பிரபலமான வசனங்கள் படங்களின் தலைப்பாவது தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டு எனலாம். அப்படி பேசப்பட்ட ஒற்றை வரி வசனங்களில் பிரபலமானது என்ன வென்று யாரைக் கேட்டாலும் ‘சூரியன்’ படத்தில் கவுண்டமணி பேசும் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ என்ற வசனத்தை குறிப்பிடுவார்கள்.
உன்னிப்பாக கவனித்தால் தற்போதைய அரசியல் நகைப்புக்குரியதுதான். சராசரியான குடிமகனாக நாம் , நமக்கே உரிய நகைச்சுவை உணர்வோடு அந்த அரசியலை ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ என்று சகித்துக் கொள்ள கற்றுக் கொண்டோம்.
இப்போது இந்தத் தலைப்பிலேயே புதிய படம் ஒன்று உருவாகிறது. ‘தற்காப்பு’, ‘கரையோரம்’, ஆகிய படங்களில் நாயகனாக அறிமுகமாகும் கணேஷ் பிரசாத் இந்த படத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருடன் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஜான் விஜய், மனோபாலா, சுப்பு அருணாசலம், என்ற ஒரு மாபெரும் நகைச்சுவை படையே நடிக்கவுள்ளது. வெறுமனே சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்கவும் வைக்கும் இந்த ‘அரசியல்ல இதெல்லாம் சகஜம்ப்பா’ திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று கொடைக்கானலில் துவங்கியது.
“இந்தப் படம் உண்மையை நகைச்சுவையுடன் உரக்கச் சொல்லும் படம்” என்கிர் பல்வேறு வெற்றி படங்களில் கதை இலாகாவில் பணியாற்றி அனுபவம் வாய்ந்த இந்தப் படத்தின் இயக்குனர் சக்தி அஜய் குமார்.
எல்லாஞ்சரிதான்.. தலைப்புக்கான ராயல்டியை கவுண்டர் மகான்கிட்ட கட்டிட்டீங்களா டைரக்டர் ஸார்..?









