full screen background image

மெட்ராஸ் மேட்னி – சினிமா விமர்சனம்

மெட்ராஸ் மேட்னி – சினிமா விமர்சனம்

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் மெட்ராஸ் மேட்னி’.

இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதாமதுமிதாசாம்ஸ்கீதா கைலாசம்பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஆனந்த் ஜி.கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே.சி.பால சாரங்கன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை சதீஷ்குமார் சமுஸ்கி மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்புகளை ஜாக்கி ஏற்றிருக்கிறார்.

மொமெண்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தின் எக்ஸிகியூடிவ் புரொடக்ஷன் பணிகளை மேற்கொடுள்ளது.

மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலைஒரு மாறுபட்ட தளத்தில்அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம்அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது.

இன்றைய சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வைத்து மக்களை மூன்று பிரிவாக பிரிக்கலாம். ஒன்று, பணக்காரர்கள். இரண்டு மத்திய தர வர்க்கத்தினர். மூன்று, ஏழைகள்.

இவர்களில் பணக்காரர்களுக்கு பணத்தை பயன்படுத்துவதில் பிரச்சனைகள் இருக்கலாம். பணம் திடீரென்று காணாமல் போனால் அவர்கள் கீழே இறங்க முடியாமல் தவித்தாலும் பணத்தை சம்பாதிக்கும் வழியை அவர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். அதில் அவர்களுக்குப் பிரச்சனை இல்லை.

ஏழைகளுக்கு பணம் இல்லை என்கின்ற ஒரே ஒரு பிரச்சனைதான். அந்த ஒரு பிரச்சனையில் இருந்து விடுபடுவதற்காக அவர் போராடினாலும் காலப்போக்கில் அப்படியே வாழ்ந்து அப்படியே இருக்க பழகி விடுவார்கள்.

ஆனால் உண்மையாகவே இந்த சமூகத்தில் மிகுந்த மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது மிடில் கிளாஸ் ஃபேமிலிதான்.

பணக்காரர்களைப் போல் உயரவும் முடியாமல், ஏழைகளாக கீழே வரவும் முடியாமல் நடுவில் தத்தளித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த மிடில் கிளாஸ் சம்பளத்துக்காரர்கள். அவருடைய குடும்பத்து பிரச்சினைகளை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமாக இருந்து அவர்களை அலைக்களிக்க வைக்கிறது.

இப்படி பல பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு சாதாரண எளிய மனிதரின் வாழ்க்கை கதைதான் இந்த மெட்ராஸ் மேட்னி திரைப்படம்.

காளி வெங்கட் ஒரு ஆட்டோ டிரைவர். சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி. அவருடைய மனைவி ஷெல்லி. அவருக்கு இரண்டு பிள்ளைகள் ரோஷினி, விஷால்.

ரோஷினி இப்பொழுது ஐடி வேலையில் பெங்களூரில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார். மகன் விஷால் இப்போதுதான் +2 படித்து முடித்து இருக்கிறான். கல்லூரிக்கு போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான். ஆனால் அவனுக்கும் அவங்க அப்பாவுக்கும் இடையிலான தொடர்பு எல்லா வீடுகளை போலவே ரொம்பவும் இடைவெளியாகவே உள்ளது.

ரோஷினியின் காதலுக்கு அப்பா சம்மதம் தெரிவிக்க மறுக்க.. அந்தக் காதல் இறந்து போனதால் மகளுக்கு அப்பா மீது வருத்தம். அதே சமயம் மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசை அப்பாவுக்கும் இருக்கிறது.

நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைவிட நீயே ஒரு மாப்பிள்ளையை செலக்ட் செய்து சொல். எப்படியாவது திருமணத்தை நடத்தி வைத்து விடுகிறோம்…” என்கிறார் அப்பா. மகள் ரோஷினி இதை ஏற்றுக் கொண்டாலும், அவள் பார்க்கின்ற பல மாப்பிளைகள் அவளுக்குப் பிடிக்காமல் போகிறது. அதனால் அவளது திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்தப் பிரச்சனை ஒரு பக்கம் இருந்தாலும் வீட்டில் மகனார் சுத்தமாக அப்பாவின் பேச்சைக் கேட்காமலே இருக்கிறான். சேர்வார் சேர்க்கை சரியில்லாமல் அவனுடைய நடவடிக்கைகள் அப்பாவை வெறுப்பேத்துவது போலவே இருக்கிறத.. அவனுக்கு எப்படி ஒரு நல்ல வழியை காட்டுவது என்பது தெரியாமல் முழிக்கிறார் அப்பா.

இந்த நேரத்தில் மகன் ஆசையாக வளர்த்து வந்த நாய் உயர் அழுத்த மின்சாரத் தாக்குதலால் இறந்து போகிறது. இதனால் கோபம் அடையும் மகன் அருகிலுள்ள மின் அலுவலகத்திற்கு சென்று அங்கே இருந்த பொறியாளரிடம் கடுமையாக சண்டையிடுகிறான். இது போலீஸ் கேஸ் ஆகிறது. மின்சார அலுவலகத்துக்கு ஓடி வரும் அப்பாவும் ஒரு கட்டத்தில்  பொறியாளரை அடித்துவிட பெரிய அடிதடியே நடந்து விடுகிறது.

இப்படி ஆளுக்கு ஒரு பக்கமாக பிரச்சினைகளை கொடுத்துக் கொண்டே போக காளி வெங்கட் என்ற அந்த தகப்பன் என்ன செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுகிறான் அவருடைய பிரச்சனைகள் முடிந்தனவா என்பதும்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.

படத்தின் துவக்கத்திலேயே இந்த படத்தின் கதையை நரேஷனாக ஒருவர் சொல்ல சொல்ல கதை விரிவதைப் போலவே படமாக்கி இருக்கிறார்கள்.

தற்போது முதியோர் இல்லத்தில் இருந்து வரும் கதாசிரியரான சத்யராஜ் அங்கே இருப்பவர்களிடம் இந்தக் கதையை சொல்கிறார். அந்தக் கதையிலிருந்து விரிவதுதான் இந்தப் படம்.

காளி வெங்கட் ஒரு பொறுப்பான அப்பாவாக, சிறப்பான தந்தையாக இதுவரையில் அவர் நடித்த கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்து குப்பை அள்ளுபவராக இருந்து, அதற்குப் பிறகு வேறொரு ஜாதியை சேர்ந்த மனைவியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அந்த குப்பையள்ளும் தொழிலை விட்டுவிட்டு ஒரு கௌரவமான வேலை வேண்டும் என்பதற்காக ஆட்டோ ஓட்டி இத்தனை ஆண்டு காலம் உழைத்திருக்கிறார்.

அந்த உழைப்புக்கேற்ற பரிசு கிடைக்கவில்லை என்றாலும் ஒரு நிம்மதியும், திருப்தியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் படுகின்ற அவஸ்தைகளை காளி வெங்கட் தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலமாக அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் பிரச்சனைகள் முற்றிப்போய் தாக்கப் பிடிக்க முடியாத நிலையில் டாஸ்மாக் சென்று சரக்கு அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தவர் அங்கே தன் மகள் வந்திருப்பதை பார்த்தவுடன் பேச முடியாமல், வெளியில் போக முயல்வதும், மகளிடம் பாசமாக பேசுவதுமாய் அவருடைய அந்த குடிகார அப்பா நடிப்பு அட்டகாசம் என்று சொல்லலாம்.

இவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஷெல்லி கிஷோர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்த முதன்மையான ஒரு நடிகை. சாதாரண ஒரு குடும்பத் தலைவி கதாபாத்திரத்தில் அப்பா, மகன் பிரச்சனை, அப்பா மகள் பிரச்சனை என்று அனைத்தையும் தாங்கிக் கொண்டு சமாளிக்கும் அம்மா கதாப்பாத்திரத்தை மிக அழகாக செய்து இருக்கிறார்.

நாயகி ரோஷினி தன்னுடைய காதலை அப்பா ஏற்றுக் கொள்ளாததால் வரக் கூடிய மாப்பிள்ளைகளை ஏற்பதா இல்லையா என்ற ஒரு குழப்பத்திலேயே போய்க் கொண்டிருப்பதும், அப்பாவின் ஜாதியை குறை சொல்லிப் பேசும்போது அந்த ஹோட்டலில் இருந்து வெளியேறி பின்னாடியே வரும் மாப்பிள்ளையிடம் பொரிந்து தள்ளுகின்ற காட்சியில் சபாஷ் போட வைத்திருக்கிறார். இவருடைய அழுத்தமான நடிப்பு ஒருவிதத்தில் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய ஒரு ஈர்ப்பை கொடுத்து இருக்கிறது.

மகனாக நடித்த விஷாலும் மிக அழகாக நடித்திருக்கிறான். தன்னுடைய இயல்பான நடிப்போடு ஈபி ஆபீஸில் செய்யும் கலாட்டாவில் கோபத்தோடு பொங்குகின்ற காட்சியில் சபாஷ் போடவும் வைத்திருக்கிறார்.

இதுவரையில் தான் வந்த படங்களில் எல்லாம் அழகான அம்மாவாகவே நடித்திருக்கும் கீதா கைலாசம், இந்தப் படத்தில் ஒரு அட்டகாசமான அரசியல் தலைவியாக நடித்திருக்கிறார்.

அவருடைய மாடுலேஷன், டயலாக் டெலிவரி, அவருடைய நடிப்பு அனைத்துமே முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க இடைவேளைக்கு பின்பு இவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் ரசிகர்கள் திரையிலிருந்து கண்ணை எடுக்கவே இல்லை. அந்த அளவுக்கு ஈர்ப்பாக தன்னை காட்டி இருக்கிறார் கீதா கைலாசம்.

மின் வாரிய பொறியாளராக நடித்திருக்கும் மலையாள நடிகரான சுதீப், ஜாங்கிரி மதுமிதா, ஊறுகாய் அங்கிளான சாம்ஸ் என்று அனைவருமே மிக சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

மிடில் கிளாஸ் ஃபேமிலி வாழ்க்கை என்பதால் ரொம்ப எளிமையான ஒரு குடியிருப்பு பகுதியை மிக அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆனந்த். அதோடு மின் வாரிய அலுவலகத்தில் நடைபெறும் அந்த கலாட்டாவையும் ஒரு உயிர்ப்பான காட்சியாக பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

பாலசாரங்கனின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கும் ரகம் என்றாலும் பின்னணி இசையில் அடித்து ஆடாமல் அடக்கி வாசித்து காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.

இந்த படத்தில் இடைவெளிக்கு முன்பான காட்சிகளில் பல இடங்களில் தொய்வு ஏற்பட்டு கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது. அந்தக் காட்சிகளை எல்லாம் படத் தொகுப்பாளர் கொஞ்சம் சரி செய்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், இடைவேளைக்கு பின்பு அதிரிபுதிரியாக அலற விட்டிருக்கிறார்கள். நிச்சயம் இந்தப் படத்தில் இரண்டாம் பகுதிதான் ஹிட் என்று சொல்லலாம்.

படத்தை எழுதி இயக்கி இருக்கும் இயக்குநர் கார்த்திகேயன், ஒரு மணி மிடில் கிளாஸ் ஃபேமிலியின் பிரச்சனைகளை அழுத்தமாக சொல்லிய நிலையில், இப்போதைய காலகட்டத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான புரிந்து கொள்ளாமை மிகப் பெரிய பிரச்சனையாகி குடும்பத்தில் சிக்கல்களையும், அவர்களிடையே உளவியல் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது என்பதை இந்தப் படத்தின் மூலமாக அழுத்தம் திருத்தமாக சொல்லி இருக்கிறார். இதற்காகவே இந்த இயக்கநருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இருந்தாலும் இந்தப் படத்தை பின்னணி குரலின் உதவியோடு நகர்த்தியிருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை. படம் முடிந்த பிறகும் அந்தப் பின்னணிக் குரலுக்குச் சொந்தக்காரரான எழுத்தாளர் பவா செல்லத்துரை படம் முடிந்த பிறகும் திரையில் தோன்றி படத்துக்கு முடிவுரையையும் பேசுகிறார். இந்தக் கான்செப்ட்டே இல்லாமல் படத்தைக் காட்சிகள் வாயிலாகவே நகர்த்தியிருந்தாலும் படம் இதைவிடவும் சிறப்பாகத்தான் இருந்திருக்கும்.

இந்தப் படத்தை அனைவரும் குடும்பத்தோடு அவசியம் பார்த்தாக வேண்டும். பிள்ளைகளையும் அழைத்துச் சென்றால்தான் பிள்ளைகளுக்கும் அப்பா, அம்மா மீதான ஒரு பொறுப்பும் அவர்கள் செய்கின்ற தியாகத்தின் மீது ஒரு மரியாதையும் அவர்கள் மீது அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் அதிகப்படுத்தும்.

இந்தப் படம் நிச்சயம் தவறவிடக் கூடாத படம். அவசியம் பாருங்கள்!

RATING : 3.5 / 5

Our Score