படங்களை திரையிடும் QUBE மற்றும் UFO டிஜிட்டல் நிறுவனங்களின் தன்னிச்சையான கட்டண உயர்வை கண்டித்து, தமிழ் திரையுலகம் சார்பில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு கூறியிருக்கிறார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில், “QUBE மற்றும் UFO ஆகிய டிஜிட்டல் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சேவை வரியினை தாங்களே செலுத்துவதாகக் கூறி தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்கிறார்கள். ஆனால், அந்த தொகையை அரசுக்கு செலுத்துகிறார்களா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியவில்லை.
மேலும் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களை திரையிடும்போது, அந்தந்த தயாரிப்பாளர்களிடம் அனுமதி பெறாமல் படத்தின் கூடவே விளம்பர படங்களை வெளியிடுகிறார்கள். இதன் மூலம் ஒரு பெரும் வருவாய் QUBE மற்றும் UFO நிறுவனங்களுக்கும், இன்னொரு பகுதி திரைத்துறை சார்ந்த வேறு ஒரு அமைப்புக்கும் போய்க் கொண்டிருக்கிறது. இதில் இருந்தும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சிறிய தொகை கூட கிடைப்பதில்லை. மேலும் திரைப்படங்களை வெளியிடும்போது, கட்டணமாக ஒரு பெரும் தொகையை வசூலிக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் வேலைக்கான ஊதியத்தை பெற்றுக் கொண்ட பிறகும், தயாரிப்பாளர்களின் லாபத்தை தன்வயப்படுத்தும் செயல்பாடுகளை கண்டித்தும், அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் விதமாகவும் சென்னையில் நேற்று ஊர்வலம் நடத்த ஏற்பாடு செய்திருந்தோம்.
போக்குவரத்து நெரிசல் காரணமாக அனுமதி கிடைக்கவில்லை. அதனால் தற்காலிகமாக அந்த ஊர்வலம் தள்ளிவைக்கப்பட்டது. இதற்கான இடம் மற்றும் முறையான அனுமதி பெற்ற பின், அரசின் ஒப்புதலுடன் ஒட்டு மொத்தத் திரையுலகின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி, இடம், பின்னர் அறிவிக்கப்படும்…” என்று கூறியிருக்கிறார் தாணு.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் பேசும்போது, “தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். அன்று படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். இதற்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து சங்கங்களுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.’’ என்றார்.
பேட்டியின்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணைத் தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் அழகன் தமிழ்மணி, மாதேஷ், விஜயமுரளி, ரிஷிராஜ், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் துணை செயலாளர் கே.ஆர்.செல்வராஜ், டைரக்டர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் விக்ரமன், பொருளாளர் வி.சேகர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பில் அதன் தலைவர் ஜி.சிவா, பொருளாளர் சந்திரன் ஆகியோர் உடன் இருந்தார்கள்.