பல வெள்ளி விழா திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், முதல் முறையாக திரைப்பட தயாரிப்பில் இறங்கியிருக்கிறது.
ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முன்னணி வேடத்தில் நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தை இந்த நிறுவனம் தனது முதல் படமாகத் தயாரிக்கிறது.
இப்படத்தில் யோகிபாபு, முனீஸ்காந்த், சத்யன், காளி வெங்கட், மற்றும் சின்னத்திரை புகழ் டி.எஸ்.கே. என பலமான நகைச்சுவை கூட்டணியுடன், ஒரு சவாலான கதாபாத்திரத்தில், திகிலாக வலம் வரவிருக்கிறார் நடிகை தமன்னா.
இவர்களுடன் பிரேம், ஸ்ரீஜா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், பேபி மோனிகா மற்றும் பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
டேனி ரேமண்ட்டின் ஒளிப்பதிவில், லியோ ஜான் பாலின் படத் தொகுப்பில், வினோத் ராஜ்குமாரின் கலை இயக்கத்தில், ஜிப்ரானின் இசையமைப்பில் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்த திகிலான நகைச்சுவை படத்திற்கு ஜி.ஆர்.சுரேந்தர்நாத் வசனம் எழுத, சண்டை பயிற்சிக்கு ஹரி தினேஷ் பொறுப்பேற்று இருக்கிறார்.
‘அதே கண்கள்’ வெற்றி திரைப்படத்தின் மூலம், தனது வித்தியாசமான அணுகுமுறையால் மக்களை பெரிதும் கவர்ந்த இயக்குநர் ரோகின் வெங்கடேசன், இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
தனது முதல் தயாரிப்பிலேயே பெண்களை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆழமான கதையை திகில் மற்றும் நகைச்சுவை கலந்து ஒரு ஜனரஞ்சகமான படமாக படைக்க இருக்கிறது ஈகிள்ஸ் ஐ புரொடெக்சன்ஸ் நிறுவனம்.
இத்திரைப்படம் பற்றி இயக்குநர் ரோகின் வெங்கடேசன் பேசும்போது, “ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு பிரச்சனை நிச்சயம் இருக்கும். அதை தீர்க்கும் நோக்கில் ஒவ்வொருவராக இணைந்து, இறுதியில் ஒரு பலமான கூட்டணியாக சேர்ந்து, தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அந்தப் பிரச்சனை தீர்ந்ததா.. இல்லையா.. அந்த பிரச்சனைகளுக்கு யார் காரணம்… அதை அவர்கள் எப்படி வெற்றி கொண்டார்கள் என்பதை நகைச்சுவையும், திகிலும் கலந்து ஜனரஞ்சகமாக படமாக தரவிருக்கிறோம்..” என்றார்.