full screen background image

எந்த அரசியல் பற்றிப் பேச வருகிறது ‘பப்ளிக்’ திரைப்படம்..?

எந்த அரசியல் பற்றிப் பேச வருகிறது ‘பப்ளிக்’ திரைப்படம்..?

கே.கே.ஆர் சினிமாஸ் தயாரிக்க, ரா.பரமன் இயக்கத்தில்  சமுத்திரக்கனி,  காளி வெங்கட், ரித்திகா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பப்ளிக்’.

விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள், முன்னோட்டங்கள் அனைத்தும் திரைப்படத் துறையினர் மட்டுமன்றி ரசிகர்களின்  கவனத்தையும் ஈர்த்து வருவதுடன். இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் மூன்றாவது முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

சிங்காரவேலர், ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாச பண்டிதர், நடேசனார், கக்கன், சத்தியமூர்த்தி, பாரதிதாசன், இளையபெருமாள், பட்டுகோட்டைஅழகிரி, ஜீவா, நெடுஞ்செழியன், மூக்கையா தேவர், ராமமூர்த்தி, அன்னிபெசன்ட் அம்மையார், காயிதே மில்லத் படங்களை வைத்து வெளியிட்ட பாஸ்ட் லுக்  போஸ்டர்  பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் பெரியார் படம் புறக்கணிக்கப்பட்டது குறித்து பெரும் விவாதம் எழுந்தது.

சமுக ஊடகங்களில் இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இது குறித்து படத்தின் இயக்குநர் பரமன் கொடுத்த பேட்டி பலரின் பாராட்டையும் பெற்றது.

அதற்கு அடுத்து வெளி வந்த முன்னோட்டத்தில் மாடே மாடே’ என்று மாட்டை வைத்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை நக்கல் செய்யும் காட்சி புதுமையான, நையாண்டித்தனமாகவும், அதே நேரத்தில் அரசியல் விழிப்புணர்வினை ஏற்படுத்தும்விதமாக இருந்தது.

அடுத்தாக வெளி வந்த 2-வது முன்னோட்டத்தில் போஸ்டரில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரைப்போல வேடமிட்டவர்கள், ஒரு டீ கடை அருகில் அமர்ந்திருப்பதைப் போன்ற போஸ்டரும் கவனத்தை ஈர்த்தது.

இந்த வீடியோவில் அரசியல் தலைவர் ஒருவர், தமிழே அறியாத ஒரு பெண்ணுக்கு தனது கட்சிப் பெயரை சொல்லித் தருவது போலவும், ‘கட்சிப் பெயரே சொல்ல வரலை.. எப்படி சீட் வாங்கித் தருவது’ என்று கேட்பது போலவும் காட்சிகள் இருக்க.. இதுவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை தொடந்து தற்போது வெளியாகியுள்ள 3-வது முன்னோட்ட போஸ்டரில் எம்.ஜி.ஆர் படம், அ.தி.மு.க. கொடி போன்று வரையப்பட்ட சுவத்துக்கு கீழே ரித்திகா சோகமாக உட்காந்து இருப்பது போன்று போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க. கொடி என்று இந்த போஸ்டரில் உள்ள குறியீடுகளை பார்க்கும் போது அடுத்த  தர்ம யுத்தமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

3-வது முன்னோட்ட வீடியோவில் திருக்குறளை எழுதியது திருவள்ளுவரா என்று இலக்கிய அணி பொறுப்புக்கு வரும் ஒருவர் கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இது இன்றைய அரசியல் நிலையை காட்டுவதுபோல் அமைந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

வித்தியாசமான போஸ்டர்கள், முன்னோட்ட வீடியோக்கள் மூலம் கவனம் பெற்று வரும் இந்த பப்ளிக்’ படம், என்ன சொல்ல வருகிறது. எந்த அரசியலை பேசப் போகிறது  என்கிற எதிர்பார்ப்பை தமிழ்த் திரையுலகத்தில் அதிகரிக்கச் செய்துள்ளது.

Our Score