full screen background image

பொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்

பொன் மகள் வந்தாள் – சினிமா விமர்சனம்

நடிகர் சூர்யாவின் சொந்தத் தயாரிப்பு நிறுவனமான 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் நடிகை ஜோதிகா முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் நேற்று அமேஸான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியானது.

இத்திரைப்படத்தில் ஜோதிகாவுடன் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், வினோதினி வைத்தியநாதன், கிரேன் மனோகர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராம்ஜி, இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – ரூபன், கலை இயக்கம் – அமரன், பாடல்கள் – விவேக், உமாதேவி, கார்த்திக் நேத்தா, வசனம் – லட்சுமி சரவணக்குமார், ஜே.ஜே.பேட்ரிக், கூடுதல் வசனம் – முருகேசன், பொன்.பார்த்திபன், ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி, நடன இயக்கம் – பிருந்தா, சண்டை இயக்கம் – ராக் பிரபு, ஒலி வடிவமைப்பு – சின்க் சினிமா, இறுதி ஒலிக் கலவை – எம்.ஆர்.ராஜாகிருஷ்ணன், தயாரிப்பு மேலாண்மை – பி.செந்தில்குமார், மக்கள் தொடர்பு – யுவராஜ், நிழற்படம் – சரவணன், விளம்பர வடிவமைப்பு – அமல் ஜோஸ், இணை தயாரிப்பு – ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், தயாரிப்பு – சூர்யா, எழுத்து, இயக்கம் – ஜே.ஜே.பேட்ரிக். நேரம் : 2 மணி 03 நிமிடங்கள்.

இத்திரைப்படம் முழுவதும் தயாராகி கடந்த மார்ச் 26-ம் தேதியே திரைக்கு வரத் தயாராக இருந்தது. இடையில் திடீரென்று ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலினால் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமலாக்கப்பட்டு தியேட்டர்கள் மூடப்பட்டதினால் இத்திரைப்படமும் முடங்கியது.

ஆனாலும் இத்திரைப்படம் அமேசான் பிரைம் எனப்படும் OTT தளத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கடந்த ஏப்ரல் மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாய் நேற்றைக்கு மே 28-ம் தேதி இரவு 10.30 மணிக்கு இத்திரைப்படம் அமேஸான் பிரைம் வீடியோவில் வெளியானது.

சமீபகாலமாக இந்திய சினிமாவில் பெண்களுக்கெதிரான குற்றங்களை மையப்படுத்தி பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இத்திரைப்படமும் அதில் ஒன்று. பெண்கள் மட்டுமில்லாமல், பெண் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறலைத் தடுத்தாக வேண்டும் என்கிற கோரிக்கையுடன் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

ஊட்டியில் லவ்டேல் பகுதியைச் சேர்ந்தவர் ‘பெட்டிஷன் பெத்துராஜ்’ என்னும் கே.பாக்யராஜ். இவருடைய மகள் ‘வெண்பா’ என்னும் ஜோதிகா. ஒரு வழக்கறிஞர். பாக்யராஜ் சமூக ஆர்வலராக பல்வேறு பொது நலன் வழக்குகளை தாக்கல் செய்து அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமானவராக இருக்கிறார்.

2004-ம் ஆண்டு அதே பகுதியில் சில பெண் குழந்தைகளை கொடுமைப்படுத்தி கொலை செய்ததாகச் சொல்லி ‘ஜோதி’ என்னும் பெண்ணை ஊட்டி போலீஸார் என்கவுண்ட்டரில் கொலை செய்திருந்தனர்.

“இந்த வழக்கை திரும்பவும் விசாரிக்க வேண்டும்” என்று கோரி பாக்யராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். சென்னை உயர்நீதிமன்றமும் இந்த வழக்கினை விசாரித்து “ஊட்டி குற்றவியல் நீதிமன்றம் ஜோதி என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டது பற்றி புதிதாக விசாரணை நடத்த வேண்டும்” என்று உத்தரவிடுகிறது.

இந்த உத்தரவினால் தமிழகமும், ஊட்டி பகுதியும் பரபரப்பாகிறது. ஜோதி மீது அதீத வெறுப்பில் இருக்கும் உள்ளூர் பெண்களே ஜோதிகா மீது கோபமடைகிறார்கள். ஆனால் ஜோதிகாவும், பாக்யராஜூம் இந்த வழக்கில் நிறைய உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும், போலியான ஒரு என்கவுண்ட்டர் நடத்தப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தால் கோவை பகுதியைச் சேர்ந்த மிகப் பெரிய கோடீஸ்வரரான ‘வரதராஜன்’ என்னும் தியாகராஜன் மிகப் பெரிய மன உளைச்சலுக்குள்ளாகுகிறார். அந்த என்கவுண்ட்டருக்கு முன்பாக ஜோதி இவருடைய மகன் ரோஷன் மற்றும் அவனது நண்பன் ஒருவனையும் ஊட்டியில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருக்கிறார். இதனால்தான் ஜோதியை திருப்பூரில் கைது செய்து ஊட்டிக்கு கொண்டு வந்து விசாரணை செய்யும்போது ஏற்பட்ட கை கலப்பில் ஜோதி கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பு சொல்கிறது.

இப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞரை மாற்றிவிட்டு சென்னையில் இருந்து மிகப் பிரபலமான கிரிமினல் வக்கீலான பார்த்திபனை ஊட்டிக்கு கொண்டு வந்து இந்த வழக்கில் அரசுத் தரப்பு வக்கீலாக சேர்க்கிறார் தியாகராஜன்.

வழக்கு விசாரணையில் தீப்பொறி பறக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய டிவிஸ்ட்டுகளும், புதிய செய்திகளுமாக நீதிமன்ற விசாரணையில் வெளியில் வர தமிழகமே பரபரக்கிறது.

இறுதியில் இந்த நீதிமன்ற நாடகம் என்னாகிறது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகப் பார்த்து, பார்த்து தேர்வு செய்து நடிக்கிறார். இதுவும் அவருக்கான கதைதான்.

உள்ளுக்குள் பொங்கிக் கொண்டிருக்கும் எரிமலையை அடக்கிக் கொண்டு கொஞ்சம், கொஞ்சமாக விசாரணைக்குள் தீப்பொறியை பறக்க விடுகிறார் ஜோதிகா. அந்த பயமுறுத்தும் கண்களும், குறுகலான பார்வையும், எதிராளியை மன ரீதியாக பாதிப்படைய வைக்கும் முக பாவனைகளுமாய் ‘வழக்கறிஞர் வெண்பா’வாய் நடிப்பையும், வசனங்களையும் பொழிந்திருக்கிறார்.

தனியே.. தன்னந்தனியே தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி தவிக்குமிடத்தில் இந்தக் கொடுமை எந்தவொரு பெண்ணுக்கும் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தை ரசிகர்களுக்குக் கடத்தியிருக்கிறார்.

இத்தனை படங்களில் நடித்தும் ‘ஜோதிகா ஸ்டைல்’ எப்போதும் ஒன்றுதான் என்பதுபோல சிற்சில காட்சிகளில் அவருடைய நடிப்பு தென்படுவது மட்டும்தான் கொஞ்சம் மைனஸாக இருக்கிறது. ஜோதிகா தன்னுடைய கேரியரில் அனைத்துவித பாவனைகளுக்கும் ஆட்பட வேண்டும். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் செண்டிமெண்ட் எல்லாம் கலந்தடித்தால் அவரைப் பிடிக்காதவர்களுக்கும் பிடிக்கலாம்.

‘பெட்டிஷன் பெத்துராஜாக’ கே.பாக்யராஜ் சீரியஸும் இல்லாமல் காமெடியும் இல்லாமல் ஒரு கேரக்டரை செய்திருக்கிறார். ஆனால் அழுத்தம் இல்லை என்பது வருத்தமான விஷயம். இதேபோல் ‘கோர்ட் டவாலி’யாக இயக்குநர் பாண்டியராஜன். இதனால் யாருக்கு என்ன லாபம் என்று தெரியவில்லை.

பார்த்திபன் ‘ஜோ’-வுக்கு டப் கொடுத்திருக்கிறார். தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ள முடியாமல் தவிக்கும் அதே சமயம்.. ஜோதிகாவிடம் கவுரமாக தோற்க வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட அவர் நடத்தும் காய் நகர்த்தல்கள் சாமர்த்தியம்தான். ஆனால் இதனை காட்சி வடிவத்தில் அழுத்தமாய் சொல்ல இயக்குநர் தவறிவிட்டார்.

கறாரான நீதிபதியாக இருக்க வேண்டிய பிரதாப் போத்தன் கதையை நகர்த்துவதற்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். வினோதினி வைத்தியநாதனின் அசால்ட்டான நடிப்பு இன்னொரு பக்கம் நமக்கு ஆறுதலாய் அமைந்திருக்கிறது.

தியாகராஜன் வில்லன் கதாபாத்திரத்திற்கு சற்றும் பொருந்தவில்லை. அதிலும் அவருக்கு சுயமரியாதை அதிகம் என்பதையும், அந்தக் கோபத்தில் அவர் எதையும் செய்வார்.. சொல்லுவார் என்பதை இயக்குநர் தனக்கு வசதியான திரைக்கதைக்காக அமைத்திருப்பதால் அதில் சுவாரஸ்யம் இல்லை. தியாகராஜனின் கன்னம் துடித்து அவருக்குக் கோபம் வரும் காட்சிகளெல்லாம் இனிமேல் எந்தப் படத்திலும் இருக்கக் கூடாது என்றே வேண்டுகிறோம்.

ஊட்டி என்றவுடன் நினைவுக்கு வரும் இயற்கைக் காட்சிகளை குறையில்லாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. நீதிமன்றக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நறுக்கென்று கத்தரி போட்டிருந்தால் ஒரு படபடப்பு.. திரில்லிங் உணர்வுகள் கூடியிருக்கும்.

கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். ஆனால் பாடல் காட்சிகளை படமாக்கியவிதம் மொத்தப் பாடல்களையும் கடைசிவரையிலும் பார்க்க வைக்கிறது.

மிகுந்த பாராட்டுக்குரியவர்கள் வசனகர்த்தாக்கள்தான். படம் ஆங்காங்கே தொய்வடையும்போது தூக்கி நிறுத்துவதைப் போன்ற டிவிஸ்ட்டுகளையும்.. அதற்குப் பொருத்தமாக வசனங்களை வீசி நமக்கு குளுகோஸ் கொடுத்திருக்கிறார்கள். இந்த வசனங்களின் மூலம் நமக்குக் கிடைக்கும் உணர்வே அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

‘வெண்பா யார்’ என்று முடிச்சு அவிழும் இடம் மற்றும் ஜோதியின் உண்மையான பெயர் என்ன. அவர் யார் என்னும் உண்மையும், வெண்பா மறைக்கும் கடைசிக்கட்ட உண்மையை பார்த்திபன் உடைக்கும் மர்மமும் ‘ஹாட்ஸ் ஆப்’ என்று இயக்குநரை பாராட்ட வைக்கிறது..!

இந்தியா முழுவதிலும் தினம்தோறும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை எத்தனை சட்டம் கொண்டு வந்தாலும்.. எத்தனை தீர்ப்புகளை அளித்தாலும். எத்தனை குற்றவாளிகளை தண்டித்தாலும் நிறுத்த முடியவில்லை.

இதனாலேயே இது போன்ற திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு வரவிட்டு இதனை பார்வையிட வைத்து குற்றம் நடப்பதற்கு முன்பே தடுக்கும் முயற்சியாக ஈடுபடுவது மிகச் சிறந்த சமூக சேவைதான்.

நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வினோத நாடகம் என்னும் முறையில் இத்திரைப்படமும் பார்க்கக் கூடியதாகவே அமைந்திருக்கிறது.

படக் குழுவினருக்கு நமது வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!

Our Score