full screen background image

பிரபல சினிமா பின்னணி பாடகி கல்யாணி மேனன் காலமானார்

பிரபல சினிமா பின்னணி பாடகி கல்யாணி மேனன் காலமானார்

தமிழ்ச் சினிமாவின் மூத்த பின்னணி பாடகியான கல்யாணி மேனன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80.

பிரபல இயக்குநர் ராஜீவ் மேனனின் அம்மாவான கல்யாணி மேனன் தமிழ், மலையாளம் என்று பல மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் 1979-ம் ஆண்டு வெளியான ‘நல்லதொரு குடும்பம்’ என்ற படத்தில் ‘செவ்வானமே பொன் மேகமே’ என்ற பாடல்தான் கல்யாணி மேனன் தமிழில் பாடிய முதல் பாடலாகும்.

இதையடுத்து இன்றும் தமிழகத்து மக்கள் மறக்க முடியாத பாடலாக இருக்கும் ‘சுஜாதா’ படத்தில் இடம் பெற்ற ‘நீ வருவாய் என’ என்ற பாடலையும் கல்யாணி மேனன்தான் பாடியிருக்கிறார்.

மேலும் ‘வாழ்வே மாயம்’ திரைப்படத்தில் ‘ஏய் ராஜாவே உன் ராஜாத்தி’ என்ற பாடலையும், ‘சவால்’ படத்தில் ‘தண்ணிய தொட்டா சந்தோஷம் பிறக்கும்’ என்ற பாடலையும், ‘விதி வரைந்த பாதை வழியே’ என்ற ‘விதி’ படத்தில் இடம் பெற்ற பாடலையும் பாடியிருக்கிறார் கல்யாணி மேனன். மேலும் ‘சுப முகூர்த்தம்’ என்ற படத்தில் ‘நான் இரவில் எழுதும் கவிதை முழுதும்’ என்ற பாடலையும், ‘மூக்குத்தி மீன்கள்’ என்ற படத்தில் ‘தேரில் வந்தால் தேவதை’ என்ற பாடலையும் பாடியிருக்கிறார்.

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில்தான் மீண்டும் பாடல்களை பாட ஆரம்பித்தார் கல்யாணி மேனன்.

‘புதிய மன்னர்கள்’ படத்தில் ‘வாடி சாத்துக்குடி’ பாடல், ‘முத்து’ படத்தில் ‘குலுவலிலா’ பாடல், ‘அலைபாயுதே’ படத்தில் ‘அலைபாயுதே’ பாடல், ‘பார்த்தாலே பரவசம்’ படத்தில் ‘அதிசய திருமணம்’ பாடல், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ‘ஓமணப் பெண்ணே’ பாடலையும் பாடியிருந்தார். அதோடு ரஹ்மானின் புகழ் பெற்ற ஆல்பமான ‘வந்தே மாதரம்’ பாடலையும் கல்யாணி மேனன் பாடியிருக்கிறார். கடைசியாக கோவிந்த் வசந்த் இசையமைப்பில் புகழ் பெற்ற திரைப்படமான ‘96’ படத்தில் ‘காதலே காதலே’ பாடலை பாடியிருந்தார் கல்யாணி மேனன்.

வயது மூப்பின் காரணமாக எழுந்த உடல் பிரச்சினைகளால் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கல்யாணி மேனன் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மதியம் உயிரிழந்தார்.

இவருக்கு இயக்குநர் ராஜீவ் மேனன் மற்றும் கருணாகரன் மேனன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இறுதிச் சடங்கு நாளை பிற்பகல் சென்னையில் நடைபெறவுள்ளது.

Our Score