“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..!

“திரைப்படங்களின் உரிமையை வாங்குங்க” – டிவி நிறுவனங்களிடம் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் வேண்டுகோள்..!

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் மும்முனை போட்டி உருவாகியிருக்கிறது.

இதில் ஒரு அணியாக பிரபல தயாரிப்பாளரான ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா தலைமையில் ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி’ என்கிற பெயரில் ஒரு அணி உருவாகியிருக்கிறது.

இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு டி.சிவா போட்டியிடுகிறார்.

2 செயலாளர்கள் பதவிக்கு தயாரிப்பாளர்கள் பி.எல்.தேனப்பனும், ஜே.எஸ்.கே.சதீஷ்குமாரும் போட்டியிடுகின்றனர்.

பொருளாளர் பதவிக்கு லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.முரளிதரன் போட்டியிடுகிறார்.

2 துணைத் தலைவர்கள் பதவிக்கு தயாரிப்பாளர் ஜி.தனஞ்செயனும், ஆர்.கே.சுரேஷும் போட்டியிடுகின்றனர்.

20 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு, தயாரிப்பாளர் கே.ராஜன், தயாரிப்பாளர் ராதாரவி, தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன், தயாரிப்பாளர் ஹெச்.முரளி, தயாரிப்பாளர் எஸ்.எஸ்.துரைராஜ், தயாரிப்பாளர் ஆர்.வி.உதயகுமார், தயாரிப்பாளர் மனோஜ்குமார், தயாரிப்பாளர் மனோபாலா, தயாரிப்பாளர் கே.நந்தகோபால், தயாரிப்பாளர் கே.விஜயகுமார், தயாரிப்பாளர் பஞ்சு சுப்பு, தயாரிப்பாளர் பாபு கணேஷ், தயாரிப்பாளர் முருகராஜ், தயாரிப்பாளர் வினோத்குமார், தயாரிப்பாளர் ரங்கநாதன், தயாரிப்பாளர் பஞ்ச் பரத், தயாரிப்பாளர் மதுரை என்.செல்வம் மற்றும் 3 தயாரிப்பாளர்களும் இணைந்து போட்டியிடுகின்றனர்.

திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் திரைப்படங்களை பாதுகாப்பாகத் தயாரிக்கவும், திரைப்படங்களை தயாரிக்காத தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழ உழைப்பதே எங்களது அணியின் நோக்கம் என்று இந்த அணியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அணியின் சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரபல தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் தற்போது விற்காமல் இருக்கும் தமிழ்த் திரைப்படங்களின் தொலைக்காட்சி மற்றும் OTT உரிமையை அந்தந்த நிறுவனங்கள் வாங்கி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

“அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் மற்றும் டிஜிட்டல் பிளாட்பார்ம் நிறுவனங்களுக்கும் ஒரு வேண்டுகோள்!

அனைவருக்கும் வணக்கம்.

‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி’ சார்பாக அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற டிஜிட்டல் பிளாட்பார்ம் நிறுவனங்களுக்கும் தாழ்மையான வேண்டுகோள் :

தற்போது உலகெங்கிலும் நிகழ்ந்து வரும் கொரோனா வைரஸ் தாக்குதலால், அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. தமிழ் திரைப்பட துறை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

வெளியீட்டுக்கு தயாராக இருந்த நிறைய திரைப்படங்கள் வெளியிட முடியாமலும், படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு, எப்போது இயல்புநிலை திரும்புமோ என்கிற அசாதாரண சூழ்நிலைதான் தற்போது நிலவுகிறது.

அந்த வாரம் வெளியாகி திரையில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படங்களும் அப்படியே நிறுத்தப்பட்டதால் மிகுந்த பொருளாதார நெருக்கடியில் தமிழ் திரையுலகம் சிக்கித் தவிக்கிறது.

இந்தச் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி நிறுவனங்களும், டிஜிட்டல் பிளாட்பார்ம் நிறுவனங்களும் தமிழ் திரைப்பட துறைக்கு சில வியாபார ரீதியிலான உதவிகளைச் செய்து எங்களுக்கு தோள் கொடுத்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  1. இந்த ஊரடங்கு காலத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலையில், பழைய சீரியல்களை மறு ஒளிபரப்புவதும், அதுபோல் ஏற்கெனவே திரையிடப்பட்ட திரைப்படங்களையே மீண்டும், மீண்டும் ஒளிபரப்ப வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இதே நேரத்தில் திரைக்கு வந்த நிறைய திரைப்படங்களின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமங்கள் இன்னமும் விற்கப்படாமல் இருக்கின்றன. அந்த படங்களை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கும் ஒரு கன்டென்ட் கிடைக்கும். தயாரிப்பாளர்களின் பொருளாதார நெருக்கடியும், வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.

அதுபோல் நிறைய திரைப்படங்களின் டிஜிட்டல் உரிமைகளும் விற்கப்படாமல் இருக்கிறது. அவற்றையும் டிஜிட்டல் பிளாட்பார்ம் நிறுவனங்கள் வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

  1. ரிலீசுக்கு தயாரான திரைப்படங்கள் இந்த சூழ்நிலையில் வெளியிட முடியாமல் இருக்கின்றன. எப்போது இயல்பு நிலை திரும்பும்.. திரைப்படங்களை எப்போது ரிலீஸ் செய்ய முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில்தான் சிறிய பட்ஜெட் திரைப்பட தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

இந்த மாதிரியான திரைப்படங்களை நேரடியாக எக்ஸ்குளூசிவாக சேட்டிலைட் சேனல்கள் மூலமாகவோ அல்லது டிஜிட்டில் பிளாட்பார்ம் மூலமாகவோ ரிலீஸ் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் நிறைய உள்ளன. அதற்கும் நீங்கள் வழிவகை செய்து தயாரிப்பாளர்களுக்கு உதவ முன் வர வேண்டும்.

பொதுவாக தமிழ் திரைப்படத் துறைக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் இடையே நெருக்கம் அதிகம். தொலைக்காட்சிகளின் வளர்ச்சிக்கு திரைப்படங்கள், பாடல்கள், காமெடி காட்சிகள் என தமிழ் திரைத் துறை தயாரிப்பாளர்களின் கன்டென்ட் எப்போதும் பக்கபலமாக இருந்து வருகிறது. 

எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்களின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களின் திரைப்படங்களை சேட்டிலைட் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமங்களை வாங்கி உதவ வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…” என்று தனது அறிக்கையில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

Our Score