full screen background image

தள்ளாடும் சினிமா தியேட்டர்கள்..!

தள்ளாடும் சினிமா தியேட்டர்கள்..!

8 மாதங்கள் கழித்து கடந்த நவம்பர் 10-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

ஆனால், கொரோனா பாதிப்பின் காரணமாக தியேட்டரின் மொத்த டிக்கெட்டுக்களையும் வழங்காமல் 50 சதவிகித டிக்கெட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். இடைவேளையில் தின்பண்டங்கள் வாங்க ரசிகர்கள் கியூவில் நிற்கக் கூடாது. மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றெல்லாம் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன.

இதையும் தாண்டி மக்கள் நிச்சயமாகத் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்து சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால், வந்த கூட்டம் தீபாவளியையொட்டிய சில தினங்கள் மட்டுமே தொடர்ந்து வந்தது.

அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் 10 பேர் அல்லது 15 பேராக வந்து செல்லத் துவங்க.. தியேட்டர் அதிபர்கள் மீண்டும் சிக்கலில் மாட்டிக் கொண்டார்கள்.

இந்தக் கூட்டமில்லாத நிலையால் ஒவ்வொரு தியேட்டரிலும் மின்சாரக் கட்டணத்தை்ககூட கட்ட முடியாது என்னும் யதார்த்தத்தை பல தியேட்டர் உரிமையாளர்கள் உணர்ந்ததால் பல தியேட்டர்கள் திறந்த வேகத்தில் மூடப்பட்டுவிட்டன.

மக்களுக்கு கொரோனா பயம் ஒரு புறம்.. இன்னொரு பக்கம் கொரோனா தாக்கத்தால் பல்வேறு வழிகளில் பண வரவு குறைந்ததால் அவர்கள் கையிலும் பணமில்லாத நிலை.. இதனாலேயே கூட்டம் தியேட்டர்களுக்கு வரவில்லை என்பதை யூகித்தனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

தற்போது மழைக் காலம் வேறு.. சினிமா தியேட்டர்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்தாலே மக்கள் வெளியில் வர மாட்டார்கள். இந்த நேரத்தில் நிவார் புயல் உட்பட பல்வேறு மழை, வெள்ளம் என்று வரிசையாக சோதனைகள் வந்து கொண்டிருக்க மக்களின் கவனம் வேறு பக்கம் திசை திரும்பியிருக்கிறது.

இந்தச் சூழலில் எப்படி இந்த சினிமா தியேட்டர்களை தொடர்ந்து நடத்துவது என்பது புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற மெட்ரோபாலிட்டன் ஊர்களில் இருக்கும் மால் தியேட்டர்களில்கூட இதே நிலைமைதான் என்றவுடன் என்ன செய்வது.. எப்படி இதிலிருந்து தப்பிப்பது என்று யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

சென்னையில் இருக்கும் ‘காசி’ தியேட்டர்ஸ் அதிரடி ஆபராக.. ஒரு டிக்கெட்டுக்கு இன்னொரு டிக்கெட் ப்ரீ என்று அறிவித்தது. போரூர் ‘ஜி.கே.’ தியேட்டரும் இந்த சலுகையை ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறது.

இதன் கூடவே கேண்டீனில் விற்கும் பாப்கார்ன் முதற்கொண்டு அனைத்துத் திண்பண்டங்களுக்கும் விலை குறைப்பை சில தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

இருந்தாலும் மக்கள் தைரியமாக வந்து செல்லவும், தாராளமாக பணம் செலவு செய்யவும் வேண்டுமெனில் புத்தம் புதிய படங்கள் தியேட்டர்களுக்கு வர வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் விரும்புகிறார்கள்.

அதிலும், மிகப் பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் தியேட்டர்களுக்கு வந்தால் மட்டுமே இனிமேல் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள். இல்லையெனில் இப்போது இருப்பதுபோல ஒற்றை இலக்கத்தில்தான் டிக்கெட்டுகளை விற்க முடியும் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

“ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், சிம்பு, கார்த்தி என்று ஸ்டார் நடிகர்கள் அனைவரும் வருடத்திற்கு குறைந்தபட்சம் 4 படங்களில் நடித்தாலே போதும்..

ஒவ்வொரு நடிகருக்கும், ஒவ்வொரு படத்திற்கும் 3 வாரங்கள் என்று வைத்துக் கொண்டால்கூட வருடம் முழவதும் கூட்டம் வந்து கொண்டேயிருக்கும். வசூலுக்குக் குறைவில்லாமல் இருக்கும். நாங்களும் பொழைப்போம்.. சினிமா துறையும் நன்றாக இருக்கும். நடிகர், நடிகைகள், சினிமா தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலையும் கிடைக்கும்.

இதை மனதில் வைத்தாவது அந்த நடிகர்கள் மின்னல் வேகத்தில் தங்களது படங்களை முடித்துக் கொடுத்து படத்தைத் தியேட்டர்களுக்கு கொண்டு வர வேண்டும்..” என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.

இதை நடிகர்களிடம் யார் போய் சொல்வது..?

Our Score