‘ZEE5’ OTT தளத்தில் ‘போலீஸ் டைரி-2.0’ புதிய தமிழ்த் தொடர்..!

‘ZEE5’ OTT தளத்தில் ‘போலீஸ் டைரி-2.0’ புதிய தமிழ்த் தொடர்..!

இந்தியாவில் பெரிதாக வளர்ந்து வரும் OTT தளமான ‘ZEE5’ சேனலில் தற்போது  ‘போலீஸ் டைரி 2.0’ என்னும் புத்தம் புதிய தமிழ் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தப் புதிய தொடரில் வின்சென்ட் அசோகன், சந்தோஷ் பிரதாப், ஜான் கொக்கன், பூஜா ராமச்சந்திரன், அஞ்சனா ஜெயப்பிரகாஷ் மற்றும் பாலாஜி மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் நடைபெற்ற புகழ் பெற்ற குற்றச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியிருக்கும் இத்தொடர், நவம்பர் முதல் தேதி முதல் ‘ZEE5’ தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்தத் தொடரை பிரபல நடிகையும், தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளருமான திருமதி குட்டி பத்மினி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘அர்பாட் சினி பாக்டரி’யின் சார்பில் தயாரித்துள்ளார்.

இதுவொரு அதிரடியான காவல் துறை தொடர்பான சம்பவங்களை விவரிக்கும் தொடராகும். தமிழ்நாட்டில் நடைபெற்ற புகழ் பெற்ற 52 மிகப் பெரிய சர்ச்சையான வழக்குகளைப் பற்றி இத்தொடர் பேசுகிறது.

இத்தொடரில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதைகளும் இரண்டு அத்தியாயங்களில் நடைபெறும். இரண்டு பாகங்களுமே ஒரே வாரத்தில், ஒரே நேரத்தில் வெளியிடப்படும்.

ஒவ்வொரு எபிசோடையும் தமிழ் சின்னத்திரையில் திறமை வாய்ந்த இயக்குநர்களான சிவமகேஷ், தனுஷ், பா.ராஜ கணேசன், ஆர்.பவன், விக்ரமன் மற்றும் ரமேஷ் பாரதி ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள்.

Police Diary 2.0-1

இத்தொடர் குறித்து ‘ZEE5’ தளத்தின் இந்தியாவின் செயல் தலைவர் அபர்ணா அசரெக்கார் பேசும்போது, "எங்களது ‘ZEE5’ தளத்தில் நாங்கள் எப்பொழுதும் மக்கள் விரும்புக்கூடிய புதுமையான, வித்தியாசமான கதைகளையே வழங்கி வருகிறோம். அந்த வரிசையில் இந்த ‘போலீஸ் டைரி-2.0’ தொடரில் 52 வித்தியாசமான கதைகள் இருக்கின்றன. தமிழகத்தையே குலுக்கிய அந்தக் குற்ற வழக்குகள் பற்றிய இத்தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும்..” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

kutty padmini-1

தொடரின் தயாரிப்பாளரான குட்டி பத்மினி பேசும்போது, "நாங்கள் ‘ZEE5’ நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.  இந்த ‘போலீஸ் டைரி 2.0’ தொடர் தமிழகத்தில் நடந்த பல குற்றச் செயல்களின் கதைகளாகும். பார்வையாளர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு இதையொட்டி நடக்கும் காட்சிகளிலிருந்து கவனமாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். இந்தியாவில் வெவ்வேறுவிதமாக பல குற்றச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இத்தொடரின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரிக்கும் என்றே நம்புகிறோம். ‘ZEE5’-தளத்தில் இத்தொடர் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்..." என்றார்.

இதுவரையிலும் ‘ZEE5’ தளத்தில் வெளியிடப்பட்ட மற்ற சுவாரசியமான தொடர்களான ‘கள்ளச் சிரிப்பு’, ‘ஆட்டோ ஷங்கர்’, ‘சிகை’, ‘களவு’, ‘அலாரம்’, ‘வாட்ஸ் ஆப் வேலைக்காரி’, ‘மிட்டா’, ‘திரவம்’, ‘பிங்கர் டிப்’, ‘போஸ்ட்மேன்’, ‘இக்லூ’ மற்றும் ‘நிஷா’ ஆகியவை பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

இது மட்டுமின்றி ‘ZEE5’ தளத்தில் காணப்படும் வெற்றி பெற்ற தமிழ்ப் படங்களான, ‘தேவி-2’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘விக்ரம் வேதா’, ‘கோலமாவு கோகிலா’, ‘மெர்சல்’ மற்றும் ‘தில்லுக்கு துட்டு-2’ ஆகியவையும் பெரிய அளவிற்கு பார்வையாளர்களை கவர்ந்திழுத்துள்ளன.