பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R.முருகானந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பூர்வீகம்’.
இப்படத்தில் கதாநாயகனாக கதிர் நடித்துள்ளார். கதாநாயகியாக மியாஶ்ரீ நடித்துள்ளார். மேலும் போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பு – பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி, தயாரிப்பாளர் – டாக்டர் R.முருகானந்த், எழுத்து, இயக்கம் – G. கிருஷ்ணன் D.F.Tech, ஒளிப்பதிவு – விஜய் மோகன் D.F.Tech, இசை – சாணக்யா, படத் தொகுப்பு – சங்கர்.K, பாடலாசிரியர் – ஏகாதசி, கலை இயக்கம் – செல்லம் ஜெயசீலன், பாடகர்கள் – சாய் விக்னேஷ், மது ஐயர், K.பார்த்திபன், G.அமிர்தவர்ஷினி, டாக்டர் R.முருகானந்த், நிர்வாக தயாரிப்பாளர் – K.சந்தோஷ், பத்திரிக்கை தொடர்பு – செல்வரகு (Vistas Media).
நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவசாயம். இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தைவிட்டு படிப்பிற்காகவும், தொழிலுக்காகவும் முழுமையாக இடம் பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.
நகரத்திற்கு இடம் பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும், அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் விவசாய நிலங்கள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், மக்கள் தொகை பெருகிக் கொண்டே போகிறது. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடும். ஆகவே தனி மனிதனோ அரசாங்கமோ விவசாய நிலத்தை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும்.
மேலும்… படித்தவனோ பாமரனோ… அரசனோ.. ஆண்டியோ, யாராக இருந்தாலும் அவன் வாரத்தில் ஒரு நாளாவது விவசாயத்தில் ஈடுபட வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் விவசாயத்தில் ஈடுபட்டால் வளம் பெருகும்.. வாழ்வும் சிறக்கும்.. இதைத்தான் இந்த ‘பூர்வீகம்’ திரைப்படத்தில் ஆழமாக சொல்லியுள்ளார்கள்.
கிராமத்தில் பிறந்து வளர்ந்த இப்போதைய இளைஞர்கள் பலரும் உலகமயமாக்கல் என்ற திட்டத்தின் கீழ் நகரமயமாக்கல் ஆக்கப்பட்ட பல ஊர்களில் தங்களுடைய பூர்வீகத்தை தொலைத்து பணம் சம்பாதிப்பது என்கின்ற ஒரே ஒரு கொள்கையோடு உழன்று கொண்டிருக்கிறார்கள்
தங்களுடைய கடைசிக் காலத்தில்தான் அவர்கள் பிறந்து வளர்ந்த அந்த மண்ணை நேசிக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு தோன்றுகிறது 50 ஆண்டுகளுக்கு முன்பாக ஊரை விட்டு போனவர்கள் எல்லாம், 50 ஆண்டுகளுக்கு பிறகு பேரன், பேத்திகளெல்லாம் எடுத்து அவர்கள் அவரவர் விரும்பியபடி உலகத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கின்ற சூழலில்…. தாங்கள் மட்டும் அமைதியாக வாழ விரும்பி தங்கள் பிறந்த மண்ணுக்கே திரும்பவும் வந்து அடைக்கலம் ஆகிறார்கள்.
அந்தப் பிறந்த மண்ணை மறந்துவிடாமல் இருங்கள் என்பதை சொல்வதற்காக வந்திருக்கும் கிராமிய மனம் கமலும் திரைப்படம்தான் இந்த பூர்வீகம்.
போஸ் வெங்கட் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய அப்பாவான சங்கிலி முருகன் இப்போதும் விவசாய மட்டுமே தன்னுடைய ஒரே தொழில் என்கின்ற கொள்கையில் இருப்பவர். போஸ்ட் வெங்கட் தன்னுடைய மகன் கதிரை நல்ல படிப்பு படிக்க வைத்து அவனை அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார். இதற்காக தன்னுடைய அப்பா, மனைவியின் எதிர்ப்புகளையும் மீறி மகன் கதிரை வெளியூர் பள்ளியின் ஹாஸ்டலில் தங்கிப் படிக்க வைத்து அவனை பட்டதாரியாக்க, அவனும் அரசு வேலையில் சேர்ந்து விடுகிறான்.
ஆனால் அந்த மகன் நகரத்திலேயே படித்து வளர்ந்து சூசனை திருமணம் செய்து கொண்டு நகரத்திலேயே செட்டில் ஆகிறார். இப்பொழுது கிராமத்தில் இருக்கும் போஸ் வெங்கட்டும் அவரது மனைவியும் மருமகளுடன் ஒத்துப் போக முடியாமல் தவிக்கிறார்கள். கதிரின் மனைவி தன்னுடைய பிறந்த வீட்டு குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்து கதிரின் பெற்றோர்களை உதாசீனப்படுத்துகிறார்.
பேரனின் முதல் பிறந்த நாள் விழாவுக்கு வந்தவர்களுக்கு மிகப் பெரிய அவமானம் நேரிட அவர்கள் அங்கே இருக்க பிடிக்காமல் மறுபடியும் உடனே ஊருக்கு கிளம்புகிறார்கள். இது கதிருக்கும், அவனுடைய பெற்றோர்களுக்கும் இடையிலான உறவை பிரித்து விடுகிறது.
கதிரின் மகனும் இப்பொழுது வளர்ந்து அவனும் கல்லூரிக்கு செல்லும் சூழல் வர அந்த நேரத்தில் கதிரின் குடும்பத்தில் எழும்பும் பல பிரச்சனைகள் கதிருக்கு அவன் யார் என்பதையும் அவனுடைய பூர்வீகத்தை தேடி போக வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்துகிறது.
அது என்ன வகையான சூழல் அவனுக்கு நேர்ந்த பிரச்சனைகள்தான் என்ன.. கதிர் கடைசியில் தனது பெற்றோருடன் இணைந்தானா இல்லையா.. என்பதுதான் இந்தப் பூர்வீகம் படத்தின் திரைக்கதை.
கிராமத்து மனிதர்களின் சாடையில் இருப்பவர்களை மட்டுமே இந்து படத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதில் இயக்குநர் உறுதியாக இருந்திருக்கிறார் போலும்..! பார்த்தவுடனேயே கிராமத்து மக்களை நினைவுபடுத்துவது போலவே அனைத்து கதாபாத்திரங்களுக்கும் நடிகர்களை தேர்வு செய்து கச்சிதமாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.கிருஷ்ணன்.
போஸ் வெங்கட்டும், ஸ்ரீரஞ்சனியும்தான் படத்தைப் பெரிதும் தாங்கிப் பிடித்து இருக்கிறார்கள். அவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட போர்ஷன்தான் படத்தில் உயிர் நாடி. அதுதான் படத்தில் நம்மை மனம் கொள்ள வைத்திருக்கிறது.
மகனின் வீட்டில் தங்கள் படும் அவமானங்களை சகிக்க முடியாமல் இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தாலும் இதற்கு மேல் இருக்க முடியாது என்கின்ற நிலைமை வந்தவுடன் அவர்கள் வெளியேறும்விதமும், ஊர் வந்து சேர்ந்தவுடன் அவர்கள் படுகின்ற துயரத்தையும் நிச்சயம் தியேட்டருக்கு படம் பார்க்க வருகின்றவர்களில் ஒரு 50% பேராவது அனுபவித்து இருப்பார்கள்.
போஸ் வெங்கட் இளம் வயது கதாபாத்திரத்தையும், வயதான கதாபாத்திரத்தையும் வெவ்வேறுவிதமாக செய்திருக்கிறார். தன்னுடைய தந்தை சங்கிலி முருகனை எதிர்த்து தன் மகனை படிக்க வைத்துவிட வேண்டும் என்று அவர் செய்கின்ற செயலும், பேசுகின்ற பேச்சும் நமக்கு ரொம்பவும் நியாயமாகத்தான் படுகிறது.
அதேபோல் முதிய வயதில் தன் மகன் நல்லா இருந்தாலே போதும். தனக்கு வாழ்க்கை அவ்வளவுதான் என்று தனக்குத்தானே முடிவு செய்து கொண்டு சொத்துக்களை எல்லாம் விற்று பேரனை படிக்க வைக்க முனையும் அந்தக் கதாபாத்திரத்தில் நிஜமாவே போஸ்ட் வெங்கட் வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கங்கிராட்ஸ் சார்.
அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி இன்னொரு பக்கம் இந்த படத்திற்கு ஒரு வெயிட்டேஜை ஏற்றியிருக்கிறார். மருமகள் செய்கின்ற அட்டூழியங்களையும் தாங்க முடியாமல் தவித்து தங்களுக்கு மரியாதைதான் முக்கியம் என்பதை உணர்ந்து அந்த வீட்டிலிருந்து வெளியேறுகின்ற காட்சிகளில் மிக சிறப்பாக நடித்திருக்கிறார்.
அதேபோல் வயதான காலத்தில் கிராமத்தில் தன் பேரன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவர் செய்கின்ற அனைத்திற்கும் தலை ஆட்டும்போது, ஒரு நிஜமான ஒரு கிராமத்து பாட்டியை நம் நினைவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
படத்தின் முற்பாதியில் ஸ்ரீரஞ்சனியின் இளம் வயது கேரக்டரில் நடித்திருக்கும் மியாஸ்ரீ பிரமாதமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் ஃபர்ஸ்ட் நைட் சீன்களிலும், அந்த உறவு சம்பந்தமான காட்சிகள்… அதை ஏற்கவும், முடியாமல்.. அது என்னவென்று தெரியாமல் தனியாய் தவிக்கின்ற கதாபாத்திரத்கில் மிகச் சிறப்பாக நடத்திருக்கிறார்.
ஹீரோ கதிர் இளம் வயது கதிர் ஆகவும், முதிய வயது கதிராகவும் நடித்திருக்கிறார். இளம் வயதைவிட முதிய வயதில் தன்னுடைய அப்பாவை சமாளிக்க வேண்டும்.. மனைவியை சமாளிக்க வேண்டும்.. மனைவி வழி உறவினர்களை கவனிக்க வேண்டும்… என்று இரு தலைக் கொள்ளி எறும்புபோல தவிக்கும் இன்றைய குடும்பத் தலைவனின் நிலைமையை அப்படியே தன்னுடைய கதாபாத்திரத்தில் காண்பித்திருக்கிறார் கதிர்.
மாமனார், மாமியாரை புரிந்து கொள்ளாமல் அலட்சியப்படுத்தும் சூசன் பின்னர் பல வருடங்கள் கழித்து தன்னுடைய சொந்த அண்ணனே தனக்கு வில்லனாகிகிவிட்ட பின்பு, நிஜம் உணர்ந்து தன்னுடைய மாமனார் மாமியார் உடன் நட்பு பேண நினைப்பதும், அவர்கள் உதவிகளை செய்து தன்னுடைய குணத்தை மாற்றுகின்ற இடத்தில் நம்மை கவர்ந்திருக்கிறார்.
மேலும் சங்கிலி முருகன், இளவரசு, ஒ.எஸ்.வி.சேகர், பசங்க சிவகுமார் என்று மற்ற வேதங்களில் நடித்தவர்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
விஜய் மோகனின் ஒளிப்பதிவு அந்த கிராமத்து அழகையும், மக்களையும் மிக யதார்த்தமாக அழகாக காட்டியிருக்கிறது. ஆனாலும் படம் நெடுகிலும் ஒரு தரமான ஒளிப்பதிவாக இல்லாமல் சற்று குறைந்த அளவுக்கான ஒளிப்பதிவை மட்டுமே கொடுத்திருக்கிறார்கள். ஒருவேளை பட்ஜெட்தான் காரணமாக இருக்குமோ என்னவோ தெரியவில்லை.
சாணக்கியாவின் இசையமைப்பில் பாடல்கள் அனைத்துமே இனிமையாக இருக்கிறது. அதேசமயம் பின்னணி இசை ரொம்பவும் நாடகத்தனமாக இல்லாமல் ஓரளவுக்கு நம்முடைய கவனத்தை கதைக்குள்ளாக புகுத்தும்படி இசைத்திருக்கிறார்.
இந்தப் படத்தை எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் ஜே.கிருஷ்ணன் தங்களுடைய பூர்வீகத்தை விட்டு விலகி வெகு தூரம் சென்று பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு தேவையான ஒரு கருத்தைதான் இந்தப் படத்தில் முன் வைத்திருக்கிறார்.
படிப்புக்காகவோ, தொழிலுக்காகவும் ஊரை விட்டு நகரத்திற்கு சென்று அங்கேயே உழன்று கொண்டிருக்கும் இளைஞர்கள் அந்த நகரம் காட்டும் சொகுசான வாழ்க்கையிலேயே தன்னை வளர்த்தவர்களையும், தான் வளர்ந்த கிராமத்தையும் தன்னை வளர்த்தெடுக்க உதவிய உறவுகளையும் அப்படியே கைவிட்டுவிட்டு தாங்களே சுயமாக வளர்ந்ததுபோல காட்டுவது அவருடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை எல்லாம் ஏற்படுத்தும் என்பதை இந்தப் படம் சுட்டிக் காட்டுகிறது.
அதே சமயம் மற்ற தொழில்களைப் போல் விவசாயமும் வளர வேண்டும் என்பதையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குநர். குறையாக பார்க்கப் போனால் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் அழுத்தமும், இயக்கத்தில் இன்னும் கொஞ்சம் தெளிவும் இருந்திருந்தால் இந்தப் படம் நிச்சயம் மிக சிறப்பான திரைப்படம் என்று நம்மை சொல்ல வைத்திருக்கும். இப்போது சிறப்பான திரைப்படம் இந்த ‘பூர்வீகம்’ என்று மட்டுமே சொல்ல வைத்திருக்கிறது.
பூர்விக ஊரும், மண்ணும் ஒவ்வொருவருக்கும் ஒரு சொர்க்கம் என்பதை இந்த படத்தைப் பார்த்தவர்கள் நிச்சயமாக உணர்ந்து கொள்வார்கள்..!
RATING : 3.5 / 5