சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..?

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி கிடைத்தும் துவங்கவில்லை. காரணம் என்ன..?

‘மழைவிட்டும் தூவானம் விடவில்லை’ என்ற கதையாக “சின்னத்திரை படப்பிடிப்புகளைத் துவக்கலாம்” என்று தமிழக அரசு பச்சைக் கொட்டி காட்டிய பின்பும் அதற்கான வேலைகளைத் துவக்க முடியாமல் தவிக்கிறார்கள் சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்கள்.

இதற்குக் காரணம் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு தமிழக அரசு விதித்துள்ள முக்கியமான ஒரேயொரு நிபந்தனைதான்.

“20 நபர்களை மட்டுமே வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்த வேண்டும்…” என்பதுதான் அந்த நிபந்தனை.

இப்போதெல்லாம் சாதாரணமான குறும்படத் தயாரிப்பிலேயே 10 பேர் வேலை செய்கிறார்கள். மெகா தொடரில் இதைவிட 10 பேரை கூடுதலாக வைத்துக் கொள்ளுங்கள் என்றால் எப்படி முடியும்..?

பொதுவாக ஒரு சின்னத்திரை தொடர் தயாரிப்பின்போது காட்சிகளைப் பொறுத்து 40-ல் இருந்து 60-பேர் வரையிலும் இருப்பார்கள்.

ஒவ்வொரு சீரியலிலும் முக்கியமான நடிகர், நடிகையர்கள் 10 பேர் இருந்தால் அதில் 5 பேர் தினமும் தேவைப்படுவார்கள். இவர்கள் அனைவருக்கும் தனித்தனி டச்சப் பாய் இருப்பார்கள். இவர்களுடன் உதவிக்கு 2 பேர் வருவார்கள்.

மேக்கப்மேன் மற்றும் அவரது உதவியாளர்கள் 2 பேர். கலை இயக்குநர் தலைமையில் அவரது உதவியாளர்கள் 2 பேர். கேமிராவை எங்கே வாடகைக்கு எடுத்து வருகிறார்களோ அவர்கள் 2 பேரை உதவியாளர்களாக அனுப்பி வைப்பார்கள். ஒளிப்பதிவாளர் தனது பங்குக்கு 3 உதவியாளர்களை வைத்திருப்பார்.

லைட்ஸ்மேன்கள் அவசியம் தேவைப்பட்டால் 8 பேர்கூட இருப்பார்கள். இதில் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் 2 பேர். நளபாக ஊழியர்கள் குறைந்தபட்சம் 4 பேராவது இருந்தாக வேண்டும். இதற்கும் மேலாக இயக்குநர், துணை இயக்குநர்கள் குறைந்தபட்சம் 5 பேர், தயாரிப்பு நிர்வாகி, தயாரிப்பு மேனேஜர் என்று சாதாரணமான சின்ன பட்ஜெட்டில் தயாராகும் சின்னத்திரை தொடர்களுக்கே 40 பேர் நிச்சயமாகத் தேவைப்படும்.

இந்த நிலையில் வெறும் 20 பேருக்கு மட்டுமே அனுமதி என்றால் இதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்..?

இதோடு கூடவே இன்னொரு பெரிய இடர்ப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இப்போது ஒளிபரப்பாகிவரும் பெரிய சின்னத்திரை தொடர்களில் முக்கியமான கேரக்டர்களில் நடிப்பவர்கள் பெரும்பாலோர் பெங்களூர், மற்றும் ஹைதராபாத்தில் வசித்து வரும் அண்டை மாநில நடிகைகள்தான்.

இப்போதைய கொரோனா கலவரத்தில் விமான வசதியும் சரிவர செய்யப்படாத சூழலாக இருக்கிறது. அப்படியே அவர்கள் விமானத்தில் வந்தாலும் அவர்கள் அப்படியே 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்ற தமிழக அரசின் உத்தரவும் சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்களை கலங்க வைத்திருக்கிறது.

இந்த அண்டை மாநில நடிகைகளை எப்படி தமிழகத்திற்குள் கொண்டு வருவது என்பதும் இப்போதைக்கு சின்னத்திரை தயாரிப்பாளர்களின் மிகப் பெரிய கவலையாக உள்ளது.

அப்படியே அனைத்தும் கிடைத்து படப்பிடிப்பு நடந்து வரும் சமயத்தில் யாராவது ஒருவருக்கு வைரஸ் தொற்று வந்தவிட்டால் என்ன செய்வது..? நோய் தொற்றாளர் நடிகர், நடிகையராக இருந்தால் அடுத்தடுத்த நாட்களின் படப்பிடிப்பு நிச்சயமாகத் தேவைப்படுவார். அவர் இல்லாமல் படப்பிடிப்பு நடத்த முடியாது. வேறு காட்சிகளை படமாக்க வேண்டுமென்றால் வேறு பல நடிகர்களும் வேண்டும். காட்சிகளைப் பிரித்து ஷெட்யூல் போடும் இயக்குநர்களும் இதை நினைத்து தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு சீரியலின் படப்பிடிப்பின்போது தொற்று ஏற்பட்டு அதன் படப்பிடிப்பு நின்று போனால், மொத்தமாக அனைத்து சீரியல்களின் படப்பிடிப்புகளும் தடை செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஏனெனில் ஒரு சீரியலில் பணியாற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அடுத்த நாள் வேறொரு சீரியலின் படப்பிடிப்புக்கு வேலைக்குச் செல்வார்கள். இதனால் தொற்று அடுத்தடுத்து வேறு, வேறு நபர்களுக்கு மிக விரைவில் பரவும் அபாயம் உண்டு.

இத்தனை பிரச்சினைகளையும் கூட்டிக் கழித்துப் பார்த்து யோசனையில் இருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அடுத்து என்ன செய்வது என்று ஒரு தீர்மானமான முடிவை எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக செய்தி, ஒளிபரப்புத் துறை அமைச்சரை நேரில் சந்தித்த பெப்ஸியின் தலைவர் ஆர்.கே.செல்வமணியும், சின்னத்திரை தொடர் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளரான நடிகை குஷ்பூவும் சின்னத்திரை தொடர்களில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை 40 ஆக உயர்த்தி அரசாணையைத் திருத்தித் தரும்படி கேட்டிருக்கிறார்கள்.

ஆனால், அமைச்சரோ, அரசோ இன்னும் இதற்கு செவி சாய்க்கவில்லை. ஏனெனில் தமிழகத்திலேயே சென்னையில் மட்டுமே தினமும் 500 பேருக்கும் மேல் வைரஸ் தொற்றில் ஆட்படுகிறார்கள். இதனைக் குறைக்க வேண்டிய நேரத்தில் கூட்டத்தைக் கூட்டி நோயாளிகளின் எண்ணிக்கையைக் கூட்ட வேண்டுமா என்று ஆட்சியாளர்கள் யோசிக்கிறார்கள்..!

இதுவே இப்படியொரு இடியாப்பச் சிக்கலில் இருப்பதை பார்க்கும்போது சினிமா தியேட்டர்கள் திறப்பு எப்போது..? சினிமா படப்பிடிப்புகள் துவங்குவது எப்போது..? என்பதற்கெல்லாம் விடை கண்ணுக்கெட்டிய தூரம்வரையிலும் இல்லவே இல்லை…!

Our Score