இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அருண் பாலாஜி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா, ஜான் விஜய், மாறன், அன்பரசி, சுகாசினி சஞ்சீவ், ஓவியர் ஷா, நவீன் ஜார்ஜ் தாமஸ், ஆண்டனி, பாரி இளவழகன், ஆறுமுகம் வேல், ஜெ.பி.குமார், கலா குமார், சேகர் நாராயணன், மாலதி அசோக் நவீன், மாதவிராஜ், அபி ராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – சீன் ரோல்டன், ஒளிப்பதிவு – ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பு – சங்கத்தமிழன், கலை இயக்கம் – ஆகன் ஏகாம்பரம், நடன இயக்கம் – சாண்டி, சண்டை இயக்கம் – திலீப், உடைகள் வடிவமைப்பு – ஜி.சுரேன், பத்திரிக்கை தொடர்பு – குணா.
(𝗨/𝗔) Tamil – RUN TIME ⏰: 𝟮 𝗛𝗼𝘂𝗿𝘀 😎 29 𝗠𝗶𝗻𝘂𝘁𝗲𝘀.
குடி குடியை கெடுக்கும். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. இது போன்ற சொல்லாடல்கள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தில் வலம் வந்து கொண்டிருந்தாலும், வருடாவருடம் மது அருந்துபவர்கள், மது பிரியர்கள், மது குடியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்த மதுப் பழக்கம் ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை பாதிப்பது மட்டுமல்லாமல், அவனது குடும்பத்தையும் சீரழித்து அவன் சார்ந்த சமூகத்தையும் கெடுத்து குட்டி சுவராக்குகிறது. அது போன்று ஒரு இளம் வயது மது பிரியரின் வாழ்க்கையில் அந்த மது எந்த வகையில் எல்லாம் விளையாடுகிறது என்பதைத்தான் கொஞ்சம் நகைச்சுவையாகவும் நிறைய எமோஷன்களுடன் பார்ப்பவர்கள் கண்கலங்க வைக்கும்படியாக வந்திருக்கிறது இந்த ‘பாட்டல் ராதா’ திரைப்படம்.
புதிதாக வீடு கட்டும் பொழுது தரைக்கு டைல்ஸ் போடுவார்களே…! அந்த தொழிலில் பிரசித்தி பெற்ற ஒரு சிறந்த தொழிலாளியாக இருக்கிறார் குரு சோமசுந்தரம். இவருடைய மனைவி சஞ்சனா நடராஜன். இவர்களுக்கு ஆண், பெண் இரண்டு குழந்தைகள் உள்ளன. இருவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள்.
திருமணம் ஆனபோது குருவிடம் இந்த குடிப் பழக்கம் இல்லை. ஆனால் அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்த குரு, இப்போதுவரையிலும் எழுந்து நிற்க முடியவில்லை. தனக்குள் ஆழ்த்திக் கொண்ட குடியில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கும் குருவின் வாழ்க்கையும் ஒரு கட்டத்தில் சின்னப்பின்னமாகிறது.
அவருடைய மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பிரிந்து செல்கிறார்கள். குடியை விட்டால்கூட அவரால் தன் மனைவி குழந்தையுடன் இணைய முடியாது என்கின்ற ஒரு நிலைமை.
இனிமேல் குரு என்ன செய்யப் போகிறார்..? அவருடைய மனைவியும், குழந்தைகளும், திரும்பி வந்தார்களா…? குருவின் குடிப் பழக்கம் நின்று போனதா..? அவர் அந்த அடிமைத்தனத்திலிருந்து எழுந்து வந்தாரா..? என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.
சமூகத்தை முன்னேற்றும்விதமாகவும், சமூக நல்லிணத்திற்காகவும் சாதிய வேறுபாடுகளை கழைய வேண்டும் என்பதற்காகவும் தொடர்ச்சியாக சிறந்த திரைப்படங்களை மட்டுமே தயாரித்து வரும் இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் நிறுவனத்தின் மிக சிறப்பான ஒரு படைப்புதான் இந்த ‘பாட்டல் ராதா’ திரைப்படம்.
நாயகனாக நடித்திருக்கும் குரு சோமசுந்தரம், நிஜமான ஒரு குடிகாரனாகவே இந்த படத்தில் நம் கண்ணுக்குத் தெரிகிறார் நிஜமான குடிகாரன்கூட இந்த அளவுக்கு பேசுவானா.. இயல்பாக இருப்பானா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு குடியின் ஆக்கிரமிப்பில் இருக்கும் ஒரு குடிகாரன் என்னவெல்லாம் பேசுவான்.. எப்படி எல்லாம் நடப்பான்… எப்படி எல்லாம் அழுவான்.. எப்படி எல்லாம் ஓடுவான்… எப்படி எல்லாம் சண்டையிடுவான்… என்பதை எல்லாம் அப்படியே புட்டு புட்டு வைப்பதைப் போல அப்படியே பிரதிபலித்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.
முதல் காட்சியிலிருந்து, கடைசிவரையிலும் குடி அவரை ஆக்கிரமித்துவிட்டது என்பதை அவர் உணர்ந்தாலும் அதிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கின்ற அந்த உணர்வை நமக்கு அப்படியே கடத்தி இருக்கிறார் குரு.
சிகிச்சை மையத்தில் மாட்டிக் கொண்டு அவர் தவிக்கின்ற தவிப்பும், எப்படியாவது வெளியேற வேண்டும் என்று நினைக்கின்ற அவருடைய துடிப்பும், மறுபடியும் மனைவியுடன் சேர முடியாமல் அவர் அல்லல்படுகின்ற கஷ்டம்.. இதையெல்லாம் பார்க்கும்பொழுது நமக்கே அவர் மீது ஒரு பரிதாப உணர்வு வந்துவிட்டது.
அவருடைய மனைவி இன்னொருவருடன் வாழ்ந்து வரும் நிலையில் அவருடைய மனைவியை தேடி வந்து தான் தவறு செய்து விட்டேன். மன்னித்துவிடு. திரும்பவும் ஒன்று சேர்ந்து வாழலாம் என்று அவர் கெஞ்சுகின்ற கெஞ்சலும். அவருடைய மனைவியின் சீறுவதையும் அட்டகாசமான காட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேபோல் மருத்துவமனைகள் தன் மனைவியின் கால்களை பிடித்தபடியே கண்ணீர் வழுக மன்னிப்பு கேட்கின்ற நேரத்தில், சரி போய் தொலையறான்.. சேர்ந்துரும்மா என்று நம்மளையே சொல்ல வைத்திருக்கிறார் குரு சோமசுந்தரம்.
தமிழ்ச் சினிமாவின் மிகச் சிறந்த நடிகர்களுக்கான பட்டியலில் குரு சோமசுந்தரமும், இந்த படத்தின் மூலமாக எட்டிப் பிடித்துவிட்டார் என்ற உறுதியாக சொல்லலாம். வாழ்த்துக்கள் சார்.
இன்றைய நிலையில் தமிழகத்தில் மட்டுல்ல; இந்தியாவில் குடிகார கணவர்களின் மனைவிமார்கள் படுகின்ற பாட்டையும் அவர்கள் படுகின்ற துயரங்களையும் கஷ்டங்களையும் அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து விடுவித்து இருக்கிறார் நாயகியாக நடித்திருக்கும் சஞ்சனா நடராஜன்.
மிக அழகான முகம். கேமராவுக்கேற்ற முகம். அவருடைய இளம் வயதில் திருமணத்திற்கு முன்பாக தன்னுடைய ஆசையாக அவர் சொல்கின்ற அந்த இரண்டு வார்த்தைகளுமே பொய்யாகி போன நிலையில் கணவரை விரட்டி அடிக்கின்ற அந்தக் காட்சிகயிலும், “உனக்காக என்னுடைய பத்து வருஷம் போயிருச்சு.. அதை திரும்ப கொண்டு வர முடியுமா?” என்று அவர் கேட்கின்ற கேள்வியில் தியேட்டர்களில் கைதட்டல் தூள் பறக்கிறது.
இதுவரையிலும் தன்னுடைய பிள்ளைகளுக்காக குருவை சமாளித்து வேறு வழியில்லாமல் அவருடைய நின்ற சூழலும், இனிமேல் இருக்க முடியாத சூழ்நிலையை குரு ஏற்படுத்தியவுடன் பிரிந்து சென்று “நிம்மதியாக இருக்கிறோம்” என்று சொல்லி வருகின்ற குருவை விரட்டி அடிப்பதும், கிளைமாக்ஸ் கட்சியில் கணவர் மீதான அந்த காதல் எண்ணம் அப்படியே இருக்கிறது என்பதை ஒரு சிரிப்பிலேயே அவர் காட்டுகின்ற இடத்திலும் ‘வாவ்’ என்று சொல்ல வைத்திருக்கிறார் சஞ்சனா நடராஜன் பாராட்டுக்கள் மேடம்.
எல்லா படங்களிலும் வில்லனாகவே நடித்து ஸ்பெஷலிஸ்ட் வில்லனாக இருக்கும் ஜான் விஜய், இந்த படத்தில் ஒரு மிகச் சிறந்த குணசித்திர வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.
அவருடைய அறிமுகக் காட்சிகள் நிஜமாகவே உண்மையான ஒரு தொழிலதிபரை போலவே காட்சியளித்து, சிகிச்சை மையத்தை நடத்துபவராக அறிமுகமாகி, அதை எவ்வளவு அழகாக கேண்டில் செய்கிறார் என்பதை எல்லாம் பார்க்கும்பொழுது அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் மிக மிக சுவாரசியமாக இருக்கிறது.
ஆற்றங்கரையோரம் தன்னுடைய சோகமான கதையை மிக மெதுவாக குருவுக்கு சொல்லும்போதும், அதே ஆற்றங்கரையில் “மனைவி வராவிட்டால் என்ன? அந்த செடியையும், நாயையும் வளர்த்துக்க..” என்ற அலட்சியமாக சொல்லிவிட்டு போகும்போதும் நிஜமாகவே நம்மை மனம் கவர்ந்து விட்டார் ஜான் விஜய்.
படம் நெடுகவும் வருகின்ற காட்சிகளிலெல்லாம் சின்னச் சின்ன நகைச்சுவை துணுக்குகளை அள்ளி வீசி நம்மை பெரிதும் சிரிக்க வைத்திருக்கிறார் லொள்ளு சபா மாறன். அதிலும் சிகிச்சை மையத்தில் அவர் அடிக்கின்ற ஒன் லைன் டயலாக்குகள் அனைத்தும் அட்டகாசம் என்று சொல்லலாம். அவ்வளவு சோகத்திலும் ஒரு சிச்சுவேஷன் காமெடியாக வைக்கப்பட்ட அந்தக் காட்சிகள் அனைத்தும் மிகச் சிறப்பு.
மைத்துனாக நடித்திருக்கும் ஆண்டனி, இன்னொரு நண்பராக நடித்திருக்கும் பாரி இளவழகன், சிகிச்சை மையத்தில் வார்டனாக நடித்தவர் என்று அனைவருமே சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடி போதையின் முன்பாக நல்லவன், கெட்டவன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பேதம் கிடையாது என்பதை வார்டன் கதாபாத்திரத்தின் மூலமாக தெளிவாக காட்டி இருக்கிறார் இயக்குநர்.
ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜகின் ஒளிப்பதிவு அபாரம் என்றுதான் சொல்ல வேண்டும். சிகிச்சை மையத்தில் நடக்கின்ற காட்சிகளை அவர்கள் படமாக்கி இருக்கின்றவிதமும், அங்கே நடக்கின்ற சண்டை காட்சிகளை மிக எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் விதவும் பாராட்டுக்குரியது அதேபோல் கேமரா கோணங்களும் காட்சிகளை பதிவாக்கியவிதமும், உண்மையாகவே நம் மனதை தொடுகின்ற வகையில் படமாக்கப்பட்டிருக்கின்றது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்தின் கதையை அப்படியே விவரிக்கின்றன. அதிலும் சிகிச்சை மையத்தில் அவர்கள் ஆடுகின்ற ஒரு ஆட்டமும், பாடுகின்ற பாட்டும் அமர்க்களம் என்று சொல்லலாம். பின்னணி இசையிலும் அடித்து அடிக்கிறார் ஷான் ரோல்டன்.
படம் நெடுகிலும் ஒரு சோகத்தை தாங்கிக் கொண்டே இருக்கின்றது என்பது தெளிவாக தெரிவதால் இடையிடையே வருகின்ற நகைச்சுவை காட்சிகள் நம் மனதை லேசாக்குவதுபோல காட்சிகளை கச்சிதமாக தொகுத்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் சங்கத் தமிழன்.
படத்தின் இயக்குநரான தினகரன் சிவலிங்கம் இந்தப் படத்தை ஒரு பிரச்சார படமாக மாற்றாமல் ஒரு கதையோடு கொண்டு வந்து கதையை மட்டுமே முன் வைத்து கதை மாந்தர்களின் மூலமாக “குடியைவிட்டால் அந்த குடும்பத்தினரும் மட்டுமல்ல, அவரை சுற்றி இருப்பவர்களும் இந்த சமூகமும் சந்தோஷமாக சிறப்பாக இருக்கும்.. இருப்பார்கள்.. என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
“குடி என்பது வெறும் பழக்கம் மட்டுமல்ல. அது ஒரு ஹாபிட் அல்ல. அது ஒரு நோய்” என்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம். இந்தக் குடிப் பழக்கத்தினால் அந்தக் குடும்பம் மட்டுமல்ல அதைச் சுற்றி இருப்பவர்களும் சேர்ந்து பாதிக்கப்படுகிறார்கள்.
அதோடு மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் எப்படி எல்லாம் செயல்படுகின்றன? அங்கே இந்த குடி நோயாளிகளை எப்படி அவர்கள் சமாளிக்கிறார்கள்? எப்படி அவர்கள் சிகிச்சை தருகிறார்கள்? என்பதையெல்லாம் கொஞ்சம் நகைச்சுவை உணர்வோடு அதே சமயம் நாம் நம்பும்விதமாகவும் மிகச் சிறப்பாக கொடுத்து இருக்கிறார்.
அதேபோல் மது பழக்கத்தில் இருந்து மீண்டவர்கள் தற்போது எந்த நிலைமையில் இருக்கிறார்கள்? அவர்களுடைய சந்தோசம் இப்பொழுது எப்படி இருக்கிறது? அவர்களின் தற்போதைய குடும்ப வாழ்க்கை..? இதையெல்லாம்கூட படத்தில் ஒரு கதையாக காண்பித்து நம்மை நெகிழ வைத்திருக்கிறார் இயக்குநர் தினகரன் சிவலிங்கம்.
படம் உண்மையில் குடியை எதிர்க்கின்றவிதமாக இருந்தாலும் படத்தில் ஒரு காட்சியில் பின்புறச் சுவற்றில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்துவிட்டு அதற்கு முன்பாக நின்று கொண்டு குருவின் நண்பன் பேசுகின்ற வசனமாக “அப்படியே.. கொஞ்சம் விஷத்தையும் குடுத்தீங்கன்னா அதைக் குடிச்சிட்டு நிம்மதியா செத்துப் போயிருவேன். நீங்களும் நிம்மதியா இருக்கலாம்..” என்று ஒரே ஒரு வரியில் இந்தியாவின் இப்போதைய நிலைமையை எடுத்துச் சொல்லி இருக்கின்ற இயக்குநருக்கு நமது கோடி நன்றிகள்.
இந்த காட்சியை சென்சாரில் எப்படி விட்டார்கள் என்றே தெரியவில்லை. ஆனாலும் சென்சார் உணராத வகையில் இந்தக் காட்சியை படமாக்கி வைத்திருக்கும் இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
நிச்சயம் குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்து பார்க்க வேண்டிய திரைப்படமாக இந்த ‘பாட்டல் ராதா’ திரைப்படம் வந்திருக்கிறது.
அவசியம் திரையரங்கில் சென்று பாருங்கள்..!
RATING : 4 / 5