‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’!

‘சவரக்கத்தி’ இயக்குநர் ஆதித்யாவின் புதிய திரைப்படம் ‘பிதா’!

எக்ஸெட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த படத் தயாரிப்பாளர் மதியழகன் நடிகராக அறிமுகமாகிறார் என்ற செய்தியைத் தொடர்ந்து அவரைத் தேடி பல புதிய படவாய்ப்புகள் வரத் தொடங்கிவிட்டன.

தன்னுடைய தயாரிப்பில், அருண் விஜய் பிரதான வேடத்தில் நடிக்கும் ‘பாக்ஸர்’ படத்தில் எதிர்மறை வேடத்தில் அறிமுகமாகிறார் மதியழகன்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் செய்தியைத் தொடர்ந்து தற்போது, ‘சவரக்கத்தி’ படத்தில் இயக்குநராக அறிமுகமான ஆதித்யாவின் ‘பிதா’ படத்தில் எதிர்மறை வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மதியழகன்.

இயக்குநர் மிஷ்கின், ஸ்ரீகிரீன் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சரவணன் ஆகிய இருவரும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன்ஸ்  நிறுவனத்துடன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மதியழகனைத் தவிர நடிகர்கள் கலையரசன், ஆர்.ஜே.ரமேஷ் திலக், அனு கீர்த்திவாஸ், ராதாரவி ஆகியோருடன் வேறு சில முக்கிய நடிகர்களும் நடிக்கவிருக்கின்றனர்.

பிரபல நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்த பிரசன்ன குமார் ‘பிதா’ படத்தின் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இதுவொரு தந்தைக்கும், மகளுக்குமான உறவை மையமாகக் கொண்டு உருவாகும் த்ரில்லர் வகைப் படமாகும். காணாமல்போன தன் மகளை எப்பாடுபட்டேனும் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று தீவிரமாகத் தேடும் ஒரு தந்தையின் வலியை பதிவு செய்யும் படமாக இது உருவாகிறது.

இந்தப் படத்தின் பூஜை நிகழ்வு இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் பங்கு கொண்டனர்.

Our Score