தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்காக 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒரு படத்தைத் தயாரிக்கப் போவதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.
நேற்று காலை சென்னையில் வடபழனி கமலா திரையரங்கில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் அவர் இதைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எஸ்.தாணு பேசும்போது, “இயக்குநர்கள் சங்க உறுப்பினர்களுக்காக நான் இயக்குநர் சங்கத்துடன் இணைந்து 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாரிக்க தயாராக இருக்கிறேன். இந்தப் படத்தில் எல்லா நடிகர், நடிகைகளும் நடிக்க வேண்டும்.
இதில் கிடைக்கும் லாபத்தை இயக்குநர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கங்களும் பிரித்து எடுத்துக் கொள்ளலாம். இயக்குநர் யார்..? கதை என்ன…? யார் யார் நடிக்கிறார்கள் என்பதை இயக்குநர் சங்கமே முடிவு செய்து கொள்ளலாம்…” என்றார்.

இதன் பின்பு பேச வந்த இயக்குநர் சங்கத் தலைவரான ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “தாணு ஸாரின் இந்த நல்ல திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். முன்னணியில் உள்ள எல்லா நடிகர், நடிகைகளும் பங்கெடுக்கும் வகையில் நல்ல கதையுடன் வரும் இயக்குநர்களுக்கு 50 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.
இந்தப் படத்தில் வரும் லாபம் திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்படும்.
இது தவிர ஆண்டுக்கு 70 துணை இயக்குநர்கள் குறும் படம் எடுக்க வசதி செய்து தரப்படும். திறமையான இயக்குநர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் படம் இயக்க வாய்ப்பு பெற்றுத் தரப்படும். இதற்காக இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு கதைகளை தேர்வு செய்து வருகிறது. முதல் கட்டமாக பத்து படங்களை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனம் தயாரிக்கிறது. அதோடு இனி துணை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுக்கு சங்கம் வழியாக சம்பளம் பெற்றுத் தரப்படும்…” என்று அதிரடியாய் அறிவித்தார்.









