full screen background image

“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..?”

“அஞ்சான்’ படத்தின் தோல்விக்கு என்ன காரணம்..?”

2014-ம் ஆண்டு ‘யு டிவி’ மற்றும் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவான பரபரப்பான திரைப்படம் ‘அஞ்சான்’.

சூர்யா, சமந்தா, வித்யூத் ஜாம்வேல் மற்றும் பல பெரிய நட்சத்திரங்கள் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட்செலவில் 60 கோடி ரூபாய் அளவுக்கான பட்ஜெட்டில் உருவான திரைப்படம் அது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநரான லிங்குசாமி பேசும்போது, “நான் கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இந்தப் படத்துல இறக்கியிருக்கேன்..” என்று சொன்ன வார்த்தைகள் அப்போதும், இப்போதும் பல மீம்ஸ்களுக்கு உதவிகரமாக இருக்கின்றன.

படம் வெளியாகி ஓரளவுக்கு ஓடினாலும் விமர்சன ரீதியாக படம் மிகப் பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. “இந்தக் கதைக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பட்ஜெட்..?” “இந்தப் படத்தில் எதற்கு சூர்யா..?” என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்ப ரொம்பவே அப்ஸெட்டாகிவிட்டார் இயக்குநர் லிங்குசாமி.

இத்திரைப்படத்தைத் யு டிவியின் சார்பில் தயாரித்த தயாரிப்பாளரப் ஜி.தனஞ்செயன் “அஞ்சான்’ திரைப்படத்தின்போது இயக்குநர் லிங்குசாமி அதீத ரிஸ்க் எடுத்தார்…” என்கிறார்.

இயக்குநர் சித்ரா லட்சுமணனின் ‘சாய் வித் சித்ரா’ நிகழ்ச்சிக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில் ‘அஞ்சான்’ படத்தின் உருவாக்கம் பற்றிப் பேசுகையில் இதைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் இது பற்றிப் பேசும்போது, “அஞ்சான்’ படத்தை ‘பர்ஸ்ட் காப்பி’ என்னும் அடிப்படையில் எங்களுக்காக ‘திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம்’ தயாரித்தது. படமே ‘பாட்ஷா’ படத்தின் உல்டாதான். படம் முழுவதும் முடிவடைந்தபோது படத்தின் பட்ஜெட் 60 கோடியில் நின்றது.

எப்போதும் நான் படத்தை டபுள் பாஸிட்டிவ்லேயே பார்த்துவிடுவேன். அதுபோல் இந்தப் படத்தையும் பார்த்தேன். ஏவி.எம். ஸ்டூடியோ பிரிவியூ தியேட்டரில் அதைத் திரையிட்டுக் காண்பித்தார்கள்.

படத்தின் முதல் பாதியே 1 மணி 75 நிமிடம் இருந்தது. இடைவேளைக்காக லைட் போடும்போது நான் ‘படமே முடிஞ்சிருச்சோ?’ என்றுதான் நினைத்தேன். அப்புறம்தான் இடைவேளை டைட்டில் வந்தது. அதோடு “எனக்கு வேலையிருக்கிறது” என்று சொல்லி அந்தப் படத்தை நான் தொடர்ந்து பார்க்கவில்லை. இதற்கே லிங்குசாமி என் மீது கோபப்பட்டார்.

பின்பு ஒரு நாள் மீண்டும் இடைவேளைக்குப் பின்னான காட்சிகளை பார்த்தேன். அது ஒன்றே கால் மணி நேரம் இருந்தது. மொத்தமாக ‘அஞ்சான்’ படம் 3 மணி நேரம் இருந்தது. அப்போதே எனக்கு சந்தேகம் வந்துவிட்டது. ‘இந்தப் படம் தேறாது’ என்று என் உள் மனது சொல்லியது.

லிங்குசாமியிடம், “நீங்க என்கிட்ட சொன்ன கதை வேற.. இந்த அவுட்புட் வேற மாதிரில்ல இருக்கு…” என்றேன். அவர் என்னவென்னவோ சொல்லி சமாளித்தார். ‘சரி.. படம் எடுத்து முடிச்சாச்சு. இனி மீண்டும் எடு்க்க முடியாது’ என்பதால் “நேரத்தையாவது குறைத்துக் கொடுங்கள் 2 மணி 20 நிமிடங்கள் இருந்தாலே போதும்…” என்றேன்.

இதற்கு லிங்குசாமி “முடியாவே முடியாது..” என்றார். “3 மணி நேரமென்றால் தியேட்டரில் மக்கள் உட்கார மாட்டார்கள்.. குறைத்துதான் ஆக வேண்டும்…” என்றேன். அவரோ பிடிவதமாக அதை ஏற்க மறுத்தார்.

இந்த நேரத்தில் ‘அஞ்சான்’ படத்தின் வெளியீட்டு தேதியும் நெருங்கிவிட்டது. நான் ஏற்கெனவே வெளிநாட்டு உரிமை, வெளி மாநில உரிமைகள், ஆடியோ உரிமை என்று தமிழக தியேட்டர் உரிமையைத் தவிர மற்றவைகளை விற்றுவிட்டேன். அதிலேயே எனக்கு 21 கோடி கிடைத்துவிட்டது.

தமிழக உரிமையை விற்பதற்கு முன்பாக படத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்றுதான் லிங்குசாமியிடம் போராடிக் கொண்டிருந்தேன். தினமும் எங்களது சந்திப்பு நடந்தது. ஆனால் லிங்குசாமி நேரத்தைக் குறைக்க மறுத்துக் கொண்டே வந்தார். கடைசியாக ஒரு நாள் எனக்கு போன் செய்து “இப்போ வந்து பாருங்கள்” என்று அழைத்தார். இப்போது வெறும் 10 நிமிடங்களை மட்டுமே குறைத்து 2 மணி 50 நிமிடமாக மாற்றியிருந்தார்.

எனக்கு இதுவும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. “இதுவும் எனக்குப் போதாது.. இன்னும் 25 நிமிடங்களாவது குறைத்து 2 மணி 25 நிமிடங்களுக்குக் கொண்டு வாருங்கள்…” என்றேன். இப்போதும் லிங்குசாமி “முடியவே முடியாது” என்று சொல்லிவிட்டார்.

இந்த நேரத்தில் தமிழக வெளியீட்டு உரிமையை வேந்தர் மூவிஸ் நிறுவனம் 37 கோடி ரூபாய்க்குக் கேட்டு வந்தது. இது எனக்கு மிகப் பெரிய தொகை. படத்தை இவர்களிடமே கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். ஏனென்றால் இந்தத் தொகை வந்தாலே நான் போட்ட பணத்தை எடு்த்துவிடலாம். என் கம்பெனி பிழைத்துக் கொள்ளும். நஷ்டம் வராது என்று நினைத்திருந்தேன்.

இந்த நேரத்தில் திடீரென்று லிங்குசாமியும், அவரது தம்பி போஸும் என்னைக் கூப்பிட்டு, “இந்தப் படத்தை நாங்களே தமிழகத்தில் ரிலீஸ் செய்து கொள்கிறோம்” என்றார்கள்.

நான் அப்போதே லிங்குவிடம் “இது சரி வராது. நீங்க ரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க.. ஏற்கெனவே படத்தை பர்ஸ்ட் காப்பில தயாரிக்கும்போதே உங்களுக்கு லாபம் கிடைச்சிருக்கும். அதுவே போதும். இதை வாங்கி வெளியீட்டீங்கன்னா நஷ்டமடைந்தால் முழுப் பொறுப்பும் உங்களுடையது. வேந்தர் மூவிஸ் ரிலீஸ் செய்தால் முழுப் பொறுப்பும் என்னுடையது. அதில் உங்களுக்கு சம்பந்தமில்லை. எதுக்கு ரிஸ்க் எடு்க்குறீங்க..?” என்று சொல்லிப் பார்த்தேன். அவர்கள் இருவரும் கேட்கவில்லை.

இந்த நேரத்தில், ‘படத்தில் ஏதோ பிரச்சினையிருக்கிறது’ என்பதைத் தெரிந்து கொண்ட வேந்தர் மூவிஸ் ‘இப்போது படத்துக்கு 28 கோடிதான் விலை’ என்றார்கள். என் நிறுவனம் நஷ்டப்படக் கூடாதே என்பதற்காக நான் போராடி வந்த நேரத்தில் லிங்குசாமி ‘நானே ரிலீஸ் செய்து கொள்கிறேன்’ என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார். வேந்தர் மூவிஸ் தருவதைவிட 1 கோடி ரூபாயைக் குறைத்து 27 கோடி ரூபாய் தருவதாக லிங்குசாமி சொன்னார்.

நான் இதை என்னுடைய எம்.டி.யிடம் சொல்ல.. அவரும் ‘லிங்குசாமிக்கே கொடுத்திருங்க. நமக்கெதுக்கு ரிஸ்க்..?’ என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துக்கே கொடுத்துவிட்டேன்.

ஆனாலும் பிரமோஷனில் நான் எந்தக் குறையும் வைக்கவில்லை. இந்தப் படத்துக்காகவே ஒரு புத்தகத்தை ரிலீஸ் செய்தேன். ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து புத்தகத்தை வெளியிட்டேன். 4 கோடி ரூபாய்க்கு விளம்பரங்களை செய்தேன்.

படம் முதல் நாளே சூர்யா பட வரலாற்றில் முதல் முறையாக 14 கோடியை கலெக்ட் செய்தது.. பின்பு அடுத்தடுத்து நாட்களில் குறைந்து போனது. மொத்தமாக 24 கோடிதான் அந்தப் படம் கலெக்ட் செய்தது.

லிங்குசாமி இப்போதும் எனக்கு நல்ல நண்பர்தான். சிறந்த இயக்குநர். சிறந்த படைப்பாளி. ஆனால் இந்த ‘அஞ்சான்’ படத்தில் மட்டும் அதீத நம்பிக்கையுடன் செயல்பட்டுவிட்டார்.. இதுதான் நடந்தது..” என்றார் தயாரிப்பாளர் தனஞ்செயன்.

Our Score