full screen background image

பேரன்பு – சினிமா விமர்சனம்

பேரன்பு – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை ராஜலட்சுமி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார்.

படத்தில் மம்மூட்டி, சாதனா இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், அஞ்சலி, அஞ்சலி அமீர், பாவெல் நவகீதன், லிஸி ஆண்டனி, லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி, சமுத்திரக்கனி, சண்முகராஜா, ‘பூ’ ராமு, அருள்தாஸ், சுனந்தா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தேனி ஈஸ்வர், இசை – யுவன் ஷங்கர் ராஜா, படத் தொகுப்பு – சூர்ய பிரதாபன், பாடல்கள் – வைரமுத்து, சுமதி ராம், கருணாகரன், கலை இயக்கம் – குமார் தங்கப்பன், உடைகள் வடிவமைப்பு – அபிஜித் நாயர், எஸ்.வீணா, பின்னணி இசை சேர்ப்பு – ஜி.சுரேன், ஒலிக் கலவை – எம்.ஜே.ராஜூ, புகைப்படங்கள் – ஜெய்குமார் வைரவன், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – பி.எஸ்.பெருமாள், இணை தயாரிப்பு – டி.சரஸ்வதி, தயாரிப்பு – பி.எல்.தேனப்பன், எழுத்து, இயக்கம் – ராம்.

‘கற்றது தமிழ்’, ‘தங்க மீன்கள்’, ‘தரமணி’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குநர் ராம் இயக்கியிருக்கும் நான்காவது திரைப்படம் இது.

தமிழ்ச் சினிமாவில் உன்னதத்தைத் தேடியலையும் இயக்குநர்கள் மிகவும் குறைவு. அதில் தற்போது முன்னணியில் இருப்பவர் இயக்குநர் ராம். அவருடைய முந்தைய மூன்று திரைப்படங்களுமே ஏதாவது ஒரு வகையில் தமிழ்ச் சினிமா என்றில்லாமல் சினிமா என்னும் கலைக்கே ஒரு புதிய வர்ணத்தைக் கொடுத்திருக்கின்றன.

இந்த உலகம் சராசரியான மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, சில பிரத்யேகமான சிக்கல்களை உடைய மனிதர்களுக்குமானது. அவர்களையும் அரவணைத்துச் செல்லும் கடமையும், பொறுப்பும் சக மனிதர்களுக்கும், இந்தச் சமூகத்திற்கும் உண்டு என்பதை அழுத்தமாகச் சொல்ல வந்திருக்கிறது இந்த ‘பேரன்பு’ திரைப்படம்.

மூளை முடக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரு இளம் பெண்ணும், அவளது தேவைகளைப் பூர்த்தி செய்யத் துடிக்கும் அவளது அப்பாவும், இந்தச் சமூகம் அவர்களுக்குக் கொடுக்கும் பாடங்களும், உபாதைகளும்தான் படத்தின் திரைக்கதை.

ஒரு சிறிய துன்பத்தைக்கூட கண்டிராத மாந்தர்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்தச் சமூகத்தில் வாழ்ந்தே பயனில்லை என்கிற நிலைமையில் இருந்தாலும் வாழத் துடிக்கும் ஒரு அப்பாவி மனித ஜீவனையும், அதன் சிரிப்பில் தன் உலகத்தையே காணும் ஒரு அனாதையான அப்பாவையும் அடையாளம் காட்டியிருக்கிறார் இயக்குநர் ராம்.

பேரன்பு.. இது அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் கிடைத்திராத ஒரு அட்சயப் பாத்திரம். கிடைத்தவர்கள் பாக்கியவான்கள். கிடைக்காதவர்கள் அதிர்ஷ்டமற்றவர்கள். இந்தப் பேரன்பைத் தேடித்தான் அமுதவன் என்னும் மம்மூட்டியும், அவரது 16 வயது அன்பு மகளான பாப்பா என்னும் சாதனாவும் ஓடுகிறார்கள்.  

அவர்களுடைய ஓட்டத்தின் முடிவில் அவர்கள் எதிர்பார்த்த பேரன்பு இந்த உலகத்தில் அவர்களுக்குக் கிடைத்ததா இல்லையா என்பதுதான் அவர் நம் முன் வைக்கும் வினா.

மம்மூட்டி வெளிநாட்டில் வேலை பார்த்தவர். சென்னையில் அவருடைய மனைவியும், மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணும் இருந்தார்கள். அவருடைய மனைவி ஒரு நன்னாளில் வேறொருவருடன் ஓடிப் போகிறார். போகிறவர் தைரியமாக ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

தனக்கு மம்மூட்டியாலும், அவரது மகளாலும் நிம்மதியும், சந்தோஷமும் கிடைக்கவில்லை. ஆகவே வேறு துணையை தேடிக் கொண்டேன் என்று எழுதியிருக்கிறார். வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய மம்மூட்டி தனது மகளுடன் நெருக்கமாக இருக்க முயல்கிறார். ஆனால் அம்மா இல்லாமல் மகள் முகம் காட்ட மறுக்கிறார்கள். சாப்பிட மறுக்கிறாள்.

அதோடு அவளது கூச்சல்கள் அக்கம், பக்கத்தினரை தொந்திரவு செய்வதாகச் சொல்லி அவரது வீட்டை காலி செய்யச் சொல்கிறார்கள். அதோடு அவரது சொந்தத் தம்பி மனைவியே வேறு வீடு பார்த்து போயிருங்க என்கிறார். சொந்தமே கைவிட்ட பின்பு என்ன செய்வது என்பது தெரியாமல் மம்மூட்டி குழம்புகிறார்.

முதலில் தனது மகளுக்குத் தேவை அமைதியான இடம் என்பதை மட்டும் உணர்ந்தவர் கொடைக்கானலில் ஒரு உள்ளடங்கிய பகுதியில் ஒரு வீட்டை விலைக்கு வாங்கி அங்கே வந்து தங்குகிறார். அங்கே அவரும், அவரது மகளும் மட்டுமாய் வாழ்கிறார்கள். மகளுக்கு இயற்கை அழகும், பறவைகளின் சப்தமும், விலங்குகளின் நெருக்கமும் மிகவும் பிடித்துப் போகிறது.

மகளின் புன்னகையே அந்தத் தகப்பனுக்கு நிம்மதியையும், உணவையும் ஊட்டுவதால் சந்தோஷத்தில் இருக்கிறார் மம்மூட்டி. ஆனால் இயற்கை விடவில்லை. அவரை அச்சுறுத்துகிறது. அந்த இடத்தை வாங்கி ரிசார்ட் கட்ட நினைக்கும் ரியல் எஸ்டேட் கும்பல் அவரை அங்கேயிருந்து விரட்ட நினைக்கிறது.

அடித்து, உதைத்து, மிரட்டிப் பார்க்கிறது. அசராமல் நிற்கிறார் மம்மூட்டி. உடனேயே பெண் என்னும் ஆயுதத்தை அனுப்பி மயக்கப் பார்க்கிறார்கள். அஞ்சலி வேலை தேடி வந்து அந்த வீட்டில் தஞ்சமடைய.. மம்மூட்டி தனது மகளுக்கு ஒரு பெண் துணை தேவை என்பதால் வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.

இந்த ஒட்டுதல் அடுத்த சில மாதங்களில் நெருக்கமாகிவிட.. தனது மகளுக்காக அஞ்சலியைத் திருமணம் செய்து கொள்கிறார் மம்மூட்டி. ஆனால் சில நாட்களில் அஞ்சலிக்கு கொடுக்கப்பட்ட அசைண்மெண்ட் முடியும் தருணத்தில் அஞ்சலியின் சுயரூபம் தெரிய.. மம்மூட்டி அவரை வீட்டிலிருந்து வெளியில் அனுப்புகிறார்.

அஞ்சலிக்காக கட்டப் பஞ்சாயத்து செய்யும் கும்பல், அஞ்சலிக்கு நஷ்ட ஈடாக அந்த வீட்டையே எழுதி வாங்கிக் கொண்டு மம்மூட்டியை வெளியே துரத்துகிறது. நகரம் என்னும் நரகத்திற்கு வரும் மம்மூட்டி தனது குழந்தை போன்ற 16 வயது மகளுடன் என்ன பாடுபடுகிறார்.. எப்படி அவளைக் காப்பாற்றுகிறார்.. இவர்கள் மீது பேரன்பு காட்ட யாராவது முன் வந்தார்களா.. இல்லையா.. என்பதுதான் இந்த பேரன்பு படத்தின் கதைச் சுருக்கம்.

அமுதவன் என்னும் அந்த அபாக்கியவாதி அப்பா கேரக்டருக்கு மம்மூட்டி சரியான தேர்வு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் படத்தின் பிரதான கேரக்டருக்கு ஏற்ற நடிகராகவும் இருக்க வேண்டும். மார்க்கெட்டிங்கில் முன்னணியில் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். அதோடு தனது நாயக பிம்பத்தைப் பற்றிக் கவலைப்படாமல் அடி வாங்குபவராகவும் நடிக்க வேண்டுமெனில் மம்மூட்டி இதில் ஒட்டிக் கொண்டதில் பெரிய ஆச்சரியமில்லை.

அவருடைய இயல்பான தோற்றப் பொலிவும், முகத்தில் காட்டும் சீரியஸ்தனமும், அப்பா காட்டும் பாசம் மகளுக்குப் புரியாதவகையில் இருக்கும்வகையிலான நடிப்பை அவர் காட்டியிருக்கும் விதம்தான் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சின் பலம்.

தன் மகளை இத்தனை நாட்களாகத் தான் பிரிந்திருந்து பார்க்காமல், பழகாமல், அன்பு காட்டாமல் இருந்தது தவறு என்றெண்ணி தன்னை கழிவரக்கத்திற்குத் தள்ளிக் கொண்டு நிற்கும் அவரது நடிப்பில் குற்றம் குறையை எவரும் கண்டுபிடித்துவிட முடியாது.

அந்த வீட்டின் இறுக்கமான சூழலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மகளுக்காக விளையாட்டுக் காட்டி.. ஓடி, நடனமாடி.. தன்னுடைய வயதினாலும், பெருத்த உடலினாலும் முடியாமல் ஓய்ந்து போய், அப்பாவால இதுக்கு மேல முடியலடா.. உன்னை எப்படி சந்தோஷமாப்படுத்துறதுன்னு தெரியலை என்று சொல்லி கண் கலங்கும் காட்சியில் நம்மையும் சேர்த்தே கண் கலங்க வைத்திருக்கிறார் மம்மூட்டி.

மகள் என்பதால் ஒரு தந்தையாக அவருக்கு ஏற்படும் சின்னச் சின்ன தர்மசங்கடங்களையும் நியாயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். மகளின் ரத்தக் கறையைப் பார்த்து கலவரப்படும் காட்சியிலும், அதைத் தொடர்ந்து மகளுக்கு ஏதாவது செய்யணுமே என்று அவர் தவிக்கும் தவிப்பும்.. அந்தப் பிரச்சினையை அவர் முடிக்கும்விதமும், அடுத்து நான் என்ன செய்யப் போகிறேன் என்பதுபோல் அவர் காட்டும் நடிப்பும் ஐயையோ என்று நம் வயிற்றுக்குள் பிரளயத்தை உருவாக்குகிறது.

இதேபோல் மகளின் தீரா சவலை நோய் என்னும் காதல் நோயைக் கண்டறிந்துவிட்டு தன்னுடைய கையாலாகதத்தனத்தை நினைத்து அவர் கதறி அழும் அந்த ஒரு காட்சியில் இத்தனையாண்டு கால மெகா ஸ்டாரின் அனுபவ நடிப்பைக் காண முடிகிறது.

மகளை வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்க நினைத்து இன்னொருவருக்கு மனைவியாக இருக்கும் தன்னுடைய மனைவியைப் பார்க்கப் போகும் காட்சியில் கைக் குழந்தையின் அழுகுரலைக் கேட்டவுடன் மம்மூட்டி காட்டும் ரியாக்சனும், “பையன் நல்லாயிருக்கான். அவனுக்கு எதுவும் இல்லை” என்று தன் மனைவியின் கணவன் சொல்லுமிடத்தில் ஜெர்க் ஆகும் மம்மூட்டி, அடுத்த நொடி எழுந்து வெளியேறும் காட்சியில் கைதட்டக் கூட மறந்துபோய் அமர்ந்திருக்கிறோம். அத்தனை யதார்த்த நடிப்பு..!

மம்மூட்டி ரியல் எஸ்டேட் ரவுடிகளிடம் மட்டுமே அடி வாங்கவில்லை. செக்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் அலுவலகத்தில் இருக்கும் ஒருங்கிணைப்பாளர் பெண்ணிடமும் அறை வாங்குகிறார் நாயகன் மம்மூட்டி. அந்தக் காட்சியில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டார் என்பதே மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் அந்தக் காட்சி பல கோடி மனிதர்களின் செவிட்டில் அறைந்தது போல இருக்கிறது. மம்மூட்டியின் அந்தக் கேள்விக்கு யார்தான் விடையளிப்பது..? மம்மூட்டிக்கு இந்தக் கேரக்டர் இன்னுமொரு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் யாரேனும் பார்த்திருக்கிறோமா.. பார்த்திருந்தால் அந்த நோயின் தாக்கம் நமக்குப் புரியும். இதுவரையிலும் பார்த்திராதவர்களுக்கு அந்த நோயின் கொடுமையைக் காட்டுவதைப் போல நடித்திருக்கிறார் பாப்பா என்னும் கேரக்டரில் நடித்திருக்கும் சாதனை.

உண்மையிலேயே இவர் அந்த நோயால் பாதிக்கப்பட்டவரோ என்று தெரியாதவர்கள் நினைக்கும் அளவுக்கு இவரது நடிப்பு படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது.

கைகளையும் கால்களையும் கோணலாக வைத்துக் கொண்டு கூடவே முகத்தையும் அதுபோலவே மாற்றி வைத்துக் கொண்டு நடிப்பதென்பது சுலபமல்ல. இந்தக் கேரக்டரில் நடிக்க இந்தப் பெண் எத்தனை தூரம் கஷ்டப்பட்டிருப்பார் என்பதை உணர முடிகிறது. அற்புதமான நடிப்பு.

முதலில் அப்பாவை பார்த்து மிரண்டு போய் ஒளிவதும், சகஜமான வாழ்க்கைக்கு வராமல் இருப்பதுமாய் இருக்கிறார். ஒரு அளவுக்கு அமுதவனின் முகம் அவருக்குப் பழக்கமானவுடன் இயற்கையையும், குருவியையும், குதிரையையும் அவருக்குப் பிடித்தும்போகும்போது பார்வையாளர்களுக்கும் பிடிக்கும்வகையில் அவரைக் காட்டுயிருக்கிறார் இயக்குநர்.

ரத்தத்தைப் பார்த்து பயப்படுவது.. டிவியில் இளையோர் ஆட்டத்தைப் பார்த்து குதூகலிப்பது.. தனக்குப் பிடித்த நாயகனின் முகத்தை டிவியின் அருகில் சென்று பார்த்து அந்தப் பிம்பத்தை நாவால் தொட்டு அகமகிழ்வது.. என்று அந்தக் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் சாதனா. வாழ்த்துக்கள்.. பாராட்டுக்கள் சாதனாவுக்கு..!

நடிகை அஞ்சலி படத்தின் முற்பாதியில் ஒரு மணி நேரம் மட்டுமே தோன்றுகிறார். அவர் அறிமுகமாகும் காட்சியில் மின்னலாய் தோன்றி பின்பு கடைசியில் துரோகத்தின் சாட்சியாய் நம்மிடமிருந்து விலகுகிறார்.

அமுதவனுக்குத் தூண்டில் போடுகிறார் போன்ற திரைக்கதையைக் காட்டிய பின்புகூட அவருக்குள் இருக்கும் ஒரு தாய்மை உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இதனாலேயே இவர் மீதான ஒரு பரிதாப உணர்வு கடைசிவரையிலும் நமக்குள்ளும் இருக்கிறது.

“நாங்க எதுக்காக இதைச் செஞ்சோம்ன்னு ஒரு நிமிஷம் கேட்டுட்டுப் போங்க ஸார்…” என்று மம்மூட்டியிடம் கணவனும், மனைவியுமாய் கேட்டும், அதற்கு மம்மூட்டி சொல்லும் பதில்.. இந்த உலகத்தில் இன்னமும் பேரன்பு மிக்கவர்கள் நிறைந்திருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது. இந்தக் காட்சியை படமாக்கியவிதம் மிக, மிக அருமை.

படத்தில் இன்னொரு முக்கியமான ஒரு கேரக்டரில் அஞ்சலி அமீர் என்னும் திருநங்கை நடித்திருக்கிறார். அது அவர் இருக்கும் இயல்பான மாற்றுத் திறனாளி கேரக்டர்தான். பாலியல் தொழில் செய்யும் அவர் ஒரு சந்தர்ப்பத்தில் மம்மூட்டியைச் சந்திக்க அவருக்கு உதவிகளைச் செய்யப் போய் ஒரு கட்டத்தில் மம்மூட்டியின் கோபத்திற்குள்ளாகி விலகிப் போனாலும், கடைசியாக மனிதர்களில் தேடுவதைவிடவும் இவர்களே நமக்கு பேரன்பானவர்கள் என்பதைப் புரிய வைக்கும் கேரக்டரில் இயல்பாக நடித்திருக்கிறார் இந்த இரண்டாவது அஞ்சலி.

கேரளாவின் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பலவித ஷோக்களில் கலந்து கொண்டு தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியிருக்கும் அஞ்சலி அமீரை மம்மூட்டியே இயக்கநர் ராமிடம் சொல்லி அறிமுகப்படுத்திவைத்து இதில் நடிக்க வைத்திருக்கிறார். இதற்காக மம்மூக்காவுக்கு நமது நன்றிகள் உரித்தாகட்டும்.

தனது பாலியல் தொழிலில் ஏற்படும் ஆபத்துகளைச் சந்தித்தாலும், அடுத்த நாளே எதுவுமே நடக்காததுபோல அவர் இருப்பதும், இயற்கை ரசித்தபடியே அன்றைய நிமிடத்தை கொண்டாட வேண்டும். அனுபவிக்க வேண்டும் என்கிற அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை மம்மூட்டி ரசிப்பதாக வைத்திருக்கும் திரைக்கதையாலும் ரசிக்க வைத்திருக்கிறார் அஞ்சலி. இதேபோல் மம்மூட்டி வீட்டுக்கு வாங்க என்று அழைத்ததுமே ஒரு மணப்பெண் தோற்றத்தில் முகம் முழுக்க காதல் பொங்கி வர அவர் நடந்து வரும் அழகும், பேசும் பேச்சும்.. இயல்பான பெண்களிடத்தில்கூட பார்க்க முடியாதது. வெல்டன் அஞ்சலி அமீர்.

சிறப்புக் குழந்தைகளுக்கான மருத்துவராக சமுத்திரக்கனி.. இது மாதிரியான குழந்தைகளை வளர்ப்பதில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களை விளக்கி வழி காட்டுகிறார்.  

தன்னுடைய மனைவியின் இப்போதைய கணவராக காட்டப்படும் அந்த நபர், எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்துக் கொண்டு பேசும் லிவிங்ஸ்டன், ஏமாற்றுப் பேர்வழியான குழந்தைகள் காப்பக நிர்வாகி சண்முகராஜா.. மம்மூட்டியின் மனைவியான லிஸி ஆண்டனி, யதார்த்த நிலைமையை விளக்கிச் சொல்லும் தம்பி மனைவி என்று சிற்சில கேரக்டர்களும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள்.

தன்னுடைய மகளை அடையாளம் காட்டித் தப்பிக்க வைக்கும் மன நலம் குன்றிய பையனின் அப்பாவான பூ ராமிடம் உங்க பையனை அடிக்கிறாங்க ஸார் என்று மம்மூட்டி சொல்லும்போது “பரவாயில்லை ஸார். அடிச்சிட்டுப் போகட்டும். வெளில வந்தால் நிறைய பேர் இங்க அடிப்பாங்க.. உதைப்பாங்க.. அதுக்கு அவன் அங்க ஒருத்தர்கிட்டயே அடி வாங்கட்டும்…” என்று விரக்தியாய் சொல்லிவிட்டுப் போகும் காட்சியொன்றே இது போன்ற குழந்தைகளின் தகப்பன்களின் யதார்த்த நிலைமையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.  

மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படம் போலவே இந்தப் படத்திற்கும் மிகப் பெரிய பலமாக இருந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். கொடைக்கானல் மலைப் பிரதேசத்தின் காட்சிகள் அனைத்துமே கவித்துவமானவை. இயற்கை எழிலை அப்படியே அங்குலம், அங்குலமாக பதிவு செய்திருக்கிறார்.

இரவு நேரக் காட்சிகளில் பனி போர்த்திய நிலையிலும், அதிகாலை நிகழ்வில் பனி அகலும் வித்தையையும் படமாக்கியிருக்கும்விதம் அற்புதம் என்றே சொல்லலாம்.

இதற்கு நேரெதிராக நகரம் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் அதிலும் இரவு நேர தூங்கா நகரத்தைக் காட்சிப்படுத்தியதிலும் முத்திரை பதித்திருக்கிறார் தேனி ஈஸ்வர். பாராட்டுக்கள் ஸார்.

இது போன்ற மெல்லிய சோகக் காவியங்களுக்கு பாடல்களே தேவையில்லைதான். ஆனால் தமிழ்ச் சினிமாவின் அமைப்பியல் அதைக் கேட்பதால்தான் யுவன் சங்கர் ராஜா போன்ற பெரிய இசையமைப்பாளர்களைத் தேட வேண்டியிருக்கிறது. பாடல்கள் காட்சிகளை நகர்த்த உதவியிருந்தாலும் பின்னணி இசை சில இடங்களில் அதிகமான ஹிப்பை கூட்டியிருக்கிறது. பல காட்சிகளுக்குப் பொருத்தமாகவும் இருந்திருக்கிறது.

இயக்குநர் ராமின் படத் தொகுப்பாளர்களுக்கு எப்போதுமே வேலைகள் கடினமாக இருக்கும். இதிலும் அப்படியே. ஒரு காட்சியின் முடிவில் துவங்கும் சோகம் அடுத்தக் காட்சியின் துவக்கத்திலும் இருக்கும் என்கின்ற ஒருவித ஒற்றுமையை கனக்கச்சிதமாக நறுக்கிக் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் சூர்ய பிரதாபன்.

கண்களை உறுத்தாத கலை இயக்கப் பொருட்களும், காட்சிக்கு பொருத்தமாக இருந்த அனைவரது உடைகளின் வண்ணங்களும்கூட படத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

படத்தின் கதையைச் சொல்லும் விஸ்தாரத்தில் உலகளாவிய பொதுப் பிரச்சினைகளையும், பெண்ணிய புரிதல்களையும், ஒடுக்கப்பட்டவர்களின் அரசியலையும் பேசுவதுதான் இயக்குநர் ராமின் வழக்கம். அதையேதான் இந்தப் படத்திலும் தயவு தாட்சண்யமே பார்க்காமல் அழகாகப் பேசியிருக்கிறார் ராம்.

“வாழ்க்கையில் சில ஏன் என்ற கேள்விக்கு விடையே கிடைக்காது…” என்கிற யதார்த்தவாத உண்மையைப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இந்தப் படத்தின் தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் இல்லாத இடமே இல்லை. அரசியல் இல்லாத தன்மையே இல்லை என்பதை உணர வைப்பது போலவே இந்த ‘பேரன்பு’ திரைப்படமும் சகலவித அரசியலையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.  

படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ‘இயற்கை அழகானது’, ‘இயற்கை கொடுமையானது’, ‘இயற்கை இயல்பானது’, ‘இயற்கை பேரன்பால் ஆனது’ என்பன போன்ற தலைப்புகளில் பல கதைகளாக விரிகிறது இதன் திரைக்கதை.

இந்தப் படத்தின் திரைக்கதை படத்தில் காட்டப்படும் அந்த ஒரு சிறிய நதியைப் போலவே அழகாக ஒரே நேர்க்கோட்டில் பயணித்திருக்கிறது. ஒரு மில்லி மீட்டர்கூட கதையின் மையத்தைவிட்டு படம் அகலவில்லை.

துவக்கத்தில் ஒலிக்கும் சோகம் ததும்பிய மம்மூட்டியின் வார்த்தைகள் சோகத்தை தோய்த்தெடுத்து நமது மனதைப் பிறண்டு போக வைக்கும் அளவுக்கு பேசுகிறது. அந்தக் காட்சிகளின் ஊடேயே சிற்சில காட்சிகளை வெட்டி, வெட்டிக் காட்டி கதையின் போக்கைச் சொல்லிவிடுகிறார் இயக்குநர்.

பார்க்கச் சகிக்காத அளவுக்கு ஒரு பெண் நமக்கு இருக்காளே என்கிற விரக்தியில் ஊர்ப் பக்கமே வராத அப்பனுக்கு, இனி தான்தான் அம்மையும், அப்பனுமாக அந்தப் பெண்ணுக்கு இருக்க வேண்டிய கட்டாயம் என்னும்போதுதான் மகள் முன்பாக வந்து நிற்கிறார். மகளுக்கோ பெரிய ஆண் மகனைப் பார்த்தவுடன் பயம் வருகிறது. முகம் காட்டுவதற்கே முரண்டு பிடிக்கிறாள். அப்பனுக்கு மகளுடன் பழகிப் பார்க்க ஆசை. ஆனால் அதற்கு வீடு இடம் கொடுக்கவில்லை. தனியான இடம் கிடைத்தால்தான் அனைத்தும் சாத்தியப்படும் என்பதால் பேரன்பைத் தேடி தனது பயணத்தைத் துவக்குகிறார். இப்படித்தான் காரண காரியத்தை மிகச் சரியாகச் சொல்லி திரைக்கதையைத் துவக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்.

இப்படியொரு தன்னந்தனி வீட்டில்.. நட்ட நடுக் காட்டில்.. மழையும், இருட்டும், பனியுமாக பொழிந்து கொண்டிருக்கும் அந்த இடத்தில் வேறு எவரும் உடன் இருக்க முடியாத சூழலில் இவர்கள் மட்டும் இருக்க வேண்டிய அவசியமென்ன.. இந்த அறிவு சார்ந்த சமூகம் அவர்களை ஏன் கைவிட்டது என்பதை ஒரு கேள்விக்குறியாக எழுப்புகிறார் இயக்குநர்.

நம்முடைய கற்றறிந்த சமூகம்தான் அவர்களை தூரமாக ஓரங்கட்டி அமர வைத்திருக்கிறது என்பதை கொஞ்சம், கொஞ்சமாகத் திரைக்கதையில் பேசுகிறார் இயக்குநர்.

ஒரு நாய் தன் குட்டிகளை பிறர் கண்ணில் படாமல் தினம் ஒரு இடத்துக்குக் கொண்டு சென்று இடம் பெயர்வதை போலவே மம்மூட்டியும் தனது மகள் சாதனாவை அழைத்துக் கொண்டு இடம் பெயர்கிறார். அந்த இடம் பெயர்தலில் அவருக்குக் கிடைக்கும் மனிதர்கள், அவர்களால் அவருக்குக் கிடைக்கும் அனுபவங்கள்.. அதனால் அவருக்குக் கிடைக்கும் உதவிகளும், உபத்திரவங்களும்.. மகளின் டீன் ஏஜ் பிரச்சினைகளைத் தாங்க முடியாமல் அவர்  இறுதியில் எடுக்கும் ஒரு முடிவு நினைத்துக்கூட பார்க்க முடியாதது..!

ஒரு சாதாரண காரோட்டியாக இருக்கும் மம்மூட்டி எப்படி ஒரு 16 வயது குழந்தைக்கு தனது பேரன்பை காட்டி தாயாகிறான் என்பதை அற்புதமான கவிதை வடிவில் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர். பேரன்பிலான பேரன்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ராம்.

சாதனா போன்ற குறைபாடுகளைக் கொண்ட குழந்தைகளுக்கு மன ரீதியாக சிகிச்சையளித்து சிறப்பிக்க இந்தியாவில் எத்தனை ஊர்களில் சிறப்பு மருத்துவமனைகளும், இயக்கங்களும் இருக்கின்றன என்று தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளில் இருக்கும் அளவுக்கு நம் நாட்டில் இதற்கான விழிப்புணர்வு இல்லை என்பது மட்டுமே உண்மை.

இத்திரைப்படம் சொல்லும் உண்மையை இந்தச் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் புரிந்து கொண்டால் அவர்களுக்கும் நலம். அந்தக் குழந்தைகளுக்கும் நலம்.

இந்த உலகம் சராசரியான மனிதர்களுக்கு மட்டுமானதல்ல, சில பிரத்யேகமான சிக்கல்களை உடைய மனிதர்களுக்குமானது, அவர்களும் இயற்கையின் ஒரு பகுதியே என்கிற செய்தியைக் கவித்துவமான பல காட்சிகளால் உணரச் செய்கிறது இந்தத் திரைப்படம்.

படத்தின் துவக்கத்தில் மம்மூட்டி வாய்ஸ் ஓவரில் “என் வாழ்க்கையைப் பாருங்கள்… நீங்கள் எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவர் என்பதை உங்களால் உணர முடியும். அதற்காகத்தான் இந்தக் கதையை சொல்கிறேன்…” என்று தன் முன்னுரையில் சொல்வது எவ்வளவு உண்மையானது என்பதைப் படம் பார்த்துவிட்டு வெளியேறும் ரசிகர்களின் முகங்களே சொல்கின்றன.

இந்தப் ‘பேரன்பு’ திரைப்படம் வெறுமனே பார்ப்பதற்காக மட்டுமே அல்ல; கண்டு உணர்வதற்காகவும்தான்..!

அவசியம் பாருங்கள்..!

Our Score