நடிகர்-இயக்குநர் சுந்தர்.சி மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொலை மிரட்டல் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய குற்றப் பிரிவு போலீசார் அது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை அடையாறு, இந்திரா நகரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் எம்.முத்துராமன். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நடிகர் சுந்தர்.சி மீது புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் “நான் கடந்த 35 வருடங்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளராக இருக்கிறேன். எம்.எம்.கம்பைன்ஸ் என்ற பட நிறுவனத்தை நடத்தி வருகிறேன். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை நடிக்க வைத்து நிறைய வெற்றிப் படங்களை தயாரித்துள்ளேன்.
ரஜினிகாந்த் நடித்த ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படம், நான் தயாரித்து வெளியிட்ட வெற்றிப் படம். அந்த படத்தை ரீமேக் செய்து திரையிட முடிவு செய்தேன். அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்த போது, அந்த படத்தின் கதையை திருடி, நடிகர் சுந்தர்.சி நடித்த ‘அரண்மனை’ திரைப்படம், தயாராகி வருவது தெரிய வந்தது.
நான் அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது சுந்தர்.சி என்னிடம் சமாதான பேச்சு நடத்தி ரூ.50 லட்சம் தருவதாக சொன்னார். மேலும், ‘அரண்மனை’ படத்தின் இந்தி, தெலுங்கு பட விற்பனையிலும் பங்கு தருவதாக தெரிவித்தார்.
‘அரண்மனை’ படம் வெளியாகி, நல்ல லாபம் கிடைத்துள்ளது. ஆனால் எனக்கு தர வேண்டிய பணத்தை சுந்தர்.சி தரவில்லை. பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்..” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.