ஸ்டுடியோ வெர்சடைல் புரொடக்ஷன் மற்றும் யுனிகார்ன் ப்ரேம்ஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘தாக்க தாக்க’. இதில் விக்ராந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.தாணு தனது சொந்த நிறுவனமான ‘கலைப்புலி இன்டர்நேஷனல்’ நிறுவனம் மூலமாக வெளியிடவுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சமீபத்தில் பிரசாத் லேப் திரையரங்கில் நடை பெற்றது. பாடல்களை வெளியிட இயக்குநர் செல்வராகவன் வெளியிட நடிகர் அதர்வா பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் இப்படத்தின் விளம்பரத்திற்காக தனியே தயாரிக்கப்பட்டுள்ள பாடல் காட்சி திரையிடப்பட்டது. இந்தப் பாடல் காட்சியில் நாயகன் விக்ராந்துடன், ஆர்யா, விஷால், விஷ்ணு விஷால் மூவரும் இணைந்து நடித்திருக்கிறார்கள். விக்ராந்தின் நட்புக்காகவே அவர்கள் நடித்திருக்கிறார்களாம். இந்தப் படத்தினை விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவே இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது இவருக்கு முதல் படம்.
இந்த விழாவில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.சிவாவும் பேசினார்.
அவர் பேசும்போது. “இப்படத்தை கலைப்புலி தாணு ஸார் வெளியிடுகிறார். அவர் கைக்கு போனாலே அனைத்துமே வெற்றிதான். அதுதான் அவரது ராசி. அவர் தயாரித்த ‘காக்க காக்க’ படத்தைப் போல, இதுவும் பெரிய வெற்றி பெறும். அதனால்தான் டைட்டிலைகூட பொருத்தமாக ‘தாக்க தாக்க’ என்று வைத்திருக்கிறாகள்.
விக்ராந்தை எனக்கு சிறு வயதிலிருந்தே தெரியும். அவருக்கு இருக்கும் திறமைக்கு அவர் போகவேண்டிய தூரம், அடைய வேண்டிய வெற்றிகள் இன்னமும் நிறைய இருக்கின்றன. இப்போதுதான் அவரது கேரியர் ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் நிறைய வெற்றிகள் பெறுவார். பெற வேண்டும்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் உறுப்பினர்கள் அனைவரும் பயன்பெறும்வகையில் விளம்பரச் செலவுகளில் சில மாற்றங்கள், கட்டுப்பாடுகள் சமீபத்தில் கொண்டுவரப்பட்டன. ஆனால் சில தயாரிப்பாளர்கள் மட்டும் அதை மதிக்காமல் இருக்கிறார்கள். பின்பற்றாமல் செல்கிறார்கள்.
இந்தத் திட்டம் சிறு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றுதான் கொண்டு வரப்பட்டுள்ளது. தேவையற்ற விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும். பெரிய பட்ஜெட் படங்களுக்கும், சின்ன பட்ஜெட் படங்களுக்கும் ஒரே அளவிலான விளம்பரம் செய்தால் மட்டுமே சின்ன பட்ஜெட் படங்களையும் மக்கள் பார்க்க வருவார்கள்.
இன்று ‘காக்கா முட்டை’ படம் 10 நாட்களில் பத்து கோடியை வசூல் செய்துள்ளது. அளவுக்கதிகமாக விளம்பரம் செய்தா இந்த வெற்றி கிடைத்தது..? படத்தில் விஷயம் இருந்தால் இது போல் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
ஆனால் இதை மீறி சில தயாரிப்பாளர்கள் நடக்கிறார்கள். அவர்கள் திருந்த வேண்டும் என்று அன்பாகக் கேட்டுக் கொள்கிறோம். இதுபோல் ரொம்ப நாளாக அன்பாகவே கேட்டுக் கொண்டிருக்க முடியாது. விளம்பரக் கட்டுப்பாடுகள் விஷயத்தில் சங்கத்துக்கு தயாரிப்பாளர்கள் கட்டுப்படவேண்டும் .இல்லாவிட்டால் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும்…” என்று எச்சரித்தார்.