‘லிங்கா’ படத்தின் நஷ்டஈட்டு பிரச்சினை தமிழ்த் திரையுலகத்தினை வேறு பக்கமாக கொண்டு செல்கிறது.
‘லிங்கா’ படத்தினை எம்.ஜி. அடிப்படையில் வாங்கி வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்டஈட்டை தரவில்லை என்று சொல்லி வேந்தர் மூவிஸ் தயாரித்திருககும் ‘பாயும் புலி’ திரைப்படத்திற்கு வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கங்கள் தடை விதித்துள்ளன.
இது தொடர்பாக கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் கவுன்சிலில் சமாதானப் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வந்தது. ஆனால் பலனளிக்கவில்லை.
கோயம்பேடு ரோகிணி தியேட்டரின் உரிமையாளரும், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ரோகிணி பன்னீர்செல்வம் தலைமையில் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பு குழுவினர் இந்த விஷயத்தில் தீவிரமாக இருக்கின்றனராம். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.
இந்த நிலையில் தடாலடியான ஒரு முடிவினை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.
வரும் 4-ம் தேதி ரிலீஸாகவிருந்த ‘பாயும் புலி’ படத்திற்குத் தடையென்றால் அந்தத் தேதியில் எந்தப் படமும் ரிலீஸாகாது. அதோடு வரும் 11-ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் தமிழ்த் திரைப்படங்கள் திரையிடப்படுவது நிறுத்தப்படும் என்கிற முடிவை வெளியிட்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.
இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட்டு ஒரு முடிவு சொல்லும்படி கேட்டுள்ளார்கள்..!
பின்னர் நிருபர்களிடம் பேசிய தயாரி்பபாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, “பட அதிபர்களை ரோகிணி பன்னீர்செல்வம் மிரட்டியதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. போலீஸிடம் அவை ஒப்படைக்கப்படும். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்வரை புதிய படங்களை திரையிட மாட்டோம்..” என்றார்.
அரசால் என்ன செய்ய முடியும்.?
‘அனைவரும் பகிர்ந்து உண்போம்’ என்கிற வார்த்தையை தமிழ்த் திரையுலகத்தினர் ஒரு நிமிடம் உணர்ந்து யோசித்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும்..!