full screen background image

“என் முதல் படத்தில் அனைவரும் சேர்ந்து என்னை ஏமாற்றினார்கள்…” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வருத்தம்..!

“என் முதல் படத்தில் அனைவரும் சேர்ந்து என்னை ஏமாற்றினார்கள்…” – தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் வருத்தம்..!

தனது முதல் படத்திலேயே தன்னை படக் குழுவினர் அனைவரும் சேர்ந்து ஏமாற்றியதாக சிரித்தபடியே சொல்கிறார் லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்.

சமீபத்தில் அவர் நடிகர் மனோபாலாவின் ‘வேஸ்ட் பேப்பர்’ யு டியூப் சேனலுக்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர் தயாரித்த முதல் படமான ‘நளனும், நந்தினியும்’ படத் தயாரிப்பின்போது தான் பட்ட அவஸ்தைகளை சுவாரஸ்யமாக நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும்போது, “நான் ஜெனீவாவில் ஐ.நா. சபையின் ஒரு அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அங்கே நடந்த ஒரு கலாச்சார விழாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து சில கலைஞர்களை அழைத்து வரும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.

அது குறித்து நான் சென்னையில் இருந்த ஒரு முகநூல் நண்பர் மைக்கேல் என்பவரிடம் பேசும்போது அவரோ எனக்குள் சினிமா ஆசையை ஆழமாக ஊன்றிவிட்டார். சினிமா தயாரிப்பு என்பது மிகச் சுலபமான வேலை என்று அவர் சொல்லி என் மனதை மாற்றிவிட்டார்.

எனக்கும் சின்ன வயதில் இருந்தே சினிமா பார்ப்பதில் மிக ஆர்வம் இருந்தது. ஆனால் சினிமா துறைக்குள் கால் வைப்பதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. சரி.. நாம எடுத்துக் காட்டுவோமே என்று அலட்சியமாக நினைத்துதான் படத் தயாரிப்பில் இறங்கினேன்.

என்னுடைய முதல் படம் ‘நளனும் நந்தினியும்’. எனக்குள் சினிமா ஆசையைத் தூண்டி அந்த மைக்கேல்தான் படத்தில் நாயகனாக நடித்தார். படத்தில் இயக்குநரைத் தவிர மற்ற அனைவருமே நன்கு தெரிந்த முகங்கள்தான். ஆனால், எனக்கு எந்த அளவுக்குத் தண்ணி காட்ட வேண்டுமோ அத்தனையும் காட்டிவிட்டார்கள்.

மொத்த பட்ஜெட்டே இரண்டரை கோடியில் இருந்து மூன்றரை கோடிவரையிலும்தான் என்று முதலில் பேசினோம். பின்பு இரண்டரை கோடிதான் பட்ஜெட் என்று தீர்மானமாகப் பேசி முடித்திருந்தோம்.

ஆனால் படம் துவங்கி 10 நாட்களில் 90 லட்சம் காலி. மொத்தம் 40 நாட்கள் ஷூட்டிங் என்று பிக்ஸ் செய்திருந்தோம். இப்பவே இப்படின்னா மீதமுள்ள நாட்களுக்கும் சேர்த்தால் எவ்வளவு செலவாகும் என்று யோசித்தேன்.

ஆனால் எப்போதும்போல 90 லட்சம் போட்டாச்சு.. அதை எடுக்கணும்ன்னா மீதத்தையும் போட்டுத்தான் ஆகணும்ன்னு சுத்தியிருந்த எல்லாரும் சொல்லிச் சொல்லி திரும்பவும் அதில் இறங்க வைத்தார்கள். கடைசியில் படம் 2 மடங்கு செலவைத் தொட்டுவிட்டது.

அந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பு நிர்வாகி சுத்த பிராடு. அனைத்திலும் கமிஷன் அடித்திருக்கிறார். இதுவே எனக்குத் தெரியாது. பல நடிகர், நடிகைகளுக்கு அதிகச் சம்பளத்தை பிக்ஸ் செய்து வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

நடிகர் ஜெயப்பிரகாஷ் அப்போது வெறும் 2 லட்சம் ரூபாய்தான் ஒரு படத்துக்கு வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் என் படத்தில் அவருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் பேசி வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.

இது பற்றி பின்னர் அவரிடத்தில் நான் பேசியபோது நான் எடுத்து எடுத்த படங்களில் தனது சம்பளத்தை குறைத்து எனக்கு உதவி செய்தார். கலை இயக்குநராக நான் அறிமுகப்படுத்திய நபரோ 11 வீடுகளுக்கு பெயிண்ட் அடித்ததாகச் சொல்லி ஒரு வீட்டுக்கு 1 லட்சம் என்று பில் எழுதி வாங்கிச் சென்றுவிட்டார். இப்படி ஆளாளுக்கு அடித்துக் கொண்டு போனதால் என் கண் முன்பாகவே எனது பணம் தண்ணீராக செலவானது.

இதோடு கூடவே தேவையில்லாமல் ‘சுட்ட கதை’ என்ற பெயரில் அடுத்தப் படத்தையும் துவக்கி அதையும் கடன் வாங்கி முடித்துவிட்டேன். இந்த இரண்டு படத்தையும் தயாரித்து கையில் வைத்துக் கொண்டு அதை ரிலீஸ் செய்வதற்குள் படாதபாடுபட்டுவிட்டேன்..” என்று நகைச்சுவையாகவே சொல்லியிருக்கிறார்  ரவீந்தர் சந்திரசேகரன்.

Our Score