சினிமா தயாரிப்பு, வெளியீட்டை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிடுகிறது..!

சினிமா தயாரிப்பு, வெளியீட்டை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் திட்டமிடுகிறது..!

சினிமா படப்பிடிப்பு, வெளியீட்டை 3 மாதங்கள் நிறுத்தி வைப்பது பற்றி தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக இன்னும் 2 வாரங்களுக்குள் அனைத்து சங்கங்களுடன் பேசி முடிவு எடுக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2015–ம் ஆண்டிற்கான முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு, சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமை தாங்கினார். செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் கதிரேஷன், பி.எல்.தேனப்பன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். முன்னாள் தலைவர்கள் இப்ராஹிம் ராவுத்தர், கே.முரளிதரன் உள்பட ஏராளமான தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

பொதுக்குழு கூட்டம் முடிந்த பின், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கலைப்புலி எஸ்.தாணு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

“திரைப்பட தயாரிப்பு தொழில் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் சினிமா தயாரிப்பு தொழிலில் 95 சதவீத தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. திருட்டு வி.சி.டி., பட தயாரிப்பு செலவு போன்ற பிரச்சினைகளால் தயாரிப்பாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிறார்கள்.

தயாரிப்பு செலவை குறைப்பது பற்றியும், பட வெளியீடுகளை நெறிமுறைப்படுத்துவது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பட தயாரிப்பு, படப்பிடிப்பு, பட வெளியீடு உள்ளிட்ட ஒட்டு மொத்த திரைப்படப் பணிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டார்கள். ‘6 மாதங்களுக்கு பதில் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு சினிமா தொழிலை நிறுத்தி வைக்கலாம் என்றும் சிலர் யோசனை தெரிவித்தார்கள்.

இது பற்றி தயாரிப்பாளர்கள் சங்கம் தன்னிச்சையாக, உடனடியாக முடிவு செய்ய முடியாது. சினிமா தொழிலில் உள்ள அனைத்து சங்கங்களுடனும் கலந்து பேசி முடிவு எடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கு 2 வார கால அவகாசம் வேண்டும்.

இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் இன்று  சென்னையில் நடக்கிறது. அதில், பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து சங்க பிரதிநிதிகளையும் அழைத்து பேசி நாங்கள் முடிவு செய்ய இருக்கிறோம்..” என்றார் தாணு.

மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக இசையமைப்பாளர் இளையராஜா தமிழகத்தின் 10 ஊர்களில் இசை நிகழ்ச்சி நடத்தி தர சம்மதித்தற்கு பொதுக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

Our Score