full screen background image

பிரேமலு – சினிமா விமர்சனம்

பிரேமலு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் நஸ்லென் நாயகனாகவும், மமிதா பைஜூ நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் அல்தாப் சலீம், ஷ்யாம் மோகன், அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், சங்கீதா பிரதாப், ஷமீர்கான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ஏ.டி.கிரீஷ், தயாரிப்பாளர்கள் – பகத் பாசில், திலீஸ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன், எழுத்து – ஏ.டி.கிரீஷ், கிரன் ஜோஷி, இசை – விஷ்ணு விஜய், ஒளிப்பதிவு – அஜ்மல் சாபு, படத்தொகுப்பு – ஆகாஷ் ஜோஸப் வர்கீஷ், பத்திரிக்கை தொடர்பு – டீம் எய்ம்.

நாயகன் நஸ்லென் தற்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்திருக்கிறார். அப்பா உள்ளூரில் பலசரக்குக் கடை வைத்திருக்கிறார். வீட்டில் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையில் சண்டை. இருவரும் ஒன்றரை வருடங்களாக பேசிக் கொள்வதில்லை. இந்தச் சூழலில் வீட்டில் இருக்க முடியாமல் தவிக்கிறார் நாயகன்.

அதோடு கல்லூரியில் நாயகன் ஒருதலையாய் காதலித்த பெண்ணும் நழுவிவிட பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார் நாயகன். லண்டனுக்கு வேலைக்குப் போக முயற்சி செய்கிறார். விசா கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் உள்ளூர்க்கார நண்பனான அல்தாப் தான் ஹைதராபாத்திற்கு கேட் தேர்வுக்குப் பயிற்சிக்கு செல்வதாகச் சொல்ல.. தானும் அவனுடன் ஹைதராபாத்திற்குப் பயணப்படுகிறான் நாயகன்.

நாயகி மமிதா புதிதாக ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்வதற்காக ஹைதராபாத்துக்கு வந்திருக்கிறார். இந்த நேரத்தில் நாயகனும், நாயகியும் ஒரு திருமண நிகழ்வில் சந்திக்கிறார்கள்.

நாயகனின் வெள்ளெந்தியான பேச்சும், சிரிப்பும் நாயகிக்கு அவன் மீது ஒரு கவனத்தைக் கொடுக்கிறது. ஆனால், இதனை காதலாக நினைக்கும் நாயகன் நாயகியை தன் காதலியாகவே நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

நாயகியின் உடன் வேலை செய்யும் ஷ்யாம் மோகனும் நாயகியை விரும்புகிறார். நாயகியோ இவர்கள் இருவரையுமே காதலர்களாக நினைக்கவில்லை. நண்பர்களாகவே நினைத்துப் பழகிக் கொண்டிருக்கிறாள். இந்த முக்கோணக் காதல் கடைசியில் என்னவாகிறது என்பதுதான் இந்தக் காதல் ப்ளஸ் காமெடி கலந்த திரைப்படத்தின் கதைச் சுருக்கம்.

மலையாளத்தில் சில படங்களில் நாயகர்களுக்கு நண்பனாக சின்னக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நஸ்லென், முதல்முறையாக தனி ஹீரோவாக இந்தப் படத்தில் நடித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

வெள்ளந்தியான முகம், அறிவுகெட்டத்தனமான பேச்சு, ரெண்டுங்கெட்டானாக செயல்பாடுகள் என்று சின்னப் பையனுக்கேற்ற கேரக்டர் ஸ்கெட்சுக்கு ஏற்ற முகத்தோற்றத்தில் இருப்பதால் நெஸ்லின், இந்தக் கதாப்பாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்.

பல இடங்களில் அப்பாவியாய் பேசி, கேள்வி கேட்டு நம்மை சிரிக்க வைக்கும் நாயகன் சிறுபிள்ளைத்தனமான காதலினால் ஏற்படும் தோல்வியால் கண்ணீர்விட்டு அழுதும்கூட நமக்கு அவரது சோகம் சிறிதும் தொற்றவில்லை.

நாயகியாக நடித்திருக்கும் மமீதா பைஜுதான் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். சாய் பல்லவி, பிரேமம்’ படத்தில் எப்படி ‘மலர் டீச்சராக’ வந்து தென்னிந்தியாவையே கவர்ந்திழுத்தாரோ.. அதேபோல் இந்த மமீதா பைஜூவும், இந்த ஒரு படத்தின் மூலமாகவே தென்னிந்தியாவில் ஓவர் நைட்டில் பிரபலமாகிவிட்டார்.

குழந்தைத்தனமான முகம்.. அழகான உதடுகள்.. நெற்றியில் தொங்கிக் கொண்டிருக்கும் நான்கைந்து முடிகள்.. முகத்தில் எப்போதும் இருக்கும் சிரிப்பு.. பிரகாசிக்கும் வனப்பு.. அழகான உடலமைப்பு என்று பார்த்தவுடன் இளைஞர்களுக்குப் பிடித்தாற்போன்ற தோற்றத்தில் இருப்பதால் இவர் பேசினாலே திருவாசகம்.. பாடினாலே சுப்ரபாதம்.. ஆடினாலே பரதம் என்ற லெவலுக்கு படம் நெடுகிலும் இவரை அணு, அணுவாக ரசித்துக் கொண்டாடுகின்றனர் ரசிகர்கள்.

சிரித்துக் கொண்டேயிருக்க நினைப்பவரை மொக்கை ஜோக்குகளை சொல்லி சிரிக்க வைக்கும்போது பைஜூவின் சிரிப்பே ஒரு தனி அழகு. தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் அனைவரையும் ஓவர் டேக் செய்து காட்டி தன் தனித்துவத்தை காட்டும் அளவுக்கு திறமைசாலியாக இருக்கிறார்.

கிளைமாக்ஸ் காட்சியில் “அதான் பைனாகுலர்ல பார்த்தனே” என்று கோபம் குறையாமல் பேசும்போது தியேட்டரே கை தட்டலில் ஆடிப் போகிறது. இந்த மமீதா பைஜு நிச்சயம் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான நடிகையாக வலம் வருவார். வரட்டும். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

நாயகனின் நண்பனாக நடித்திருக்கும் சங்கீத் பிரதாப், அவ்வப்போது தனது டைமிங்சென்ஸ் வசனத்தின் மூலம் சிரிப்பைத் தூண்டிவிடுகிறார். நாயகனின் காதலுக்கு வில்லனாக வரும் ஷ்யாம் மோகனின் வில்லத்தனமும், ஜே.கே.’ என்ற கோட்வேர்டை வைத்து, படம் முழுவதும் அவர் செய்யும் கிறுக்குத்தனமும் நம்மை சிரிக்க வைத்திருக்கிறது.

நாயகியின் வித்தியாசமான முற்போக்குத்தனமான அப்பா, அம்மா, நாயகனின் சண்டைக் கோழி அம்மாவும், அப்பாவும் என்று இரண்டு வேறுபட்ட கதாப்பாத்திரங்களைக் கொண்டவர்கள், எப்படி சம்பந்திகளாக ஆவார்கள் என்பதை நமது பார்வைக்கே விட்டுவிட்டார் இயக்குநர்.

மேலும் நாயகியின் தோழியாக நடித்திருக்கும் அகிலா பார்கவன், மீனாட்சி ரவீந்திரன், அலுவலக தோழர்களாக நடித்திருக்கும் சமீர்கான், அல்தாப் சலீம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

கேரளா, சென்னை, ஐதராபாத் என்று மூன்று முக்கிய நகரங்களையும் வித்தியமாசன கோணங்களில் வேறுவிதமான லொகேஷன்களில் காட்சிகளைப் படமாக்கி நமக்குப் பெரும் ஆர்வத்தையும் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். இரவில் விளக்குகளின் ஒளியில் சென்னையும், ஐதராபாத்தும் ஜொலிக்கின்றன.

பாடல் காட்சிகளையும் மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் சாலை பயணக் காட்சிகளில்கூட நடிப்பு, கதையின் முடிச்சு அவிழும் இடம் என்று படத்தின் தன்மை கெடாத வண்ணம் படமாக்கி சிறப்பு செய்திருக்கிறார்.

இசையமைப்பாளர் விஷ்ணு விஜயின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். மாண்டேஜ் காட்சிகளில் காதலைக் கடத்தியிருப்பதால் அதுவும் ரசனையாகவே உள்ளது. காட்சிக்கு காட்சிக்கு ரசிக்கும்படி படத்தை தொகுத்தளித்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஆகாஷ் ஜோசப் வர்கீஸ்.

படம் காதல் கதைதான் என்றாலும் இது உண்மையான காதல் இல்லை. வெறும் இனக் கவர்ச்சிதான். இன்பாச்சுவேஷன்தான்.

வெறுமனே அழகாக இருந்தாலே போதுமா..? காதலித்துவிடலாமா..? முதலில் காதல் என்பது எதற்காக..? அதன் அடித்த படியென்ன..? இன்னும் வேலைக்கே போகலை..! நாலு காசு சம்பாதிக்கலை..! அந்தப் பெண் படித்து வேலைக்குப்போய் மாதம் 35000 ரூபாய் சம்பாதிக்குது. மெச்சூர்டான பொண்ணு.. அது இந்த வேலை வெட்டியில்லாத வெட்டிப் பயலுக்கு செட்டாகுமா..? இந்த நிலைமைல காதல் ரொம்ப முக்கியமா..?

நாயகனிடம் நாயகிக்குப் பிடித்திருப்பது அவனது மொக்கை ஜோக்குகள்தான். வேறொன்றுமில்லை. அது ஒன்றே வாழ்க்கைக்கு போதுமா..? திருமணத்திற்குப் பொருந்துமா..? கடைசிவரையிலும் இதே மனோபாவத்தில் இருப்பவருடன் குப்பை கொட்ட முடியுமா..?

இதெல்லாம் இயக்குநருக்கும் தெரியுமென்றாலும் திரையுலக வழக்கப்படி ரசிகர்களைத் தூண்டிவிட்டு அதைக் காசாக்குவது மட்டும்தான் இயக்குநரின் வேலை என்பதால் அதை மட்டும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

சாதாரண காதல் கதைதான் என்றாலும், நமக்கு சலிப்பு ஏற்படாத வண்ணம் காட்சிக்குக் காட்சி நகைச்சுவையை தெறிக்க வைத்து படத்தைக் கொண்டாட வைத்திருக்கிறார் இயக்குநர்.

மிகப் பெரிய திருப்பங்கள் எதுவும் இல்லாமல் மிக சாதாரணமான ஒரு கதையில் சச்சின், ரீனு என்ற இரண்டு கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இளைஞர்கள் ஓஹோவென்று கொண்டாடும்வகையில் ஜாலியான ஒரு காதல் படத்தை கொடுத்திருக்கிறா இயக்குநர்.

காதல் படங்களுக்கே உரித்தான சோகங்கள் இருந்தாலும், நகைச்சுவை பாணியில் அடுத்தடுத்த காட்சிகளில் அதை ஒதுக்கிவிட்டு பாஸிட்டிவ்வாக அனைத்தையும் நினைப்பதுபோல திரைக்கதையை நகர்த்தி இன்றைய இளைஞர்கள், மற்றும் அனைத்து வயதினருக்குமான காதல் உணர்வை இந்தப் படத்தில் தூண்டிவிட்டிருக்கிறார் இயக்குநர்.

இதுவே இந்தப் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு காரணமாக அமைந்துவிட்டது..!

RATING : 3.5 / 5

Our Score