“OTT நிறுவனங்கள் பெரிய படத்துடன் 5 சிறிய படங்களையும் வாங்க வேண்டும்” – தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் யோசனை..!

“OTT நிறுவனங்கள் பெரிய படத்துடன் 5 சிறிய படங்களையும் வாங்க வேண்டும்” – தயாரிப்பாளர் முரளி ராமசாமியின் யோசனை..!

புதிய தமிழ்த் திரைப்படங்களை OTT Platform-க்கு விற்பனை செய்வது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே பலத்த கருத்து மோதல் எழுந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் பிரபல தயாரிப்பாளரான முரளி ராமசாமி “ஒரு பெரிய பட்ஜெட் படம் OTT-க்கு விற்கப்பட்டால் கூடவே 5 சின்ன பட்ஜெட் படங்களையும் வாங்க வைக்க வேண்டும்..” என்று பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் :

“தமிழ் திரைப்படங்களை டிஜிட்டலில் வெளியிடும் முறைக்கு தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்.

கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் உலகமே சிக்கித் தவிக்கையில்.. திரையரங்குகள் மூடிக் கிடக்கும் இந்தச் சூழ்நிலையில், தயாரிப்பாளர்கள் தங்களது பணத்தை முதலீடு செய்து படத்தைத் தயாரித்து அதை வியாபாரம் செய்ய முடியாமல் தவிக்கும்போது OTT Platform என்பது காலத்தின் கட்டாயமாகிறது.

பெரிய படங்களுக்கு திரையரங்குகள் எப்படி அதிகமாக கிடைக்கிறதோ, அதே போல டிஜிட்டலில் பெரிய படங்களை மட்டும்தான் அவுட்ரைட் முறையில் விற்க முடிகிறது. ஆனால், சிறுபடங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை, டிஜிட்டல் மார்க்கெட்டிலும் அவுட்ரைட் முறையில் விற்க முடிவதில்லை.

இந்த நிலை மாற வேண்டும். நம் சங்க உறுப்பினர்களாக பேச வேண்டியவர்கள் தங்கள் பதவியை வைத்து தான் மற்றும் தன்னைச் சார்ந்தவர்களுடயை பெரிய, சிறிய மிகச் சிறிய என்று எல்லா படங்களையும் அவுட் ரைட்டில் விற்பது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால், ஏதாவது பிரச்சினையென்றால் அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் உதவிகளை செய்ய.. குரல் கொடுக்க.. சிறு படத் தயாரிப்பாளர்கள் தேவையாய் இருக்கிறது.

அப்படிப்பட்டவர்கள் இவர்களின் படங்களை விற்றபோது, கூடவே ஐந்து சிறு பட தயாரிப்பாளர்களின் படங்களையும் விற்றுத் தர ஏற்பாடு செய்திருக்கலாமே.. ஆனால் அப்படி செய்யவில்லை. இது என்ன நியாயம்.. இதற்கு என்னதான் முடிவு..

ஒரு சிலர் குழுவாக தன்னிச்சையாக சேர்ந்து எடுக்கும் முடிவெடுத்து வெளியிடும் அறிக்கை 1300 தயாரிப்பாளர்களுக்கும் சாதகமாக அமைய வேண்டுமே தவிர.. சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தி விடக் கூடாது. ஆகவே, அனைத்துத் தரப்பினரையும் கலந்து பேசி ஒரே குரலாக ஒலித்திருக்க வேண்டும்.

அவசர கதியில் சிறு பட தயாரிப்பாளர்கள், பெரிய பட தயாரிப்பாளர்கள் என அனைவரது கருத்தையும் கேட்காமல் ஒரு சிலரது தனிப்பட்ட கருத்துக்களை அனைத்துத் தயாரிப்பாளர்களின் கருத்தாக ஒலிப்பதும் தவறு.

இப்போது எடுக்கப்படும் முடிவு, இனி வரும் காலங்களில் சிறிய படங்களின் விற்பனையை சுலபமானதாக மாற்ற வேண்டும். இந்த ஓ.டி.டி வியாபாரத்தை வரைமுறைப்படுத்தி வியாபார ஒழுங்கு கொண்டு வர வேண்டும்.

அதாவது, எந்த ஒரு டிஜிட்டல் நிறுவனம் பெரிய படம் ஒன்றை வாங்குகிறதோ, அந்த நிறுவனம் 5 சிறு முதலீட்டு படங்களை கண்டிப்பாக வாங்க வேண்டும்.

அதனை அந்தப் பெரிய படத்தை விற்கும் தயாரிப்பாளர், உறுதி செய்ய வேண்டும் என்ற வரைமுறையை கொண்டு வரவேண்டும். அதற்கு பெரிய தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். இதை நமது சங்கத்தின் மூலம் நடைமுறைப்படுத்தக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இதற்கு தயாரிப்பாளர்கள் ஒத்துழைத்தால், வருடத்துக்கு 25 பெரிய படங்கள் வியாபாரமானால், 125 சிறிய படங்கள் சிரமமில்லாமல் வியாபாரம் ஆகும்.

இது இப்போது மட்டுமல்லாமல், வருங்காலத்திலும் சிறிய படங்களை வியாபார ரீதியாக வெற்றி பெற வழி வகுக்கும்.

எந்த ஒரு பிரச்சினையிலும் பெரிய தயாரிப்பாளர்களுக்காக மட்டுமே போராடும் நாம் சிறு பட தயாரிப்பாளர்களையும் கருத்தில் கொண்டு அவர்களும் நன்மை அடையக் கூடிய முடிவுகளை மட்டுமே எடுக்க வேண்டும்.

பெரிய, சிறிய என்ற பாகுபாடு காட்டாமல் டிஜிட்டல் பிளாட்பாரத்தில் வியாபாரத்தைக் கவனிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணரும் தருணம் இது. நீங்களும் வாழுங்கள்; சிறு படத் தயாரிப்பாளர்களையும் வாழ விடுங்கள்.

இந்த நேரத்தில் திரையரங்கு உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களின் சுமையைக் கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என்று மூன்று தரப்பினரும் ஒன்று கூடி பேசி ஒரு சுமூகமான வியாபார சூழ்நிலை உருவாக ஒத்துழைக்க வேண்டும்.

மேலும், தயாரிப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளின் ஒன்றான கம்யூட்டரைஸ்ட் டிக்கெட்டிங் முறையை அனைத்து திரையரங்குகளிலும் அறிமுகப்படுத்தி வியாபாரத்தின் வெளிப்படைத் தன்மையை திரையரங்கு உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்…”

இவ்வாறு தனது அறிக்கையில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தெரிவித்துள்ளார்.

Our Score