தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்குள் இப்போது ‘ஸ்டார்ட்-ஆக்சன்’ சொல்லாமலேயே டிஷ்யூம் டிஷ்யூம் சண்டை காட்சிகள் நடந்தேறி வருகின்றன.
ச்சும்மாவே ரங்கு ராட்டினம் ஆடுவதை போல செயல்படுவார்கள் சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள். அவர்கள் இந்த முறை நடந்த தேர்தலில் தனி அணியாக நிற்கப் போவதை உணர்ந்து அவர்களைத் தடுத்து அவர்களது அணியின் சார்பிலான ஒட்டு மொத்த ஆதரவைப் பெற வேண்டி அவர்களது அணியின் முக்கியப் பிரமுகரான திரு.ராதாகிருஷ்ணனை தங்களது அணியின் பொருளாளர் வேட்பாளராக இழுத்தது கேயார் அணி.
எஸ்.ஏ.சி.-தாணு அணியை வெளியேற்று்ம ஒரு அம்ச திட்டத்தை லட்சியமாகக் கொண்டிருந்த சின்ன பட்ஜெட் அணியினரும், கேயார் அணியினரும் தேர்தலில் ஒருமித்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். ஆனால் வெற்றி பெற்ற பின்னர் முதலாளிகளான பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுடன், சங்கத்தின் பொருளாளர் ராதாகிருஷ்ணனால் இணைந்து பணியாற்ற முடியவில்லை.
சங்கத்தில் நலிவடைந்த நிலையில் இருக்கும் உறுப்பினர்களுக்கு பொங்கல் போனஸ் தரப்பட வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் போர்க்கொடி தூக்கினார் பொருளாளர் ராதாகிருஷ்ணன். மற்றவர்கள் அதைக் கடுமையாக எதிர்க்க.. “நீங்க வந்தா வாங்க.. வரலைன்னா போங்க..” என்று சொல்லிவிட்டு தான் மட்டுமே தனியாக விழா எடுத்து தன்னால் முடிந்த உதவிகளைச் சிலருக்குச் செய்திருக்கிறார் பொருளாளர்.
அன்றிலிருந்து பொருளாளருடன் ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தி வரும் மற்ற நிர்வாகிகள் ஒரு கட்டத்தில் மோத முடியாமல் தவித்தனர். சங்கத்தின் அனைத்துவித காசோலைகளுக்கும் செக்கில் கையெழுத்து வாங்க வேண்டியிருந்ததால் அவருடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கிறார்கள். ம்ஹூம் பலனில்லை..
இனி அவரை விட்டுவிட்டு நாமளே சங்கத்தை நடத்திவிடுவோம் என்று கேயார் தரப்பு தீர்மானித்ததை தாணு தரப்பினர் ஸமெல் செய்துதான் இப்போது கேயார் அணியினர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 10-ம் தேதிக்குள்ளாக சங்கத்தின் பொதுக்குழுவைக் கூட்டி அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்காவிட்டால் தாணு அணி தனியே பொதுக்குழுவைக் கூட்டிக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த நிலைமையில் சங்கத்தின் டீக்கடை செலவுக்குக்கூட பொருளாளரை தேடும் சூழல் இருந்தும், அவருடன் சகஜமாகப் பேசும் சூழல் யாருக்கும் இல்லாததால், சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் இந்தியன் வங்கிக்கு தற்போதைய நிர்வாகிகள் ஒரு கடிதமெழுதி செக்கில் கையெழுத்திடும் உரிமையை பொருளாளர் இழந்துவிட்டதால் தாங்களே அதில் கையெழுத்திடுவோம் என்று சொல்லி சில செக்குகளை பட்டுவாடாவும் செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து கோர்ட் படியேறியிருக்கிறார் பொருளாளர் ராதாகிருஷ்ணன். நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட கோர்ட்.. தயாரிப்பாளர் சங்கத்தின் சேமிப்புக் கணக்கு இருக்கும் வங்கியின் காசோலையில் மற்றவர்கள் கையெழுத்திட்டு அனுப்பவும், அதனை அனுமதிக்க இந்தியன் வங்கிக்கு தடையாணை பிறப்பித்தும் உத்தரவிட்டுள்ளார்கள். இந்த வழக்கு மீண்டும் வரும் மார்ச் 20-ம் தேதியன்று விசாரணைக்கு வருகிறதாம்.
போகிற போக்கை பார்த்தால் சொத்துக் குவிப்பு வழக்கின் அப்பீல் மனுக்களைவிடவும், தயாரிப்பாளர் சங்க வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் போலிருக்கிறது..!