ஒவ்வொரு ஹீரோவுக்கும் அவர்களது திரையுலக பயணத்தில் மைல் கல் என்று சொல்லும்விதமாக ஒரு படம் நிச்சயம் அமைந்துவிடும்.
அப்படி மறைந்த ‘புரட்சி கலைஞர்’, ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களுக்கு மகுடம் சூட்டும் படமாக வெளியான படம்தான் ‘கேப்டன் பிரபாகரன்’.
1991 ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு ரிலீஸாக இந்தப் படம் வெளியானது.
IV சினி புரடக்சன்ஸ் சார்பில் அ.செ. இப்ராஹிம் ராவுத்தர் இந்த படத்தை தயாரித்தார்.
ஒரு படத்திற்கு எல்லாமும் சரியாக அமைந்துவிடும் என்பதுபோல இந்தப் படத்திற்கு இசைக்கு இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு ராஜராஜன், வசனங்களுக்கு லியாகத் அலிகான், வில்லனாக இருந்து ஹீரோவாக புரமோஷன் பெறும்விதமாக சரத்குமார், அறிமுக மிரட்டல் வில்லன் வீரபத்ரன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான், ரூபிணி, ரம்யா கிருஷ்ணன் மற்றும் லிவிங்ஸ்டன் என பலரும் பக்கபலமாக அமைந்ததுடன் இந்தப் படம் மூலம் தங்களது திரையுலக பயணத்தில் திருப்புமுனை பெற்றவர்கள் பலர்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘பாசமுள்ள பாண்டியரே’ என்கிற பாடலும் ‘ஆட்டமா தேரோட்டமா’ என்கிற பாடலும் இன்றைக்கும் ஒவ்வொரு ஊரிலும் திருவிழாக்களிலும் விசேஷ வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் கொண்டாட்ட பாடல்களாக அமைந்து விட்டன.
அது மட்டுமல்ல காட்சிக்கு காட்சி, பின்னணி இசையிலும் மிரட்டி இருந்தார் இசைஞானி. குறிப்பாக புரட்சிக் கலைஞர் விஜயகாந்தின் அறிமுகக் காட்சி, அவர் காடுகளுக்குள் பயணிக்கும் காட்சி, வீரபத்ரன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு என குறிப்பிடத்தக்க பிரத்யேக பின்னணி இசையை படம் முழுக்க கையாண்டு பிரமிக்க வைத்திருந்தார்.
இந்தப் படத்திற்கு கிடைத்த இன்னொரு பலம் ஒளிப்பதிவாளர் ராஜராஜன். தனது ஒளிப்பதிவில் மேற்குத் தொடர்ச்சி மலையை, அதன் அடர்ந்த காடுகளை பிரம்மாண்ட வனப் பரப்புகளை, பிரமிக்க வைக்கும் ரயில் சண்டை காட்சிகளை என எதை பாராட்டுவது என்று திகைத்துப் போகும் அளவிற்கு படம் முழுக்க ஒரு அழகியல் பாடம் எடுத்திருந்தார் என்று சொல்லலாம்,
லியாகத் அலிகானின் அனல் பறக்கும் அரசியல் வசனங்கள், அதை கேப்டன் விஜயகாந்த் பேசும்போதும் சரி, ஒரு அறிமுக நடிகரான மன்சூர் அலிகான் பேசும்போதும் சரி தியேட்டர்களில் ரசிகர்களின் கை தட்டல் பறந்தது. படம் வெளியான சமயத்தில் இந்த வசனங்களுக்காகவே ஆடியோ கேசட்டுகள் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கில் விற்பனை செய்து சாதனை படைத்தது என்பது இன்னொரு வரலாறு.
இந்த படத்தின் சிறப்பே 1990-களில் மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் 2K இளைஞர்கள் பார்த்தாலும்கூட இப்படி ஒரு பிரம்மாண்ட படத்தை எப்படி அப்போது எடுத்தார்கள் என பிரமிக்க வைக்கும்விதமாக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி படத்தை அங்குலம் அங்குலமாக செதுக்கி இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.
கேப்டன் விஜயகாந்த்துக்கு ‘புலன் விசாரணை’ என்கிற சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்த கையோடு தனது இரண்டாவது படமாக, கேப்டனின் 100-வது படமாக இந்தப் படத்தை மிக பிரம்மாண்டமாக இயக்கியிருந்தார் இயக்குநர் ஆர்.கே.செல்வமணி.
பிரம்மாண்டம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என படமாக மட்டும் எடுக்காமல், அவருக்கு பின் வந்த படைப்பாளிகளுக்கு இந்தப் படம் மூலம் ஒரு பாடமே எடுத்திருந்திருந்தார் இயக்குநர் ஆர்கே.செல்வமணி.
இன்று செம்மர கடத்தல் பின்னணியில் உருவான ‘புஷ்பா’ படத்தை கொண்டாடும் இளைஞர் கூட்டம், ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தை பார்த்தால் ‘புஷ்பா’வுக்கு எல்லாம் முன்னோடியாக அப்போதே இப்படி விஜயகாந்த் நடிப்பில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்கிற ஒரு அதிரடி படம் கொடுத்திருக்கிறார்களே என்கிற ஆச்சரியம் காட்சிக்கு காட்சி அவர்களுக்கு ஏற்படும்.
அந்த வகையில் ஆந்திராவுக்கு இப்போது ஒரு ‘புஷ்பா’ என்றால் தமிழ்நாட்டுக்கு அப்போதே ஒரு ‘கேப்டன் பிரபாகரன்’ என அடித்து கூறலாம்.
‘கேப்டன்’ ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்விதமாக அமைந்த படம்தான் ‘கேப்டன் பிரபாகரன்’.
பெரும்பாலான ஹீரோக்களுக்கு அவர்களது நூறாவது படம் வெற்றியை கொடுக்க தவறியபோது கேப்டன் விஜயகாந்த்திற்கு மட்டும் நூறாவது படமாக வெளியாகி மிகப் பெரிய வெற்றியை இந்தப் படம் பெற்றுக் கொடுத்தது.
அது மட்டுமல்ல, காலத்திற்கும் நிலைக்கும்விதமாக ‘கேப்டன்’ என்கிற அடைமொழியையும் சேர்த்து அவருக்கு பரிசளித்தது இந்தக் ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம்.
இந்தப் படம் கொடுத்த வெற்றியின் ஞாபகார்த்தமாகத்தான் தனது மூத்த மகனுக்கு ‘விஜய பிரபாகரன்’ என பெயர் சூட்டி மகிழ்ந்தார் விஜயகாந்த்.
இத்தனை பெருமை வாய்ந்த திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதைக் கொண்டாடும்விதமாக விரைவில் மிகப் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.
பிலிம் விஷன் கம்பெனியின் ராமு இந்தப் படத்தினை 4K தரத்திலும் மற்றும் 7.1 சவுண்ட் மிக்ஸிங் என டிஜிட்டல் முறையில் ரீ மாஸ்டரிங் செய்து கொடுத்துள்ளார்.
4K தரத்திற்கு மாற்றப்பட்டிருக்கும் ‘கேப்டன் பிரபாகரன்’ விரைவில் தமிழகமெங்கும் சுமார் 500 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
முருகன் ஃபிலிம் பேக்டரி மற்றும் ஸ்பேரோ சினிமாஸ் (Sparrow Cinemas) சார்பாக கார்த்திக் வெங்கடேசன் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்கிறார்.
Our Score