full screen background image

“இதுதான் கடைசி பேச்சா இருக்கணும்…” – பவர் ஸ்டாரை எச்சரித்த தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா

“இதுதான் கடைசி பேச்சா இருக்கணும்…” – பவர் ஸ்டாரை எச்சரித்த தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா

நடிகர் பவர் ஸ்டார் சீனி்வாசன், தான் நடிக்காத படங்களாக இருந்தால்கூட அழைப்பு விடுத்தால் அந்தந்த படங்கள் சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்து கொள்வார். அவரைப் பார்த்தாலே கலகலக்கும் கூட்டத்தை மேலும் கலகலக்க வைக்க, தான் தமிழ்ச் சினிமாவில் படும் பாட்டை மிக இயல்பாக சொல்லிவிட்டுப் போவார்.

இன்றைக்கும் அப்படித்தான்.. ‘தொப்பி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவின்போது தன்னை பார்த்தவுடனும், தன் பெயரை மைக்கில் அறிவித்தவுடனும் இத்தனை பேர் ஆர்வமாக கை தட்டி தன்னை ஆராதிக்கிறார்களே என்ற நினைப்புடன் மைக்கை பிடித்தார்.

சம்பிரதாயமாக படத்தினை வாழ்த்திப் பேசிவிட்டு கடைசியாக ‘செக்’ பாயிண்ட்டுக்கு வந்தார் பவர்ஸ்டார், “இந்தத் ‘தொப்பி’ படத்தின் இயக்குநர் யுரேகா என் நண்பர். தொப்பி என்றதும் எனக்கு பல தொப்பிகள் ஞாபகம் வருகிறது. நான் பல பேருக்கு தொப்பி வைத்திருக்கிறேன். எனக்கே ஒரு தயாரிப்பாளர் தொப்பி வைத்தார்.

ஒரு படத்தின் ஷூட்டிங் என்று சொல்லி கொடைக்கானலுக்கு அழைத்தார்கள். ‘சம்பளம் நாள் கணக்கா.. மணிக்கணக்கா..?’ என்றேன். ‘நாள் கணக்கு.. ஏழே நாள்தான்…’ என்றார்கள். கொடைக்கானல் போய் அந்தக் குளிரில் ரோப் கயிறு கட்டி எல்லாம் சீன் எடுத்தார்கள். சம்பளம் கேட்டேன் செக் கொடுத்தார்கள். பேங்கல போட்டேன். திரும்பி வந்து விட்டது. பணமாகக் கேட்டேன். ‘அடுத்த காட்சி ஹெலிஹாப்டரில் வந்து இறங்குவது போல..’ என்றார்கள். ‘எனக்கு அதெல்லாம் வேண்டாம். பணம்தான் வேண்டும்..’ என்றேன். ‘உங்களிடம் இல்லாத பணமா..?’ என்கிறார்கள்.

பாருங்க… நான் எத்தனை பேருக்கு ரிட்டர்ன் செக் கொடுத்திருக்கேன். எனக்கே ரிட்டர்ன் செக் கொடுக்கிறார்கள். நான் பல செக்கை ரிட்டர்ன் பண்ணியிருக்கேன். இப்ப எனக்கே அது திரும்பி வருது.

நான் எத்தனை பேரை ஏமாற்றியிருக்கேன்.. என்னையே ஏமாற்றப் பார்க்கிறாங்க.. கஷ்டப்பட்டு உழைச்சுட்டு காசு கேட்டா ஏமாத்துறானுங்க. பழசை எல்லாம் விட்டுட்டு திருந்தலாம்னா விட மாட்டானுங்க போலிருக்கு. ஒரு சொடக்கு போடுறதுக்குள்ள ஒரு கோடி ரூபாய் ஏமாத்திடுவேன். என்கிட்டேயாவா..?

பணமில்லாதவனுங்க ஏன் படமெடுக்க வர்றானுங்க..? வேற வேலை பார்க்க போக வேண்டியதுதானே..? இப்பல்லாம் படமெடுக்க   வர்றவன் எம் எல் ஏ. பையன். எம்.பி. பையன்னு பீலா விட்டு பில்டப் கொடுத்திட்டு வர்றான். ஏன் இந்த பில்டப்..?

தயாரிப்பாளர் சங்கத்துல ஒண்ணு செய்யுங்க. புதுசு புதுசா படமெடுக்க வர்றவங்களை ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செஞ்சாதான் படம் எடுக்கலாம்னு கொண்டு வாங்க. புதுசா வர்ற புரொடியூசர் யாரு.. அவன்கிட்டே கையில் எவ்வளவு பணம் இருக்கு? எவ்வளவு கடன் வாங்கப் போறார்..? எவ்வளவு ஆட்டயப் போடப் போறார்னு கேட்டு வைங்க.. இப்படி நடிக்க வச்சிட்டு ஏமாத்துறவனுங்களை விடக் கூடாது.. உழைக்கிறவனுக்கு தொப்பி வைக்காதீங்க.. நாங்க தொப்பி வைக்க நினைச்சா நீங்க தாங்க மாட்டீங்க…” என்றார்.

இதற்கடுத்து பேச வந்த நடிகர் சிங்கம்புலி “பவர் ஸ்டார் சீனிவாசன் சொல்வது சரியல்ல. தயாரிப்பாளர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரித்து வெளியிடுவது எவ்வளவு கஷ்டம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் நடித்து முடிப்பதுடன் வேலை முடிந்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் அந்த படத்தை ரிலீஸ் செய்ய பெரும்பாடு படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்..” என்றார்.

இவருக்கு பின் பேச வந்த தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்களின் ஒருவரான அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா எடுத்த எடுப்பிலேயே மிகுந்த கோபத்துடன் பவர் ஸ்டாரை குறி வைத்து பேசினார்.

“இங்க பேசுன பவர் ஸ்டார் தனக்கு சம்பளம் தரலை.. செக் பவுன்ஸ் ஆயிருச்சுன்னு புகார் சொன்னார். இங்க ஒவ்வொரு தயாரிப்பாளரும், வாயைக் கட்டி வயித்தைக் கட்டி.. பொண்டாட்டி தாலியை அடகு வைச்சு படத்தை எடுத்துக்கிட்டிருக்காங்க.

செக் பவுன்ஸ் ஆனா அந்தப் பணத்தைத் திருப்பி வாங்க நிறைய வழிகள் இருக்கு. அதுல முயற்சி பண்ணணும். அதைவிட்டுட்டு இப்படி பொது மேடைல அவருக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்களை மனம் போன போக்கில் பேசக் கூடாது.

டெபாசிட் செய்துவிட்டு படம் எடுக்க வேண்டும் என்று இவர் சொல்கிறார். அது போல் நடிக்கத் தெரியும் என்ற சான்றிதழுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் வர வேண்டும் என்று எங்களாலும் சொல்ல முடியும்.

பணம் இருக்கிறதா என்று அவர் கேட்கிறார். உங்களிடம் நடிப்புத் திறமை இருக்கிறதா என்று நான் கேட்கிறேன். நடிகர் என்று சொல்லிக் கொள்ளும் உங்களுக்கு நடிக்க தெரியுமா..?

ரஜினிகாந்தில் இருந்து சீனிவாசன்வரை அத்தனை நடிகர்களையும் உருவாக்கியவர்கள் தயாரிப்பாளர்கள்தான். தயாரிப்பாளர்கள் கப்பலை போன்றவர்கள். எத்தனை கேப்டன்கள் இருந்தாலும் தயாரிப்பாளர்கள் என்ற கப்பல்தான் அஸ்திவாரம். அது இல்லையேல் கேப்டன்களுக்கு வேலையே இல்லை.

சாதாரண சீனி்வாசனை பவர் ஸ்டார் ஆக்கியவர்கள் தயாரிப்பாளர்கள்தான். தயாரிப்பாளர்கள் அப்படியொரு கவுரவத்தை கொடுத்தார்கள். இனிமேல் தயாரிப்பாளர் டெபாசிட் செய்துவிட்டு படம் எடுக்க வேண்டும் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியதற்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். 

இனிமேல் பொது மேடைகளில் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இது மாதிரி பேசுறதை இதோட நிறுத்திக்கணும். இதுதான் கடைசி பேச்சா இருக்கணும்..” என்று கொந்தளித்தார்.

பாவம் பவர் ஸ்டார்.. சிவாவின் கோபத்தைப் பார்த்து ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்.

Our Score