full screen background image

“விமல் சொல்வதெல்லாம் பொய்” – தயாரிப்பாளர் சிங்காரவேலனின் பதில்

“விமல் சொல்வதெல்லாம் பொய்” – தயாரிப்பாளர் சிங்காரவேலனின் பதில்

நடிகர் விமல் தங்கள் மீது கொடுத்துள்ள புகார் ஆதாரமற்றது. பொய்யானது என்று தயாரிப்பாளர் சிங்காரவேலன் தெரிவித்துள்ளார்.

நடிகர் விமல் தன்னிடம் பண மோசடி செய்துவிட்டதாகச் சொல்லி தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், கோபி உள்ளிட்ட மூவர் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த மனு மீது நடவடிக்கை எதுவும் எடுக்காததால் எனது மனு மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார் விமல்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட 3 தயாரிப்பாளர்கள் மீதும் வழக்கினை பதிவு செய்து விசாரித்து அறிக்கைை தரும்படி விருகம்பாக்கம் காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து சிங்காரவேலன், கோபி, விக்னேஷ் மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்கடுத்து தயாரிப்பாளர் சிங்காரவேலன் கோர்ட்டில் முன் ஜாமீன் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தொடர்ச்சியாக விடுமுறைகள் வருவதால் அவருடைய ஜாமீன் மனு திங்கள்கிழமைதான் விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த இடைவெளியில் அவரை போலீஸார் கைது செய்யக் கூடும் என்பதால் அவர் தற்போது தலைமறைவாகிவிட்டார்.

தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமறைவில் இருந்தும் இந்த வழக்கு குறித்து ஒரு ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், “விமல் எங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டில் துளி கூட உண்மையில்லை. மன்னர் வகையறா படத்தை வெளியிட முடியாமல் அவர் தவித்தபோது தயாரிப்பாளர் கோபியிடம் நான்தான் பேசி விமலுக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்தேன்.

அந்தப் பட வெளியீட்டின்போது விமல் வாங்கிய கடன் தொகையைத் திருப்பித் தராததால்தான் அவர் மீது புகார் கொடுத்தோம். அப்போது விமல் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் சம்பளத்தில் இருந்து கடன் தொகை முழுவதையும் கட்டிவிடுவதாக விமல் எங்களிடம் சொல்லி அதை ஒப்பந்தமாகவும் செய்து கொண்டோம்.

ஆனால் இதற்குப் பிறகு விமல் நடித்த 2 படங்கள் வெளியாகிவிட்டன. அப்போதும் விமல் பணத்தைத் திருப்பித் தரவில்லை. இதனால்தான் தயாரிப்பாளர் கோபி விமல் கொடுத்த காசோலையை வங்கியில் செலுத்தினார். அப்போது வங்கியில் பணம் இல்லாததால் அது பவுன்ஸாகிவிட்டது. இதனால் கோபி, விமல் மீது செக் மோசடி வழக்கினைத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு இப்போதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதேபோல் என்னிடம் வாங்கிய பணத்தையும் அவர் கொடுக்காததால்தான் நானும் அவர் கொடுத்திருந்த செக்கை வங்கியில் செலுத்தினேன். அதுவும் பணமில்லாமல் ரிட்டர்ன் ஆகிவிட்டது. நானும் இது குறித்து விமல் மீது வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இந்த இரண்டு வழக்குகளையும் நீர்த்துப் போகச் செய்யத்தான் விமல் இப்போது புதிதாக இப்படியொரு புகாரை எங்கள் மீது சுமத்தியுள்ளார். இந்தப் புகார் கடந்த 2021 மார்ச் மாதம் பதிவானது. அப்போதே விருகம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடம் எங்களது தரப்பு நியாயத்தை ஆதாரத்தோடு சொல்லி நிரூபித்தோம். அதனால்தான் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை. இந்த விசாரணைக்கு பல முறை அழைத்தும் விமல் வரவில்லை.

இப்போது வேண்டுமென்றே எங்களை பயமுறுத்த வேண்டும் என்பதற்காகவே நீதிமன்றத்திற்குச் சென்று இப்படியொரு வழக்கினை தொடர்ந்து தீர்ப்பினை பெற்று வந்திருக்கிறார். நாங்கள் இதற்காக ஜாமீன் கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளோம்.

ஜாமீன் கிடைத்தவுடன் நிச்சயமாக பத்திரிகையாளர்களை நேரில் சந்தித்து முழு விளக்கமும் அளிப்போம்..” என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் சிங்காரவேலன்.

 
Our Score