக்கு வந்து அவர்களை வரவேற்று உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்.

சென்னை மாவட்டத்தின் முக்கிய விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகிகளுக்கு மட்டும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த்தால் அவர்கள் அனைவரும் உள்ளே அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களது வாயும், கையும் சும்மா இல்லை. மேடையில் இருந்த ஸ்கிரீனில் ‘புலி’யின் ஸ்டில்கள் வரிசையாக ஓடிக் கொண்டிருக்க.. அதில் விஜய்யின் முகம் வரும்போதெல்லாம் கைதட்டல்களும், விசில்களும் தூள் பறந்தன.

அதேபோல் விருந்தினர்கள் ஒவ்வொருவராக வரும்போதும் இதே கதிதான். பின் வரிசையில் அமர்ந்திருந்தவர்களெல்லாம் முன் வரிசைக்கு ஓடி வந்து நின்றபடியே வந்தவர்களைப் பார்த்துவிட்டு பின்பு திரும்பிச் சென்றார்கள். ரசிகர்களின் ஆர்வக் கோளாறை யார் தவறென்று சொல்ல முடியும்..?

சிறப்பு விருந்தினர்களுக்கு தனித்தனி சோபாக்கள் போட்டு கவுரவப்படுத்தியிருந்தார்கள். இதில் நடு நாயகமாக விஜய் இருப்பது போல செட்டப் செய்திருந்தார்கள்.

மு்ககிய பிரமுகர்கள் வரும்போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 8 குதிரைகளில் போர் வீரர்கள் அமர்ந்திருந்தார்கள். காரில் இறங்கி அரங்கத்தின் வாசல்வரைக்கும் வருவதற்காக சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பளத்தின் இரு புறமும் கூர் தீட்டிய வேல்கம்புகளுடன் போர் வீரர்கள் தோற்றத்தில் சண்டை நடிகர்கள் நிறுத்தப்பட்டிருந்தார்கள். இவர்களது வேல்கள் ஒன்றுடன் ஒன்று மோதலுடன் வைக்கப்பட்டிருந்தது. பிரமுகர்கள் இவர்களது அருகில் வரும்போதுதான் அவர்களது வேல்கம்புகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. பார்ப்பதற்கு ராஜ தர்பாருக்கு வருகின்ற உணர்வைக் கொடுத்தது.

6.30 மணிக்கு விஜய் அரங்கத்தின் உள்ளே நுழைய, காது கிழியும் அளவுக்கு கைதட்டல்கள்.. அடுத்த 2 நிமிடங்களுக்கு அது நீடித்த்து.

இதன் பின்பே ஹன்ஸிகா தனது தாயாருடன் உள்ளே நுழைந்தார். அடுத்த அரை மணி நேரம் கழித்து ஸ்ருதிகமல்ஹாசன் வந்தார். சரியாக 8.20 மணிக்குத்தான் ஸ்ரீதேவி வந்து சேர்ந்தார். அதுவரையிலும் ஸ்ரீதேவி சென்னையில் இருந்து வந்து கொண்டிருப்பதையே ஒரு ஸ்பெஷல் செய்தியாக மேடையில் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

IMG-20150802-WA0047

நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நந்திதா, ஈடன், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இயக்குனர் சிம்பு தேவன் உள்ளிட்ட படக் குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், டி.ராஜேந்தர், தரணி, எஸ்.ஜே.சூர்யா, நடிகர்கள் ஜீவா, தம்பி ராமையா, விஜய் சேதுபதி, இமான் அண்ணாச்சி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை அஞ்சனாவும், பிரேமும் தொகுத்து வழங்கினார்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்தினை தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரும், ஷிபு தமீஷும் பேசினார்கள். பி.டி.செல்வகுமார் பேசும்போது “ஒரு சாதாரண பி.ஆர்.ஓ.வாக இருக்கும் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியிருக்கும் விஜய்யை என்னால் என்றைக்கும் மறக்க முடியாது. ஒரு நாள் என்னை அழைத்து ‘அடுத்த படத்தோட கதை ரெடியாயிருச்சு.. சிம்புதேவன் இயக்கப் போறார். நீங்கதான் தயாரிக்கிறீங்க..’ என்று மிக எளிமையாகச் சொன்னார். என்னால் நம்பவே முடியவில்லை.

நான் ஆரம்பத்தில் பத்திரிகையாளராக இருந்து எஸ்.ஏ.சி. ஸார்கிட்ட உதவியாளரா வேலை பார்த்து.. இப்போ விஜய் ஸாருக்கும் பி.ஆர்.ஓ.வாக இருக்குறதெல்லாம் நான் செய்த பாக்கியம் என்றே நினைக்கிறேன். தன்னிடம் வேலை பார்க்கும் பி.ஆர்.ஓ.வை தயாரிப்பாளராக்கிய ஒரேயொரு ஹீரோ தமிழ்ச் சினிமாவில் விஜய் ஸார் மட்டும்தான்…” என்று உருகினார்.

பின்பு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதுவரையிலும் விஜய் நடித்த படங்களில் இடம் பெற்ற பாடல்களை கொண்ட நடனக் காட்சி தொடர்ந்தது.

அடுத்து ‘புலி’ படத்தின் டிரெயிலரை இங்கேயும் வெளியிட்டார்கள். இந்த டிரெயிலரில் சில புதிய காட்சிகளையும் இணைத்திருந்தார்கள். ஹீரோயின்களைவிடவும் விஜய் அழகாகத் தெரிந்ததுதான் இதன் சிறப்பு.

Puli Audio Launch Stills (Set 1) (10)

அடுத்து மேடையேறிய இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனக்கும் விஜய்க்குமான உறவு பற்றி சிலாகித்து பேசினார். “குஷி’ படம் எப்படி விஜய்யின் கேரியரில் முக்கியமான படமோ அதேபோல் எனக்கும் அதுதான் ஒரு அடையாளம். அதை வைத்துதான் அடுத்து நான் என் இயக்குநர் பயணத்தைத் தொடர்ந்தேன். அதுக்கு வழிவகை செய்தவர் விஜய்தான். அவருக்கு என் நன்றி.

இந்தப் புலிக்கு அடைமொழியெல்லாம் தேவையில்லை. இப்படி புலி, அப்படி புலியெல்லாம் இது இல்லை. இது புலி அவ்வளவுதான். தமிழ்த் திரையுலகில் எனக்குத் தெரிந்து நன்றி என்ற வார்த்தையின் மறுபெயர் விஜய் மட்டும்தான்.” என்றார் நெகிழ்ச்சியோடு. ‘குஷி-2 என்னாச்சு?’ என்று ரசிகர்களே கோரஸ் குரல் எழுப்ப.. சட்டென்று குஷியான இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, “வரும் வாய்ப்புண்டு” என்று ஆங்கிலத்தில் சொல்ல.. இதற்கு விஜய் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சிரித்துக் கொண்டார்.

தொடர்ந்து படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை வெளியிட்டனர். இந்தப் பாடலுக்கு நடன இயக்குநர் ஸ்ரீதரின் குழுவினர் நடனமாடினார்கள். இதில் சிறுவர், சிறுமியர்களும் இணைந்திருந்தனர்.

அடுத்து இயக்குநர்கள் பேரரசுவும், தரணியும் பேசினார்கள். பேரரசு தன் பேச்சில், “வாலு’ படத்திற்கு உதவியவர் இந்த ‘புலி’தானாம். இன்றைக்கு்ததான் எனக்கு இந்த விஷயம் தெரிந்தது. ‘புலி’ வாலைப் பிடித்த கதைதான். ஆனால் இந்தப் ‘புலி’ வாலுக்கு மட்டுமில்லை ‘தலை’க்கும் நல்லதுதான் நினைக்கும். அப்துல் கலாம் மாதிரி இளைய தளபதி விஜய்க்கு எந்தப் பதவியும் தேவையில்லை. பதவியில்லாமலேயே பல கோடி இளைஞர்களை வழி நடத்துவார் இந்தப் புலி. .” என்றார். உடனேயே ‘தலைவா வா’ என்ற கூக்குரல்கள் அரங்கமெங்கும் ஒலித்தன.

தரணி பேசும்போது, ‘கில்லி’ ஷூட்டிங்கின்போது விஜய் நடந்து கொண்டதையும், அந்தப் படம் இன்றுவரையிலும் சூப்பர் ஹிட்டடித்து இருப்பதையும் சொன்னார். பேச்சுக்கு பேச்சு விஜய்யை ‘நண்பா.. நண்பா’ என்றே அழைத்து  விஜய்க்கு வாழ்த்து சொன்னார்.

இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசும்போது, “விஜய்யின் கேரியர் இப்படி உச்சக்கட்டத்திற்கு சென்றதற்கு காரணம் அவருடைய அயராத உழைப்புதான்…” என்று பாராட்டினார்.

அடுத்து இந்த ‘புலி’ படத்தில் விஜய்யும், ஸ்ருதிஹாசனும் இணைந்து பாடியிருக்கும் ‘ஏண்டி ஏண்டி’ பாடலுக்கு நடனக் குழுவினர் நடனமாடினார்கள்.

Puli Audio Launch Stills (Set 1) (8)

ஹன்ஸிகா பேச வரும்போது அவரைப் பற்றிய ஒரு வீடியோ படத்தினை வெளியிட்டார்கள். ஹன்ஸிகா மேடையேறி சிரித்தாலே போதும். பேசவே தேவையில்லை என்று சொல்லலாம்.  விஜய்யுடன் நடித்ததில் தனக்கு மிகவும் பெருமையென்றும், இத்தனை ரசிகர்கள் மத்தியில் தான் நிற்பதுகூட தனக்கு பெருமைதான் என்றும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்.

அடுத்து மேடையேறிய இமான் அண்ணாச்சி இந்தப் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றியினைச் சொல்லி ஒரு சின்ன நிகழ்ச்சியை நடத்தினார்.

4 இளைஞர்களை மேடைக்கு அழைத்து அவர்களிடத்தில் விஜய் படத்தின் பாடல்களை பாடச் சொன்னார். தப்பில்லாமல் பாடினார்கள் அந்த ரசிகர்கள். அடுத்து அவர்களிடம் ‘தமிழ்த்தாய் வாழ்த்தினை’ 4 வரிகள் பாடச் சொன்னார். 2 பேர் சரியாகப் பாடினார்கள். 2 பேர் சொதப்பினார்கள். “இப்படியிருந்தா நாடு எப்படிய்யா உருப்படும்..? இதையும் கத்துக்கணும்ல்ல..” என்று அட்வைஸ் செய்து கச்சேரியை முடித்தார்.

Puli Audio Launch Stills (Set 1) (11)

எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, விஜய் ஆரம்பக் காலத்தில் எத்தனை கஷ்டப்பட்டு வளர்ந்தார் என்பதையும், விஜய்யின் கடுமையான உழைப்பு மட்டுமே அவரை இந்த அளவுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்றும்.. விஜய் வாசலில் நின்று ‘வாங்கப்பா’ என்று தன்னை வரவேற்றதை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டு கண் கலங்கினார்.

பி.டி.செல்வகுமார் தன்னிடம் உதவி இயக்குநராக வேலை பார்க்க வந்து பின்பு உதவியாளராகி, பி.ஆர்.ஓ.வாகி இன்னமும் அதே வேலையில் தொடர்வதை குறிப்பிட்டார் எஸ்.ஏ.சி. “பி.டி.செல்வகுமார் இப்போது தயாரிப்பாளராகிவிட்டார். இயக்குநராகிவிட்டார். இப்போதும் என்னிடம் வேலை பார்க்கிறார். ஆனால் நான் ரொம்ப நாளைக்கு முன்பாகவே அவரை போகச் சொன்னேன். ‘நான் வேற பி.ஆர்.ஓ.வை வைச்சுக்கிறேன். நீங்க இப்போ இயக்குநராயிட்டீங்க. நல்லாயிருக்காது…’ என்றெல்லாம் பேசிப் பார்த்தேன். செல்வக்குமார் அதை மறுத்து இன்றுவரையிலும் பிடிவாதமாக என்னிடத்திலும், தம்பி விஜய்யிடத்திலும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார். அதற்கான நன்றியாகத்தான் தம்பி விஜய் இந்தப் படத்தை தயாரிக்கும் வாய்ப்பை அவருக்கு வழங்கியிருக்கிறார்..” என்றார் எஸ்.ஏ.சந்திரசேகர்.

நடிகர் தம்பி ராமையா பேசும்போது முதலில் ‘புலி’ படத்தைப் பற்றி விரிவாகவே பேசினார். “இந்தப் படம் முன் ஜென்மக் கதை அல்ல. ராஜா ராணி கதையும் இல்லை. டைம் மிஷின் கதையும் இல்லை. இதையெல்லாம் தாண்டிய இன்னொரு டைப் கதை. சூப்பர்மேன் கதை. இயக்குநர் சிம்புதேவன் அற்புதமாக இந்தக் கதையை எழுதியிருக்கிறார். இதில் நடிக்க எனக்கு வாய்ப்புக் கொடுத்தமைக்காக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்..” என்றார்.

அடுத்த டாப்பிக்காக இவர் பேசியதுதான் ஹைலைட். இப்போதைய தமிழகத்து இளைஞர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருப்பது பற்றி தனது கவலையையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டார். “சேகுவேராவை கொண்டாடும் நாம் திருப்பூர் குமரனையும், கட்டபொம்மனையும் பற்றி பேச மறுக்கிறோம்..” என்ற ரீதியில் பல உதாரணங்களைச் சொல்லி வருத்தப்பட்டுக் கொண்டார்.  

இசையமைப்பாளர் டி.எஸ்.பி. என்னும் தேவிஸ்ரீபிரசாத்தை பற்றி ஒரு அறிமுக வீடியோவை திரையிட்டார்கள். அதில் தெறித்த இசையை மொத்தக் கூட்டமும் ரசித்துக் கேட்டது. அது முடிந்தவுடன் விஜய் அதை திரும்பவும் திரையிடும்படி சைகை காட்ட.. அவருக்காகவே திரும்பவும் காண்பிக்கப்பட்டது.

பின்பு இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தை மேடைக்கு அழைத்தார்கள். அவர் மேடையேறி மைக்கை பிடித்து பேசத் துவங்குவதற்குள் நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டு, ரசிகர்களின் பலத்த கரகோஷத்தோடு அண்ணன் டி.ராஜேந்தர் மேடையேறினார்.

அடுத்த 22 நிமிடங்களுக்கு அந்த அரங்கமே அதிர்ந்த்து. தன்னுடைய தமிழ்ப் புலமையில் ‘புலி’யை அக்குவேறு, ஆணிவேறாக அலசி ஆராய்ந்து புகழ்ந்து தள்ளிவிட்டார். முதல்  பொழிவுரையைக் கேட்டவுடனேயே தாங்க முடியாத பாராட்டில் விஜய்யே எழுந்து நின்று டி.ஆருக்கு வணக்கம் போட்டு உட்கார்ந்தார்.

vijay-1

ஆனாலும் ரசிகர்களின் அன்புக் கட்டளைக்கிணங்க மேலும் தொடர்ந்தார் டி.ஆர். இந்த முறை எதுகை, மோனையுடன் கூடிய அடுக்கு மொழியில் ‘புலி’ என்ற டைட்டிலை வைத்தே டி.ஆர். தமிழை அள்ளிவிட.. தாங்க முடியாத அளவுக்கு கூட்டம் ஆர்ப்பரித்த்து.

டி.ராஜேந்தர் தன் பேச்சில், “நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணம் ஒன்றே ஒன்றுதான். ஒரு நடிகன் வளர்ந்துவிட்ட பிறகு தன்னடக்கத்துடன் இருப்பது ரொம்ப கஷ்டம்.

எஸ்.ஏ.சி அவர்களும் நானும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான். நான் என்னை கண்ணாடியில் பார்க்கும்போது அவரை பார்ப்பது போன்றே நினைத்துக் கொள்வேன். அவர் ஒரு நல்ல மனிதர். நல்ல தந்தை, நல்ல இயக்குநர் அவருடைய மகன் விஜய் அவர்களை எப்படி அவர் படிப்படியாக உயர்த்தி கொண்டு வந்தாரோ அதைப் பார்த்து நான் பெருமைபட்டவன். அது ஏன் என்று கேட்டால், அவரை போலவே என் மகன் சிம்புவையும் உருவாக்கி வருகிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

எனக்கு விஜய்யை மிகவும் பிடிக்கும், அது ஏன் என்று எனக்கு தெரியாது. எஸ்.ஏ.சி அவர்களும் அவருடைய மனைவி ஷோபா அவர்களும் நானும் மலேசியாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். அப்போது அவர்களிடையே நான் பழகும்போது அவர்கள் குடும்பத்தில் ஒருவனாகவே நான் பழகிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் பல விஷயங்களை பேசினோம். 

அதையெல்லாம் அவர்கள் விஜய்யிடம் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது. ஆனால் இன்றைக்கு தம்பி சிம்புவின் படத்திற்கு ஒரு தடை என்றவுடன் ஓடோடி வந்த விஜய்.. இன்னொரு ஹீரோவின் படத்திற்கு வேறு எந்த ஹீரோவும் செய்யாத ஒரு செயலாக அந்தப் படம் திரைக்கு வருவதற்கான உத்தரவாதத்தையும், வழிகளையும் செய்து கொடுத்தார். அதை சிம்புவும், நானும் நிச்சயமாக மறக்கவே மாட்டோம்.

விஜய் இவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்துவிட்ட பிறகும் அவர் என்னுடைய ரசிகர் என்று கேள்விப்பட்டபோது எனக்கு சந்தோஷமாக இருந்தது. தலைவா படப்பிரச்சனையின்போது சிம்பு அவரது ட்விட்டர் பக்கத்தில் ‘விஜய் அண்ணா நான் உங்களுக்கு பின்னே துணையாக இருப்பேன்’ என்று பல வருடங்களுக்கு முன் ஒரே ஒரு ட்வீட் செய்திருந்தான், அதை மனதில் வைத்துக் கொண்டு தற்போது சிம்புவின் வாலு படப் பிரச்சனையை தீர்த்து வைத்திருக்கிறார் விஜய். சிம்பு இன்னொருவரின் ரசிகனாக இருக்கலாம். இருந்தாலும் விஜய்க்கு, சிம்பு நண்பன் மட்டுமல்ல தம்பியும்கூட..” என்றார்.

டிஆரின் பேச்சில், “என் மகன் வேறொருவருக்கு ரசிகனாக இருந்தபோதிலும்..” என்ற வார்த்தையை உச்சரித்தவுடன் பல ரசிகர்கள் எழுந்து முன்னால் ஓடி வந்து கத்திக் குவித்தார்கள்.

vijay-tr

இதன் பின்பும் டிஆரின் அடுக்கு மொழி பாராட்டு தொடர… இந்த தமிழ்த் தாக்குதலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விஜய்யே எழுந்து மேடைக்கு ஓடிப் போய் டி.ஆரைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். அப்படியும்விடாமல் தனது தமிழ்ப் புலமையைக் காட்டிவிட்டுத்தான் ஓய்ந்தார் டி.ஆர்.  அங்கேயே டி.ராஜேந்தருக்கு சால்வை போர்த்தி வணங்கி கெளரவித்தார் விஜய். ஒரு புயலடித்து ஓய்ந்ததுபோல இருந்தது டிஆர் மேடையைவிட்டு இறங்கியபோது..!

தொடர்ந்து மேடையேறிய நடிகர் விஜய் சேதுபதி, “டி.ஆரின் பேசுனதுக்கப்புறம் நானெல்லாம் என்ன பேசுறது..? விஜய்யின் இந்த ‘புலி’ படத்தை அவரது ரசிகர்களை போலவே நானும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். படம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்..” என்று சுருக்கமாகச் சொல்லி முடித்துக் கொண்டார்.

Puli Audio Launch Stills (Set 1) (14)

அடுத்து மேடையேறிய நடிகை ஸ்ருதிஹாசன் ஏனோ வந்ததில் இருந்தே முக வாட்டமாகவே இருந்தார். மேடையிலும் அப்படியேதான் காணப்பட்டார். “விஜய் ஸார் ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுவார்ன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் நல்லா பாடுவாருன்னு தெரியாது. இந்தப் படத்துல அவர்கூட நான் பாடியது எனக்கு சந்தோஷம்..” என்று பட்டென்று முடித்துக் கொண்டார்.

அடுத்து நடிகர் ஜீவா மேடைக்கு வந்தவர். வந்தவேகத்தில் ‘மச்சி குவார்ட்டர் சொல்லு’ என்று ரசிகர்கள் குரல் எழுப்ப.. “ஐயையோ.. வேண்டாம்பா.. எங்க போனாலும் அதையே பேசுறாங்க. இனிமே அதைப் பத்தியே பேச மாட்டேன்..” என்று சொல்லிவிட்டு ‘புலி’ டாப்பிக்கிற்கு வந்தார்.

Puli Audio Launch Stills (Set 1) (17)

‘நண்பன்’ பட நேரத்தில் விஜய் தன்னிடம் நெருக்கமாக ஈகோ இல்லாமல் பழகியதை குறிப்பிட்ட ஜீவா இப்போதும் விஜய்க்கு தான் அன்புத் தம்பியாக இருப்பதாக சொன்னார். கடைசியாக ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். இங்க சினிமாவுலகத்துல எல்லாரும் அண்ணன், தம்பியாகத்தான் பழகிட்டிருக்கோம். நீங்க இணையத்துல எந்த வகையிலும் சண்டை போட்டுக்காதீங்க.. அது நல்லாயில்ல..” என்று அட்வைஸ் செய்துவிட்டுப் போனார்.

IMG-20150802-WA0049

பலத்த எதிர்பார்ப்போடு மேடைக்கு வந்த ஸ்ரீதேவி ரொம்பவே ஏமாற்றத்தை கொடுத்தார். “நான் ரொம்ப வருஷம் கழிச்சு தமிழ்ல நடிச்சிருக்கேன். தமிழில் திரும்ப வரும்போது ஒரு நல்ல, பெரிய படத்துல இருக்கணும்னு நினைச்சேன். அதுக்கு இந்தப் படம் நல்ல வாய்ப்பா கிடைச்சது. நான்தான் நடிக்கணும்னு நினைச்ச இயக்குநருக்கு என் நன்றி. இந்தப் படத்தின் ஷீட்டிங்கின்போது விஜய்யின் எளிமையைப் பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன்.. படம் நிச்சயம் வெற்றி பெறும்..” என்று மிகச் சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

தன் பேச்சை முடித்த கையோடு மைக்கை வாங்குவதற்காக அருகில் வந்த மேடை உதவியாளினியிடம் ஏதோ சொன்னார் ஸ்ரீதேவி. உடனேயே அந்தப் பெண்ணும் ஸ்ரீதேவியுடனேயே மேடையில் இருந்து கீழேயிறங்க.. அந்தப் பெண்ணின் கையைப் பிடித்தபடியே பக்குவமாக படிகளில் பார்த்துப் பார்த்து கால் வைத்து இறங்கினார் ஸ்ரீதேவி. எல்லாம் ஒரு பயம்தான்..!

கவிப்பேரரசு வைரமுத்து பேசும்போது இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தை வாயார வாழ்த்தினார். “தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எல்.ஜி.கிட்டப்பா, கே.ஆர்.ராமசாமி போன்றோர்தான் இதுவரையில் தாங்கள் நடித்த பாடல் காட்சிகளுக்கு தாங்களே பாடியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்றைக்கு ‘இளைய தளபதி’ விஜய்யும் தன்னுடைய பாடல் காட்சிக்கு தானே பாடியிருக்கிறார். இது தமிழ்ச் சினிமாவில் ஒரு சாதனை..” என்று பாராட்டினார்.

அன்றைய தினம் பிறந்த நாளை கொண்டாடிய இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் மிக மிக உற்சாகத்துடன் மேடையேறியவர் படத்தின் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடினார்.

IMG-20150802-WA0053

தன் பேச்சின்போது, “திடீரென்று என்னை சந்திக்க வந்த இயக்குநர் சிம்புதேவன் ‘ஒரு படத்துக்கு நீங்கதான் மியூசிக் போடணும்’ என்று சொல்லி கதையைச் சொன்னார். கடைசியாகத்தான் ‘யார் ஹீரோ’ன்னு கேட்டேன். ரொம்ப சிம்பிளா ‘விஜய் ஸாரு’ன்னு சொன்னார்.. எனக்கே இனிய அதிர்ச்சி. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுவிட்டு விஜய் ஸார் என்னைப் பாராட்டியதும் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது..” என்றார்.

இயக்குநர் சிம்புதேவனும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் நிகழ்ச்சியை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காகவே குறைவாகவே பேசினார். தனது உதவி இயக்குநர்களை மேடையேற்றி கெளரவப்படுத்தினார். இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டதற்கு விஜய்க்கு நன்றி தெரிவித்தார். ‘கத்தி’ பட சமயத்திலேயே விஜய்யை சந்தித்து தான் இந்தக் கதையை சொல்லியிருந்ததை நினைவு கூர்ந்தார். “இளைய தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு முற்றிலும், எதிர்பார்க்காத ஒரு புதுமையான அனுபவத்தை நிச்சயம் இந்தப் படம் கொடுக்கும்..” என்று உறுதியுடன் கூறினார் சிம்புதேவன்.

கடைசியாக மேடையேறிய நடிகர் விஜய் அதுவரையில் தொகுப்பாளர்களாக இருந்த அஞ்சனா, பிரேம் இருவரிடமும் கை குலுக்கி அவர்களை பாராட்டி அனுப்பிவிட்டு அதே மைக்கில் இடம் பிடித்தார். பேச்சை ஆரம்பித்த நிமிடம் முதல் கைதட்டல்கள் அதிர வைத்தது அரங்கத்தை.. !!

IMG-20150802-WA0061

விஜய் பேசும்போது, “ரொம்ப நாளாகவே எனக்கு ஒரு சரித்திர படத்தில் நடிக்கணும்னு ஆசை இருந்துட்டேயிருந்துச்சு… அந்த நேரத்துல இயக்குநர் சிம்புதேவன் என்கிட்ட இந்த கதையை கொண்டு வந்தாரு, இந்தப் படத்தில் மிக முக்கியமானவர்களெல்லாம் நடிச்சிருக்காங்க. என்கூட இரண்டு பெண் புலிகளும் நடிச்சிருக்காங்க.

ஒருத்தங்க.. ‘புலிக்குப் பிறந்தது பூனையாகுமா’ என்பதற்கு எடுத்துக்காட்டாக இங்கேயிருக்கும் ஸ்ருதிஹாசன்.. மும்பையில் இருந்து நமக்குக் கிடைத்திருக்கும் இரண்டாவது குஷ்பு ஹன்ஸிகா.. அப்புறம் படத்துல ஒரு சின்ன கேரக்டர்தான். ஆனால் முக்கியமான கேரக்டர். இதுல நடிச்ச நந்திதாவை ரொம்பவே பாராட்டணும்.

ஒரு அருமையான கேரக்டர்ல.. நல்ல, அழகான, போல்டான தனது நடிப்பால இந்தியாவையே கட்டிப் போட்ட நம்ம ஊர் சிவகாசி பட்டாசு ஸ்ரீதேவி மேடம்..

இன்னைக்கு இருக்குற ஹிரோக்களிடம் அண்ணனாக பழகிக் கொண்டிருப்பவர் பிரபு சார்.. அதேமாதிரி ஒரு ஹிரோ இன்னொரு ஹிரோ படத்துல வில்லனாக நடிக்க ஒத்துக் கொள்ள மாட்டார்கள் ஆனா கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப் சார் இதுக்கு ஒத்துக்கிட்டாரு… அவருடைய பெருந்தன்மைக்கு என்னுடைய நன்றி.  மேலும் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், இமான் அண்ணாச்சின்னு ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளம் சேர்ந்தது இந்தப் படம்.

’23-ம் புலிகேசி’ படத்துல நம்மையெல்லாம் சிரிக்க வைத்த இயக்குநர் சிம்புதேவனின் டீம் இந்த புதிய முயற்சில ஈடுபட்டு நம்மையெல்லாம் ஜெயிக்க வைக்கணும்னு வந்திருக்காங்க. இந்தியாலேயே மிகப் பெரிய ஒளிப்பதிவாளர் நட்டி ஸார்.. அவரே ஹீரோவா ‘சதுரங்க வேட்டை’ ஆடினாரு, இப்ப இதுல கேமரா மூலமாக புலி வேட்டை ஆடியிருக்கிறார்.

அடுத்து ஒருத்தரை பற்றி நான் சொல்லியே ஆகனும், அவரை நான் சந்திக்கும்போதெல்லாம் எப்பவுமே ஒரு எனர்ஜி அவர்கிட்ட தெரியும், அதை பார்த்து நான் வியந்திருக்கிறேன். இப்ப இந்த படத்துல தாரை தப்பட்டையெல்லாம் வச்சு ‘புலி’யை விரட்டுவாங்க, ஆனா இப்ப தாரை தப்பட்டையெல்லாம் வைத்து ‘புலி’யை ஆட வச்சிருக்காரு தேவிஸ்ரீபிரசாத்.. அவருக்கு என் நன்றி மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகள்..

பொதுவா பெரிய தொழிலதிபர்களெல்லாம் வருஷா வருஷம் இடம் மாறிக்கிட்டேயிருப்பாங்க. யார் லிஸ்ட்ல பர்ஸ்ட்டுன்னு.. ஆனா இப்போவரைக்கும் முதலிடத்திலேயே இருக்கார் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். கலை இயக்குநர் முத்தையா பிரம்மாண்டமான அரண்மனை செட்டுக்களை அழகா போட்டுக் கொடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் மொத்த பிரம்மாண்டத்திற்கும் முக்கியக் காரணம் என் தயாரிப்பாளர்கள் ஷிபுவும், செல்வக்குமாரும். இந்தப் படத்துல இன்னும் இரண்டு ஹீரோக்களும் இருக்காங்க. ஒருத்தர் இந்தப் படத்துக்காக கிராபிக்ஸ் வேலையெல்லாம் செய்திருக்கும் கமலக்கண்ணன். இன்னொருத்தர் படத்தோட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத். அவருக்குள்ள ஒரு இயக்குநரும் இருக்கார்.

பொதுவாக பரீட்சை எழுதுறவங்க அதிகமாவும், மார்க் போடுறவங்க கம்மியாவும்தான் இருப்பாங்க. ஆனால் இங்க பரீட்சை எழுதறவங்க கம்மியாவும், மார்க் போடுறவங்க அதிகமாவும் இருக்காங்க. இந்தப் படத்துக்கு எத்தனை மார்க்குன்னு பரீட்சை எழுதின நாங்க சொல்லக் கூடாது. மார்க் போடுற நீங்கதான் சொல்லணும். படத்தைப் பார்த்திட்டு சொல்லுங்க. தியேட்டர்ல..!

தயாரிப்பாளர் நிறைய செலவு பண்ணி படத்தைத் தயாரிச்சு கொண்டு வர்றாங்க. ஆனால் சில பேர் திருட்டுத்தனமா போன்ல எடுத்து நெட்ல போடுறாங்க. இதுனால என்ன கிடைக்குதுன்னு தெரியலை. ஒரு தயாரிப்பாளர் நிறைய பிளான் பண்ணி.. எந்த டைம் ஷூட் செய்யணும். எந்த டைம் ரிலீஸ் செய்யணும்… இப்பத்தான் என்னென்னமோ சொல்றாங்களே.. பர்ஸ்ட் லுக்.. செகண்ட் லுக்.. டீஸர்.. டிரெயிலர்ன்னு நிறைய இருக்குன்னு சொல்றாங்க.

இதுல நான் என்ன சொல்றேன்னா.. இது மாதிரி தயாரிப்பாளர் கஷ்டப்பட்டு தயாரிக்குற படத்தை இவங்க திருட்டுத்தனமா ரிலீஸ் செஞ்சு ஒரு குழப்பு குழப்பி, இதுனால இவங்க என்னத்த சாதிக்கிறாங்க.. ஜெயிக்கிறாங்கன்னு தெரியலை. இது அம்மா வயித்துல ஆரோக்கியமா வளர்ற குழந்தையை சிசேரியன் பண்ணி கொலை பண்ற மாதிரியிருக்கு. நான் எனக்காக மட்டும் பேசலை. எல்லா தயாரிப்பாளர்களுக்கும் சேர்த்துதான் பேசுறேன்.

எனக்கு உண்மையா வெறுக்க தெரியும். ஆனா பொய்யா நேசிக்க தெரியாது. நமக்கு முதுகுக்கு பின்னாடி பேசுறவங்களை பத்தி நாம கவலைப்படவே கூடாதுங்க. உயிரோட இருக்குறவரைக்கும் அடுத்தவங்களுக்கு தீமை செய்யாமல் இருந்தாலே போதும்,

எல்லாரும் சொல்வாங்க.. ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஆணோ, பெண்ணோ இருப்பாங்கன்னு. ஆனா என்னோட வெற்றிக்குப் பின்னால நிறைய அவமானங்கள்தான் இருக்கு.

பில்கேட்ஸ் பத்தி நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். சின்ன வயசுல.. அவரோட ஸ்கூல் டைம்ல.. நிறைய பேர்.. அவரைப் பத்தி குத்தம் சொல்லிக்கிட்டே.. குத்திக் காட்டிக்கிட்டேயிருப்பாங்களாம். அவர் தன்னோட குறைகளை சரி பண்ணிக்கிட்டேயிருப்பாராம். இன்னிக்கு உலகத்துலேயே மிகப் பெரிய தொழிலதிபரா இருக்கார் பில்கேட்ஸ். அவரைக் குத்தம் சொன்னவங்கள்லாம் இப்போ அவரோட கம்பெனில ஊழியர்களா வேலை பார்க்குறாங்களாம். ‘அப்போ நீ பில்கேட்ஸா?’ன்னு கேக்குறீங்க. அதான.. நான் பில்கேட்ஸ் இல்லங்க.. ச்சும்மா ஒரு தகவல் நம்ம காதுக்கு வந்துச்சு. நல்ல நியூஸா இருந்துச்சு. ஷேர் பண்ணிக்கலாமேன்னு நினைச்சேன். அவ்ளோதான். இதை இங்கேயே மறந்து விட்ரணும்.. ஏன்னா நமக்கும் நாலு நல்ல விஷயம் தெரியும்ன்றது எல்லாருக்கும் தெரியணும்ல்ல.

இப்போதைய இளைஞர்கள் எல்லாத்துலேயும் அக்கறையில்லாமல் இருப்பதாக ஒரு சின்னக் குற்றச்சாட்டு இருக்கு. இதை நான் ஒத்துக்க மாட்டேன். அது எல்லா விஷயத்திலேயும்.. கிரிக்கெட் முதற்கொண்டு.. இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச் மாதிரி.. நாம விளையாட்டா எடுத்துக்க வேண்டிய மேட்டரை சீரியஸா எடுத்துக்குறோம். சீரியஸா எடுத்துக்க வேண்டிய மேட்டரை விளையாட்டாகூட எடுத்துக்க மாட்டேன்றோம்.

இந்த நேரத்துல ஒண்ணு ஞாபகம் வருது. ‘பல்லாண்டு வாழ்க’ன்னு ஒரு படம். எம்.ஜி.ஆர். அவர்கள் நடிச்ச படம். அந்தப் படத்தோட கதை என்னன்னா கொடூரமான கொலை கைதிகளை திருத்தறதுதான். அந்தப் படத்துல ஒரு சீன் வரும். சில கல்லூரி மாணவர்கள் பேசிக்கிட்டே போவாங்க.. இதெல்லாம் நடக்குற காரியமில்லை.. யாரையும் திருத்த முடியாதுன்னு சொல்வாங்க. அப்போ எம்.ஜி.ஆர். ஒரு பேப்பர்ல ஒரு முகத்தை வரைஞ்சு, இன்னொரு பக்கம் இந்தியா மேப்பையும் வரைஞ்சு அந்த பேப்பரை கிழிச்சு கீழ போடுவாரு.

அந்த மாணவர்களை அழைத்து அந்தப் பேப்பர்ல இந்தியாவோட மேப்பை அமைக்கச்  சொல்வாரு.. அவங்க செஞ்சு பார்த்துட்டு வரலைன்னு சொல்வாங்க. அந்த மனுஷனோட முகத்தை ஒண்ணா சேருங்கன்னு சொல்வாரு. கண்ணு, காது, மூக்கு, வாய்ன்னு அதை அவங்க ஒண்ணா சேர்ப்பாங்க. இப்போ என்ன வருதுன்னு பாருங்கம்பாரு. இப்போ பேப்பர்ல இந்தியா மேப் இருக்கும். அப்போ அவர் சொல்வாரு.. ‘ஒரு மனுஷனை திருத்தினாலே இந்தியா மேப்பே சரியாகுது. இதே மாதிரி ஒவ்வொரு மனுஷனும் திருந்தினா இந்தியாவே திருந்திரும்’பாரு..

நான் ஏன் இதை இங்க வந்து பேசுறேன்னே எனக்கே தெரியலை.  இந்த படம், இந்தக் கதை, இந்த சீன், இந்த டயலாக் ரொம்ப நாளா மனசுல இருந்துச்சு. இதை உங்தகிட்ட ஷேர் செய்யணும்னு தோணுச்சு. அதான் சொன்னேன்.

கடவுள் முன்னாடி மண்டி போட்டா யார் முன்னாலும் எழுந்து நிற்கலாம். நமக்குத்தான் எல்லாம் தெரியும். மற்றவர்களுக்கு ஏதுவும் தெரியாதுன்னு மட்டும் நினைச்சிடாதீங்க. நமக்கு சொல்லித் தருவதே மற்றவர்கள்தான்.

வாழ்க்கைல அடுத்த நிமிஷம் நிச்சயமில்லாம இருக்கும்போது இந்த வாழ்க்கை நமக்கு இருக்குறவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவி செய்யணும். எனக்கும், என் ரசிகர்களுக்கும் மற்றவர்களை வாழ வச்சு, அழகு பார்க்குறதுதான் பிடிக்கும்.. என்ன நண்பா நான் சொல்றது சரியா…? இந்த விழாவுக்கு இவ்வளவு தூரம் வந்து வாழ்த்திய அனைவருக்கும்.. முக்கியமாக டி.ஆர். சாருக்கும் என் நன்றி. வணக்கம்.” என்று சொல்லி முடித்தபோது ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டோடியிருந்தது.

இளைய தளபதி விஜய் தனது ரசிகர்களை ‘எதற்கோ’ தயார் செய்கிறார் என்பது மட்டும் அவரது பேச்சில் இருந்து தெரிகிறது.

முடிவில் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடைபெற்றது. இசையை விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் வெளியிட.. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தின் பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. மேடையில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கேக்கினை தேவிஸ்ரீபிரசாத் வெட்ட.. அதை அவருக்கு ஊட்டி பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார் இளைய தளபதி விஜய்.

இதைச் செய்த அடுத்த நொடியில் மேடையில் இருந்து காணாமல் போனார் விஜய். வந்திருந்த ரசிகர்களிடம் சிக்கினால் அதோ கதிதான் என்பதை உணர்ந்து அவரை பத்திரமாக மறைத்து வைத்து உடனேயே ரகசியமான முறையில் வெளியில் அனுப்பினார்கள் பாதுகாவலர்கள்.

வந்திருந்த ரசிகர்கள் பட்டாளம் நட்சத்திரங்களை சூழ்ந்து கொள்ள நூற்றுக்கணக்கான செல்போன் கேமிராக்களின் பிளாஷ் வெளிச்சம் அந்த மண்டபத்திலும், வெளியிலும் தொடர்ந்து பரவிக் கொண்டேயிருந்தது.

தனது நீண்ட நெடிய திரையுலகப் பயணத்தில் பல இனிப்பான அனுபவங்களுடன், கசப்புகளையும் சேர்ந்தே சுவைத்திருப்பதால் விஜய் தனது ஒவ்வொரு ஸ்டெப்பையும் இனிமேல் கவனமாக எடுத்து வைப்பார் என்றே தெரிகிறது. அது இன்றைய விழாவிலும் தெரிந்தது..!

‘புலி’ படம் வெற்றி பெற நாம் மனதார வாழ்த்துகிறோம்..!

Our Score