full screen background image

“அரசியலுக்கு வரப் போவது உறுதி…” – நடிகை நமீதாவின் பேட்டி..!

“அரசியலுக்கு வரப் போவது உறுதி…” – நடிகை நமீதாவின் பேட்டி..!

ஆல மரத்தின் நடுப்பாகம் சைஸுக்கு இருந்த நடிகை நமீதா இப்போது 20 கிலோ எடை குறைந்து முருங்கை மரம் லெவலுக்கு தெரிகிறார். அவரைப் பார்க்கிற யாரும் நம்ப முடியாமலேயே பார்க்கிறார்கள். காரணம், இப்படி மெலிந்த நமீதாவை யாருமே கற்பனை செய்துகூடப் பார்க்கவில்லை.

தனது உடல் மெலிவு எப்படி ஏற்பட்டது என்பது பற்றிய அனுபவத்தை நடிகை நமீதா பத்திரிகையாளர்களிடம்  இன்று  பகிர்ந்து கொண்டார். இதற்கான  பத்திரிகையாளர் சந்திப்பு  நிகழ்ச்சி இன்று மாலை ஆர்.கே.வி. அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நமீதா பேசும்போது, ”நான் படங்களில் நடித்துவந்தபோது திடீரென்று என் உடல் எடை அதிகமாகிக் கொண்டே இருந்தது. இதனால் எனக்கு பட வாய்ப்புகளும் குறைந்து விட்டன.

பிரியாணி போன்ற அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட மாட்டேன். அதற்குப் பதில் பீட்சா, ஐஸ்கிரீம் நிறைய சாப்பிடுவேன். என் உடல் எடை கூடியதற்கு அவைகள்தான் காரணம் என்று நினைக்கிறேன்.

உடல் எடை கூடிய பிரச்சினையால் மிகவும் மனச் சோர்வுக்கு ஆளானேன். இது பற்றி நான் அடைந்த வருத்தமும் உளைச்சலும் எளிதில் விளக்கிட முடியாதவை. எடையைக் குறைக்க எவ்வளவோ விதத்தில் முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னென்னவோ பயிற்சி, சிகிச்சை முறைகள்  எல்லாவற்றையும் பின்பற்றினேன். பலனில்லை. 

மிகவும் வெறுத்துப் போய்விட்டேன். எப்படியாவது உடலைக் குறைத்தாக வேண்டும்.. என்று வாழ்வா சாவா போராட்டத்தில் இறங்கிவிட்டது என் மனசு. அப்படிப்பட்ட சூழலில்தான் இந்த சாக்ஷி வெல்னஸ் பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மூலம் கேள்விப்பட்டேன். 

முதலில் எனக்கு நம்பிக்கையில்லை. ஏனென்றால் எவ்வளவோ பார்த்தாகி விட்டது. எடை மட்டும் குறையவேயில்லையே. இப்படித்தான் அவர்களையும் பார்த்தேன். நினைத்தேன்.

ஆனால் இவர்களுடைய சிகிச்சைக்குப் பிறகு முதலில்  ஒன்றரை கிலோ எடை குறைந்தது. எனக்கே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது, பிறகுதான் இந்த நிறுவனத்தின் மீது எனக்கு நம்பிக்கை வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய பயிற்சியை மே மாதம்வரையிலும் தொடர்ந்தேன். அதன் விளைவாக 18 கிலோ எடையைக் குறைத்திருக்கிறேன்.

என்னை இப்போது பார்ப்பவர்கள்  என் உணவு பழக்கம் பற்றி கேட்கிறார்கள். அரிசி உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன். காபி, டீ, கிடையாது. நான் ஒரு பீட்சா பிரியை. பீட்சா டோமினோவில் பிளாட்டினம் மெம்பர்  நான், அந்த அளவுக்கு பீட்சா சாப்பிட்ட நான் இப்போது மாதம் ஒரு பீட்சா சாப்பிடுகிறேன்..

மருத்துவ சிகிச்சை, பயிற்சி, உணவு முறை இவற்றை இந்த நிறுவனத்தினர் சரி வர பார்த்துக் கொண்டார்கள். கூடுதலாக எனக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் கொடுத்தார்கள். இன்னமும் எடையைக் குறைத்து சிக்கென்று வருவேன் என்கிற நம்பிக்கையுடன் இருக்கிறேன். இப்போது நானே இவர்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் ஆகிவிட்டேன். மற்றவர்களுக்கும் இந்த நிறுவனத்தை சிபாரிசு செய்கிறேன்.

நான் இப்போது அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். அதற்காக இன்னும் 8 கிலோ குறைய வேண்டும். இதற்காக இன்னமும் தொடர்ந்து பயிற்சிகளை செய்து வருகிறேன்..” என்றார்.

அரசியல் ஈடுபாடு பற்றிக் கேட்டபோது, “எனக்கு அரசியல் ஆர்வம், ஈடுபாடு உண்டு. நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன். இரண்டு முக்கிய கட்சிகளிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் ஒன்றை தேர்வு செய்வேன். வருகிற சட்டசபை தேர்தலில் அந்தக் கட்சிக்காக நான் பிரச்சாரம் செய்வேன்.” என்றார்.

திருமணம் பற்றி கேட்டபோது, “திருமணத்துக்காக நான் உடல் மெலியவில்லை. படங்களில் தொடர்ந்து நடிப்பதற்காகத்தான் மெலிந்திருக்கிறேன். என்றாலும் நானும் திருமணம் செய்து கொள்ளத்தான் போகிறேன். ஒரு கோடீஸ்வரரையோ, வசதி படைத்தவரையோ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையில்லை. அவர் எளிமையானவராக இருந்தால்போதும்.  திருமணத்துக்குப் பின்னர் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்வேன்..” என்றார்.

“படங்கள் இல்லாமல் மார்க்கெட் இழந்த நடிகைகள், சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதைப் போல நீங்களும் போவீர்களா?” என்று கேட்டபோது, “என் சொந்த ஊர் குஜராத் என்பதே இப்போது எனக்கு மறந்து விட்டது. ஹோலி, ராக்கி ரக்ஷாபந்தன் எல்லாம் மறந்து விட்டது. எனக்கு  இங்குள்ள  பொங்கல்தான். நினைவுக்கு வருகிறது. தமிழ்நாடு. சென்னையை விட்டு எங்கேயும் செல்ல மாட்டேன்.. அதுலேயும் என் மச்சான்ஸ்களை எப்படி என்னால் விட்டுவிட்டுப் போக முடியும்..?” என்றார்.

அதானே..? நமீதா இல்லாத தமிழகத்தை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எங்கிருந்தோ வந்த நக்கத் என்கிற குஷ்புவை இன்றைக்கும் ஆராதித்துக் கொண்டுதானே இருக்கிறது.. முயற்சி செய்யுங்கள் நமீதா.. ஒருவேளை நீங்களே ஒரு நாள் தமிழகத்தின் முதலமைச்சராக வந்தாலும் வரலாம்..! யார் கண்டது..?

Our Score