வரலாற்று நாவல்களில் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ கதைக்கு நட்சத்திரத் தகுதி உண்டு. நாட்டுடைமையாக்கப்பட்ட அக்கதை இன்றும் பல்வேறு பதிப்புகளாக விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. இப்படைப்பு இன்றைய தலைமுறைக்கும் சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில் இதை 2-டி அனிமேஷன் திரைப்படமாக தயாரிக்கவுள்ளார்கள்.
இந்த அனிமேஷன் படம் இரண்டரை மணி நேரம் ஓடக் கூடியதாக இருக்குமாம். ‘வளமான தமிழகம்’ என்கிற ஒரு தொண்டு நிறுவனத்தின் ஆதரவுடன் ‘பைவ் எலிமெண்ட்ஸ்’ நிறுவனம் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதன் தயாரிப்பாளர் பொ. சரவணராஜா.
நேற்று மதியம் சோழா ஷெரட்டன் ஹோட்டலில் நடந்த இந்த படத்தின் அறிமுக விழாவில் இந்த நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டது குறித்து தயாரிப்பாளர் சரவணராஜா மிக விளக்கமாகப் பேசினார்.
“தமிழக வரலாற்றை எடுத்துக் கொண்டால் சோழர்கள் ஆண்ட காலம், தமிழகத்தின் பொற்காலம். சோழ மன்னர்களில் அனைத்து வகையிலும் தன்னிகரற்று விளங்கிய மன்னன் இராஜாராஜ சோழன். அவன் அரியணை ஏறிய வரலாற்றை அழகுடன் வரலாற்று உண்மைகளுடன் கல்கியால் புனையப்பட்ட காவியம்தான் பொன்னியின் செல்வன். இன்றைய தலைமுறைக்கு இந்த வரலாறு சென்றடைய வேண்டும் என்கிற நோக்கில்தான் இதை 2-டி அனிமேஷனில் திரைப்படமாக எடுக்கிறோம்.
‘பொன்னியின் செல்வன்’ கதையின் கருத்தும் கரையாமல்,நோக்கும் போக்கும் நோகாமல், தகவல்கள் தடுமாறாமல் அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் சுருக்கியும் உருவாக்க இருக்கிறோம். அனிமேஷனாக உருவாக்கும்போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில் நுட்ப சாத்தியங்களில் சிறப்பு சேர்க்க முடியும்.
படத்தின் அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன். இவர் இத்துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர். இம்முயற்சியில் திரைப்பட ஊடக நண்பர்களும் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களின் பக்க பலமும் இத்திரை வடிவத்தின் முயற்சிக்கு பெரிதும் துணை நிற்கும்.
படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை- தமிழ்த் திரை நட்சத்திரங்களை அணுக இருக்கிறோம்.
இந்த அனிமேஷன் படம் நிச்சயமாக தரத்தில் மேம்பட்டு இருக்கும். சமீபத்தில் வந்த நம் நாட்டில் உருவான பல படங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பின்னடைவைக் காண்கிறேன். கடந்த பத்தாண்டுகளில், ‘அனுமான் 2-D அனிமேஷன்’ படம் நல்ல வெற்றியடைந்தது. ‘தெனாலிராமன்’, மற்றும் ‘சோட்டா பீம்’ போன்ற நீண்ட தொலைக் காட்சி தொடர்களும் நல்ல வெற்றி பெற்றன. உலகத் தரம் வாய்ந்த Disney யின் ‘லயன் கிங்’ அனிமேஷன் படத்திற்கு எவ்விதத்திலும் ‘பொன்னியின் செல்வன்’ குறையாமல் இருக்கும்…” என்றார் சரவணராஜா.