இந்தப் படத்தை மீனாக்ஷி அம்மன் மூவிஸ் சார்பில் அருண்குமார் சம்பந்தம் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாள்.N பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் முதன்மை பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான, இமயவர்மன் மற்றும் இயக்குநர் ஷங்கர் தயாள் அவர்களின் மகன் அத்வைத், ‘அன்டே சுந்தரனிகி’ படப் புகழ் ஹரிகா படேடா, மாஸ்டர் பவாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் செந்தில் மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர்.
முக்கிய பாத்திரங்களில் ‘பருத்தி வீரன்’ சரவணன், சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, பிராங்க்ஸ்டர் ராகுல், அர்ஜுனன், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, சித்ரா லக்ஷ்மணன், மயில்சாமி, வையாபுரி, கம்பம் மீனா, கும்கி அஸ்வின், அஷ்மிதா சிங், வைகா ரோஸ், சோனியா போஸ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
எழுத்து இயக்கம் – ஷங்கர் தயாள்.N, ஒளிப்பதிவு – J .லக்ஷ்மன் MFI, எடிட்டர் – A.ரிச்சர்ட் கெவின், இசை – “சாதக பறவைகள்” சங்கர், கலை இயக்குனர் – C.K முஜிபுர் ரஹ்மான், நிர்வாகத் தயாரிப்பாளர்கள் – பாண்டியன் நன்மாறன், E.சூர்யபிராகாஷ், தயாரிப்பு நிர்வாகம் – ராஜாராமன்,M V ரமேஷ், நடனம்- ராதிகா, அபு & சால்ஸ், பத்திரிக்கை தொடர்பு – சதீஸ், சிவா (AIM).
இந்தப் படத்தின் இயக்குநரான என்.சங்கர் தயாள் இப்போது ஒரு பத்து நாட்களுக்கு முன்பாக தான் திடீரென்று மாரடைப்பால் காலமாகிவிட்டார் அவருக்கு எங்களுடைய இதயம் கனிந்த அஞ்சலிகள்.
இயக்குநர் ஷங்கர் தயாள்.N குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார். திரையுலகில் குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து இதுவரை உருவான படங்கள் யாவும், பெற்றோர்களுக்கு அறிவுரை சொல்லும் படமாகவும், ஃபேன்டஸி, காமெடி, ஹாரர் என பொதுவான ஜானரில் மட்டுமே வந்துள்ளது. முதல் முறையாகக் குழந்தைகளின் உலகத்தில், அரசியல் பார்வையைச் சொல்லும் பொலிடிகல் காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.
“நீ என்னவாக ஆசைப்படுகிறாய்?” எனும் கேள்விக்கு, “அரசியல்வாதியாக ஆசைப்படுகிறேன்” எனும் ஒரு பள்ளி மாணவனின் பதிலும், அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்தான் இப்படத்தின் மையம்.
குழந்தைகளின் உலகின் வழியே, அரசியலை அணுகும் இப்படம், ஒரு மாறுபட்ட அனுபவம் தரும் படைப்பாக வந்திருக்கிறது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமையை வெளிப்படுத்தும்விதமாகவும் அரசியல்வாதிகள் குடும்பத்தில் இருந்து அடுத்த தலைமுறை எப்படியெல்லாம் உருவாகிறார்கள். அரசியல் வியாதிகள் எப்படி சிறுவயதிலிருந்து உருவாக்கப்படுகிறார்கள் என்பதையும் இத்திரைப்படம் கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறது.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசியல் கட்சியின் தலைவர் செந்தில். அவருடைய இரண்டு தளபதிகளாக இருப்பவர்கள் சுப்பு பஞ்சுவும், யோகி பாபுவும்.
இந்த சமயத்தில் ஆவடி மாநகராட்சி தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டதால் சுப்பு பஞ்சு தனது மனைவி லிசி ஆண்டனிக்காக கட்சியில் சீட் கேட்கிறார். இன்னொரு பக்கம் யோகி பாபு தன் மனைவிக்காக கேட்கிறார்.
இருவருமே சீட் கேட்பதால் ஒருவருக்குக் கொடுத்து இன்னொருவருக்குக் கொடுக்காமல் போனால் பகைதான் வளரும் என்பதை ஊகித்த கட்சித் தலைவரான செந்தில், “நீங்க ரெண்டு பேருமே சுயேச்சையா நில்லுங்க. யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களை கட்சியில சேர்த்துக்குறேன்” என்ற வித்தியாசமாக தீர்ப்பை கொடுக்கிறார்.
அதேபோல் அந்தத் தேர்தலில் யோகிபாபுவின் மனைவி சுயேட்சையாக நின்று ஜெயித்துவிட இது பஞ்சு சுப்புவுக்கும், லிசி ஆண்டனிக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. சந்தர்ப்பம் கிடைத்தால் யோகிபாபுவை போட்டு தள்ளிவிட வேண்டும் என்று கொலை வெறியில் இருக்கிறார்கள் பஞ்சு சுப்புவும், லிசி ஆண்டனியும்..!
இன்னொரு பக்கம் யோகிபாபுவின் மகனான அத்வைத் ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளியில் ஒரு தலைவனை போல் தன்னை சக மாணவர்கள் லீடர் என்றுதான் அழைக்க வேண்டும் என்ற கொள்கையில் இருப்பவன்.
அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் இமயவர்மன் என்பவன் யோகி பாபுவின் இரண்டாவது மனைவியான சோனியா போஸூக்குப் பிறந்தவன்தான். ஆனால் யோகிபாபு இரண்டாவது மனைவியை தள்ளி வைத்து விட்டதால் அவருடைய இரண்டாவது மனைவி சோனியா போஸ், ரோட்டோரத்தில் ஒரு இட்லி கடை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்.யோகி பாபுதான் தன்னுடைய அப்பா என்பது இமயவர்மனுக்கும் நன்றாக தெரியும்.
அந்த நேரத்தில் அந்த பள்ளியில் மாணவர்கள் தேர்தல் வருகிறது. அந்தத் தேர்தலில் யோகிபாபுவின் மூத்த மகன் அத்வைத்தும் நிற்கிறார். இன்னொரு பக்கம் ரங்கநாயகி என்கின்ற ஒரு பிராமண மாணவியும் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் யோகி பாபு தன் மகன் அத்வைத் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக அனைத்து உதவிகளையும் செய்யும்படி தனது ஆட்களிடம் சொல்கிறார். இன்னொரு பக்கம் இமயவர்மனோ ரங்கநாயகிக்கு ஆதரவு கொடுத்து அந்தப் பெண்ணை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நினைத்து ஓடுகிறான்.
இறுதியாக அதை பள்ளியில் என்ன நடந்தது? தேர்தல் சரியாக நடந்து முடிந்ததா? தேர்தல் யார் ஜெயித்தார்கள்? யார் தோற்றார்கள்? யோகி பாபுவின் நிலைமை என்ன ஆனது? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
படத்தில் யோகி பாபுதான் நாயகன் என்பதைப் போல போஸ்டர்கள் பறைசாற்றினாலும் படத்தில் அவர் வருகின்ற காட்சிகள் குறைந்த நேரம்தான். அவரும் ஒரு ஒழுக்கமான, நேர்மையான தலைவராகவும் காட்டப்படாமல் ஒழுக்கம் கெட்ட ஆளாகவும் நேர்மையே இல்லாத ஒரு காமெடி பீஸாகவும் படத்தில் காட்டப்பட்டிருப்பதால் நமக்கு அவருடைய கதாப்பாத்திரத்தின் மீது எந்த ஈர்ப்பும் வரவில்லை.
படம் முழுக்க தன் உதவியாளர்களை பாடி ஷேமிங் செய்யும்படியான வசனங்களையே பேசி ஒப்பேற்றியிருக்கிறார் யோகி பாபு. சில இடங்களில் அவருடைய வசனங்கள் கொஞ்சம் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் நமக்கு கடுப்பேற்றுகிறது.
அவருடைய மனைவியாக நடித்தவரின் ருத்ரத்தைவிடவும் சிப்பு பஞ்சுவின் மனைவியாக நடித்த லிசி ஆண்டனியின் அமைதியான, ஆக்ரோஷமான பேச்சு நம்மைப் பெரிதும் கவருகிறது.
“இந்த எலக்சன்ல நான் ஜெயிக்கலைனா… இதே மாதிரி உனக்குக் கட் அவுட் வைச்சு மாலை போட வேண்டி வரும்” என்று சுப்பு பஞ்சுவை அவர் எச்சரிக்கின்ற விதத்திலேயே மிகவும் பிடித்து போகிறது. ஒரு அமர்க்களமான வில்லி லிசி ஆண்டனிக்குள் ஒளிந்திருக்கிறார் என்பதை இந்தப் படத்தின் மூலமாக இயக்குநர் காண்பித்திருக்கிறார்.
பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் இமயவர்மனும், அத்வைத் ஜெய் மஸ்தானும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இருவருடைய பேச்சுக்களும், நடத்தைகளும் அவர்களுடைய வயதுக்கு மீறிய, இயல்பை தாண்டிய காட்சிகளாக இருந்தாலும் சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்கள். பல இடங்களில் ஓவர் ஆக்ட்டாகவும் உள்ளது.
ரங்கநாயகியாக நடித்திருக்கும் ஹரிகா படேடா கதாபாத்திரமும் குறிப்பிடத்தக்கது பிராமண கதாபாத்திரம் என்பதோடு அவர்களை இந்த சமூகம் ஏதோ ஒதுக்கியே வைத்திருப்பது போலவும் அவர்கள் படிக்காவிட்டால் அவர்களுடைய வாழ்க்கையே சீரழிந்து விடும் என்பது போலவும் வசனங்கள் வைத்திருப்பது எதற்காக என்று தெரியவில்லை.
பிராமணர்களை எந்தக் காலத்தில் யார் ஒதுக்கி வைத்திருந்தார்கள். அவர்கள் வேலையை அவர்கள் செய்கிறார்கள். மற்ற சமூகத்தினர் என்ன செய்து கொண்டிருக்கிறார்களோ அதைத்தான் அவர்களும் செய்கிறார்கள். இது பிராமணர்களை உயர்த்தி பேச வைப்பதற்காக வைக்கப்பட்ட வசனமா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் நிச்சயம் இது தவறான ஒரு வசனம்தான்.
அமைதியான ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டல் இல்லாமல் காலுக்கு கீழாக கன்னி வெடி வைக்கும் ஒரு அரசியல்வாதி கேரக்டரில் நடித்திருக்கும் பஞ்சு சுப்புவுக்கும் நமது பாராட்டுக்கள்
இந்தப் படத்தில் தலைமை ஆசிரியராக நடித்த சித்ரா லட்சுமணன் மிக சிறப்பாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் அவருக்கு வைத்திருக்கும் குளோசப் காட்சிகள், காட்சி கோணங்கள், கேமரா கோணங்கள் மிகவும் அருமை. இதனாலேயே அவரை அதிகமாக இத்திரைப்படத்தில் நம்மால் ரசிக்க முடிந்திருக்கிறது.
மயில்சாமி என்ற ஒரு சிறந்த நடிகனை இழந்துவிட்ட துயரம் இப்போதும் தமிழ் ரசிகர்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்திலும் அவர் அவ்வப்போது வந்து தலையை காட்டுகின்ற பொழுது, அவருடைய முகமும், அவருடைய குரலும் அப்படியே நமக்கு ஈர்ப்பாக இருக்கின்றது.
யோகிபாபுவின் மனைவியாக நடித்த வைகா ரோஸ், அஸ்மிதா சிங், பருத்தி வீரன் சரவணன் மற்றும் மற்ற வேடங்களில் நடித்தவர்களும் அவரவருக்காக கதாபாத்திரத்திற்கான நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.
ஜெ.லட்சுணனின் ஒளிப்பதிவு ஒரு பட்ஜெட் படத்துக்குரிய ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறது. பாடல் காட்சிகளில் பள்ளி மாணவர்கள் ஆடும் நடனத்தை அழகாக படமாக்கி இருக்கிறார்கள். அதேபோல் யோகி பாபு அழகிகளுடன் கெட்ட ஆட்டம் போடும் அந்த ஆட்டத்தையும் அது போன்ற பாடல்களை ரசிக்கக் கூடிய இளவட்ட பசங்கள் ரசிக்கும் வகையில் படமாக்கி இருக்கிறார்கள்.
சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகமாகத்தான் இருக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை என்பது போல அமைந்துள்ளது. இந்தப் படத்திற்கு பின்னணி இசையே தேவையில்லை என்கின்ற அளவுக்கு கதை, திரைக்கதை இருப்பதால் அது அதிகமாக கவனிக்கப்படவில்லை.
படத் தொகுப்பாளர் பல்வேறு இடங்களில் எடுக்கப்பட்ட பல்வேறு காட்சிகளை தொகுத்து கொஞ்சமாக வெட்டி ஒட்டி இருக்கிறார். சில காட்சிகள் ப்ளூ மேட்டில் எடுத்திருப்பது தெளிவாக தெரிகிறது. குறைந்த பட்ஜெட்டாக இருந்தாலும் இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் படம் எடுத்தால் எப்படிங்கோ…
அரசியல்வாதியின் மகன்கள் தாங்களும் தங்களுடைய அப்பாவை போல அரசியல்வாதியாக வேண்டும் என்று மாறித்தான் இப்பொழுது தமிழகத்தில் நான்கு தலைமுறைகளாக அரசியலில் இளைஞர்கள் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அந்த அரசியலுக்கான அடிப்படை தளம் வேறு யாரிடமும் கை கட்டி நிற்க வேண்டாம். அனைவரிடமும் லஞ்சமாக பணம் பெறலாம். மிக எளிதாக சட்டவிரோத செயல்களை செய்து தப்பித்துவிடலாம். காவல் துறையினரின் கனிவும், பணிவும் அவர்களுக்கு தானாகவே வந்து சேரும். இந்தக் காரணங்களால்தான் இப்போதைய இளைஞர்கள் அதிகமாக அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படி ஒரு கேடுகெட்ட அரசியல் தனத்தை செய்து வரும் யோகிபாபுவின் இரண்டு மகன்களும் எப்படி இந்த அரசியலில் உள்ளே நுழைந்து தங்களின் அரசியல் சாணக்கியத்தனத்தை காட்டி ஒருவர் தமிழகத்தின் முதல்வராகவும், இன்னொருவர் இந்தியாவின் பிரதமராகவும் வருகிறார் என்பதை கொஞ்சம் நகைச்சுவையாக சொல்லி இருந்தாலும், இயக்குநர் சொல்ல வந்த விஷயம் என்ன என்பது கடைசி வரையிலும் நமக்கு தெரியவில்லை.
இப்போதைய நிலையில் இந்தியாவில் எந்த ஒரு பள்ளியிலும் மாணவர் தேர்தல் நடைபெறாது. முழுக்க, முழுக்க கல்லூரிகளில் மட்டும்தான் மாணவர் தேர்தல் நடைபெறும். அதிலும் தனியார் கல்லூரிகளில் மாணவர் பேரவையே இருக்காது. அரசு கல்லூரிகளில், அதிலும் மிக சில கல்லூரிகளில் மட்டுமே மாணவர் பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதை மூடி மறைத்து பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடப்பது போல திரைக்கதை வைத்திருப்பது இயக்குநர் தன்னுடைய வசதிக்காக எழுதியிருக்கும் லாஜிக் இல்லாத திரைக்கதை என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.
அரசியல் என்பது ஒரு நாட்டை வழிநடத்தும் செயல். அடுத்த தலைமுறைகளுக்கு நிம்மதியையும், சந்தோஷத்தையும் கொடுக்க வேண்டிய ஒரு கடமை. அதை காமெடி போல் காண்பித்து இந்தப் படத்தை கொஞ்சம் காமெடி படமாகவே ஆக்கிவிட்டார் இயக்குநர்.
இப்படி இரண்டு பேர் அரசியலுக்கு வந்து ஆட்சியை பிடிப்பதற்கு தேவையே இல்லை என்பதைத்தான் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் இப்படி வந்துதான் சேர்கிறார்கள் என்று அவர் சொல்லியிருப்பது மூலமாக அரசியல் எவ்வளவு கேவலமாகி போய் இருக்கிறது என்பதாகத்தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் படத்தை இன்னமும் மிக சிறப்பாக எடுத்திருக்கலாம். ஆனால் இயக்குநர் தனக்கு தெரிந்த வகையில் மட்டும் படத்தை எடுத்திருப்பதால் இந்தப் படம் கடைசியாக என்னதான் சொல்ல வருகிறது என்பதே நமக்குப் புரியவில்லை.
RATING : 2.5 / 5









