full screen background image

தக் லைப் – சினிமா விமர்சனம்

தக் லைப் – சினிமா விமர்சனம்

Kamal Haasan Presents A Mani Ratnam Film Thug Life An A.R. Rahman Musical Movie Credits – Banner: Raaj Kamal Films International, Madras Talkies & Red Giant Movies Cast: Kamal Haasan, Silambarasan TR, Trisha, Aishwarya Lekshmi, Ashok Selvan, Abhirami, Joju George, Nasser, Mahesh Manjrekar and Ali Fazal Director of Photography: Ravi K. Chandran Editor: Sreekar Prasad Action: Anbariv Production Designer: Sharmishta Roy Choreography: Kruti Mahesh Costume Designer: Eka Lakhani Mr.Kamal Haasan’s Costume Designer: Amritha Ram Mr.Kamal Haasan’s Special Make up: Akihito Ikeda Hair & Makeup: Ranjith Ambady VFX Supervisor: H. Monesh DI Colorist: Ashirwad Hadkar Chief Re-Recording Mixer: Craig Mann Sound Designer: Anand Krishnamoorthi Stills: ‘Stills’ Anandan Publicity Designer: Gopi Prasannaa Title Animation & Lyric Video: Venky On Air Promos: E. Sangathamizhan PRO: Diamond Babu & Sathish S2 Media

38 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரை உலகின் ஆளுமைகளான கமலஹாசனும் அவரது மருமகன் மணிரத்தினமும் இணைந்து தரும் திரைப்படம் என்பதால் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டது இத்திரைப்படம்.

அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா என்பதை பார்ப்போம்.

ரங்கநாயக சக்திவேல் என்ற கமல்ஹாசன் தில்லியில் 30 வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய அண்ணன் நாசருடன் இணைந்து தாதா வேலையை செய்து வந்திருக்கிறார்.

அப்போது அவருடன் மோதலில் இருந்தவர் சதானந்த் என்கின்ற ஒரு வட இந்தியர். சதானந்த செய்த அன்றைய சூழ்ச்சியில் காவல்துறை திடீரென்று கமலின் குடியிருப்பின் உள்ளே நுழைந்து கமல் அண்ட் கோ-வை சுற்றி வளைத்து துப்பாக்கி சூடு நடத்துகிறது.

இதில் அந்தர் குடியிருப்பில் இருந்த அப்பாவிகள் சிலர் மாண்டு போகிறார்கள். அந்த அப்பாவிகளில் ஒருவர் பேப்பர் போட வந்தவர். அந்த எளிமையான மனிதரின் சிறு குழந்தைகளான சந்திராவும், அமரனும் தனித்தனியே பிரிகிறார்கள்.

அமரனை சக்திவேல் தன்னுடைய பாதுகாப்பில் வைத்து இத்தனை வருடங்களாக வளர்த்து வந்திருக்கிறார். தன்னுடைய மகன் போல என்று சக்திவேலை அடிக்கடி சொல்லி தன்னுடைய வாரிசாகவே அவனை ஆக்கி இருக்கிறார்.

சக்திவேலின் மனைவி ஜீவா என்ற அபிராமி. நைட் கிளப்பில் நடனமாடி கொண்டிருந்த இந்திராணி என்கிற திரிஷாவுடனும் சக்திவேலுக்கு ஒரு கள்ளத் தொடர்பு உண்டு. ஜீவா மூலமாக மங்கை என்ற மகளும் சக்திவேலுக்கு இருக்கிறாள். சக்திவேலின் கூட்டாளிகள் அனைவருமே அவருடைய குடியிருப்பிலேயே அருகருகே வாழ்ந்து வருகிறார்கள்.

கேங்க் லீடராக இருக்கும் சக்திவேலுக்கே அனைத்து பெருமைகளும் சென்று சேர்வதால் அவர் மீது பொறமைப்படுகிறார் அவருடைய அண்ணன் நாசர். இதனால் வளர்ப்பு மகனான அமரனிடம் அவனுடைய அப்பாவை கொலை செய்தது சக்திவேல்தான் என்று பொய்யாக ஒரு வன்மத்தை அவரது மனதில் விதைக்கிறார் நாசர்.

இதன் விளைவாக அவரின் தலைமையில் சக்திவேலை தவிர அனைவரும் ஒன்று சேர… சக்திவேலுக்கு சமாதி கட்டும் வேலையை செய்கிறார்கள். இந்த சதி வேலையில் மாட்டிக் கொள்ளும் சக்திவேல் தன்னுடைய வாழ்வின் இறுதி கட்டத்திற்கு சென்று தெய்வாதீனமாக மீள்கிறார்.

இதன் பின்பு என்ன நடக்கிறது.. அவர் உயிர் பிழைத்து வந்தாரா… தான் குற்றமற்றவன் என்பதை அவரிடம் நிரூபித்தாரா… அமரன் உள்ளிட்ட மற்றவர்களின் கதி என்ன ஆனது… என்பதுதான் இந்த இரண்டே முக்கால் மணி நேர தக் லைப் என்ற குண்டர்கள் சாம்ராஜ்யத்தின் கதை.

‘கலைஞானி’ என்ற பெயருக்கு ஏற்ப படம் முழுவதும் தன்னுடைய நடிப்பினால் வியாபித்திருக்கிறார் கமலஹாசன். படத்தின் துவக்க காட்சியே வித்தியாசமானது. அப்படி ஒரு அழகான காட்சி அமைப்பையும், கேமரா கோணங்களையும் தமிழ் சினிமா இதுவரையில் பார்த்து இருக்காதது.

தன்னுடைய அறிமுக காட்சியில் தனது டிரேட் மார்க்கான நடிப்பை பதிவு செய்திருக்கும் கமல் இறுதி வரையிலும் தன்னுடைய ‘சக்திவேல்’ என்கின்ற அந்தக் கேரக்டருக்கு ஏற்ற நடிப்பை காண்பித்து இருக்கிறார்.

அமரனுக்கு தன்னுடைய தொழிலை சொல்லிக் கொடுக்கும் போதும், தாதாயிசத்தை அமரன் கற்றுக் கொண்டானா என்பதை ஒவ்வொரு முறையும் அவர் கேட்கின்ற பொழுதும் ஒரு தாதாவாகவே கமல் தெரிகிறார்.

இன்னொரு பக்கம் தன்னுடைய மனைவியுடனான அவருடைய காதலும், நேசமும், பாசமும், பரிவும் வெளிப்படும்போது ஜில்லென்றுதான் நமக்கும் இருக்கிறது. அதே சமயம் அவருடைய கேரக்டருக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாமல் த்ரிஷா உடனான அவரது நட்பும், உறவும் தவறானது என்பதால் அந்தக் காட்சிகள் நமக்குப் பெரிதும் அசூயையாகவே படுகிறது.

வயதாகிவிட்டதால் அதிகமாக நடனமாட வைக்காமல், சண்டைக் காட்சிகளில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கமல்ஹாசனின் வேகத்தையும் கொஞ்சம் மட்டுப்படுத்தி காண்பித்து இருக்கிறார்கள். ஆனாலும் ஜோஜூ ஜார்ஜ் உடனான சண்டை காட்சியில் கமலின் வேகம் பளிச்சிடுகிறது. அதேபோல் யூத்தான கமலை காட்டும்பொழுது சூப்பர் என்று சொல்ல வைத்திருக்கிறது..

தன்னுடைய மனைவியின் பரிதாப நிலையை பார்த்து கண் கலங்குகின்ற காட்சியில் நிஜமாகவே ஒரு நல்ல கணவனாக திரும்பி வந்திருக்கும் கமலாகவே நமக்கு காட்டி இருக்கிறார் இயக்குநர்.

ஆனாலும் தன் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றுவதுபோல தன் எதிரிகளை… எதிரிகளாக மாற்றிக் கொண்டவர்களையும் அழித்தொழிப்பதில் அவர் காட்டுகின்ற வேகம் அவர் மீதான அந்த பரிதாபத்தையும், பாசத்தையும் ரசிகர்களிடமிருந்து பிரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

தன்னுடைய அறிமுக காட்சிகளிலேயே ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார் சிலம்பரசன் என்ற சிம்பு. அவருடைய வழக்கமான மேனேரிசங்களை எல்லாம் ஒழித்துக் கட்டிவிட்டு மணிரத்தினத்தின் நடிகனாக மட்டுமே இந்தப் படத்தில் வலம் வந்திருக்கிறார் சிம்பு.

சதாநந்தனின் தங்கை மகனை கொலை செய்கின்ற அந்த காட்சியில் சிம்பு காட்டுகின்ற ஸ்டைலும், நடிப்பும் அசத்தல் என்று சொல்லலாம்.

இடைவேளை காட்சியில் கமல் முன்பாக வந்து நிற்கின்ற அந்த தோரணை அடடா வந்துட்டாண்டா இன்னொரு வேலு நாயக்கன் என்று சபாஷ் போட வைக்கிறது மணிரத்தினத்தின் இயக்கமும், சிம்புவின் அந்த தோற்றமும்.

திரிஷாவுடனான சிம்புவின் அந்த தொடர்பு எல்லை மீறிய தொடர்பாகவும், அத்துமீறிய உறவாகவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காதலாகவும் இருப்பதால் அந்த இடத்திலேயே சிம்புவின் கதாபாத்திரம் செத்துவிட்டது என்று சொல்லலாம். இயக்குநர் மணிரதினம் ஏன் ஒரு நல்ல கதாசிரியராக இதைப் பற்றி யோசிக்கவில்லை என்று தெரியவில்லை.

இவ்வளவு அழகாக ஸ்கிரீன் ப்ரெசென்ட் காட்டக் கூடிய நடிகரான சிம்பு தன்னுடைய தொழில் நேர்த்தியையும், தொழில் கடமையையும் மாற்றிக் கொண்டால், நிச்சயமாக தமிழ் சினிமாவில் மிகப் பெரிய பெயர் எடுக்கலாம். இப்பொழுது ஒன்று மோசம் போகவில்லை. இனி வாழ்நாள் முழுவதும் நடிப்பு மட்டுமே என்பதை அவர் கொள்கையாகக் கொண்டால் நிச்சயமாக அவர் நல்லதொரு வலம் வரலாம்.

ஜீவா என்ற அபிராமி… விருமாண்டியில் பார்த்த அபிராமியையும் தாண்டி ஒரு பக்குவப்பட்ட ஒரு மனைவியாக திரையில் தோன்றியிருக்கிறார்.

சிறையில் இருந்து வெளியில் வந்த கணவர் நேராக கள்ளக் காதலியின் வீட்டில் மூன்று நாட்கள் தங்கி கொஞ்சி குலாவி கூத்தடித்துவிட்டு வந்திருப்பதை அறிந்து, தாலியை கழற்றி வைத்துவிட்டு “நீங்க யாரு… எதுக்கு இங்க வந்தீங்க?” என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பது சிறப்பு.

ஆனால் அடுத்த ஒரு 15 செகண்டிலேயே கணவரின் மாய்மால வார்த்தைகளாலும், கெஞ்சல்களினாலும், கொஞ்சலினாலும் அப்படியே பதிபக்தி நிறைந்த மனைவியாக மாறுவதைப் பார்க்கும்போது நமக்கே ச்சே.. என்று ஆகிவிட்டது.

கடைசியில் அந்த படகு ஓரம் அமைதியாக அமர்ந்து தனக்குத்தானே முணங்கி கொண்டு.. எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல்… யாரைப் பற்றியும் நினைவில் இல்லாமல்… வேறு உலகத்தில் வாழும் அந்த ஜீவா என்ற பெண்ணைப் பார்க்கின்ற பொழுது பரிதாபமாக இருந்தது. அந்த இடத்தில் அவருடைய முகம் காட்டும் நடிப்பு சிம்ப்ளி சூப்பர் என்று சொல்லலாம்.

தமிழ் திரை உலகின் என்றும் அழகியான திரிஷா இந்தக் கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. முதலில் வயதானவராக இருந்தாலும் ஒரு தாதாவுக்கு கள்ளக் காதலியாக இருப்பதுகூட தனக்கு பாதுகாப்பானதுதான் என்பதால் ஒத்துக் கொண்டார் என்று சொல்லலாம்.

ஆனால், அதன் பிறகு அதே தாதாவின் மகன் வளர்ப்பு மகனுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை நம்மால் சகிக்க முடியவில்லை இந்த இடத்திலேயே இந்திராணி என்ற கதாபாத்திரம் செத்துவிட்டது. அவருடைய அழகிய முகமும், கமலுடன் செய்யும் முத்த சாகசமும், நெருக்கமும் அந்த நேரத்தில் கிளுகிளுப்பை உண்டாக்கினாலும் அந்தக் கதாபாத்திரம் நமக்கு பிடிக்காமல் போனதால் எல்லாமே நமக்கு வெத்துவேட்டாகி போய்விட்டது.

தன் அண்ணனாக இருந்தாலும் அனைத்து பெருமைகளும், புகழும் தன் தம்பிக்கு போய் சேர்வதை கண்டு பொறாமை கொள்ளும் நாசரின் அந்த நடிப்பு, நாயகனைவிட பல மடங்கு அதிகம் என்று சொல்லலாம்.

தெலுங்குக்காக தணிகலபரணியும், மலையாளத்திற்காக பாபுராஜூம் சில இடங்களில் நடித்திருக்கிறார்கள். திரிஷாவின் உடனேயே இருக்கும் வடிவுக்கரசி வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார். திரிஷா, கமல் ஊடல், கூடல் பற்றி வையாபுரியிடம் பேசும் அந்தக் காட்சியில் நகைக்க வைத்திருக்கிறார் வடிவு.

ஜோஜூ ஜார்ஜின் அலப்பறையான ஆக்சனும், கமலிடம் மோதும்போது காட்டும் வெறியும் சேட்டன்களின் தேசத்திற்குப் போதுமானதுதான்.! ‘பக்ஸ்’ என்ற பகவதி பெருமாளும் கடைசிவரையிலும் தலையைக் காட்டியிருக்கிறார்.

வட இந்திய தாதா சதானந்தனாக நடித்திருக்கும் மகேஷ் மஞ்ச்ரேகர் அவருடைய நாடக அனுபவம், பல வருட சினிமா அனுபவம் எல்லவற்றையும் சேர்ந்து, தனது நடிப்பில் காண்பித்திருக்கிறார்.

மகளாக நடித்திருக்கும் சஞ்சனாவும் கடைசியாக படத்தில் தலையை நீட்டும் ஐஸ்வர்யா லட்சுமியும் ஒருவகையில் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். வித்தியாசமான கதாபாத்திரங்களை நம் கண் முன்னே கொண்டு வந்திருப்பதால் தாதா கதையில் இருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவதற்கு உதவி இருக்கிறார்கள்.

அதிலும் ஐஸ்வர்யா லட்சுமி சிறு வயதிலேயே தன்னை விட்டுப் பிரிந்த தன்னுடைய அண்ணனான அமரனைப் பார்ப்பதற்காக ஓடி வருகின்ற காட்சியிலும், மாடியில் இருக்கும் அண்ணனை கீழே இருந்து பார்த்து அண்ணா என்று அழைக்கின்ற பொழுதிலும் ஒரு அற்புதமான நடிப்பை காண்பித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் பொருத்தமே இல்லாத ஒரு கதாபாத்திரம் என்றால் அது போலீஸ் அசிஸ்டெண்ட் கமிஷனராக நடித்திருக்கும் அசோக் செல்வன்தான். ஒன்று, போலீஸ் கெட்டப்பிலேயே வந்து பேசி இருக்கலாம். நடித்திருக்கலாம் ஆனால் அனைத்து காட்சிகளிலும் மப்டியிலேயே வந்து மிரட்டுவது போல நடித்து… சாக்லேட் பேபி திடீரென்று கடமை தவறாத காவலராக வந்து நிற்பதால்… நம்மால் எதுவும் சொல்ல முடியவில்லை.

மற்ற ஏனைய நட்சத்திரங்களும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏனெனில், இந்தப் படத்தின் இயக்குநர் இயக்குநர்களில் இயக்குநர், சினிமா ஞானி மணிரத்னம் என்பதால்..!

இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்பதையெல்லாம் ஒரு பக்கம் தள்ளி வைத்து விட்டால், தொழில் நுட்பத்தில் நிச்சயம் சிறந்து விளங்குகிறது என்று அடித்து சொல்லலாம்.

ரவி கே.சந்திரனின் ஒளிப்பதிவு அட்டகாசம்.. ஆசம் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் கட்சியிலிருந்து கடைசியாக அமரன் சரிந்து விழும் வரையிலும் படத்தை வெகுவாக பார்க்க வைத்திருப்பது ரவி கே. சந்திரனின் அந்த ஒளிப்பதிவுதான்.

முதல் அரை மணி நேரம் அந்த பிளாக் அண்ட் ஒயிட் காட்சிகளைகூட ரம்மியமாக, அழகாக படம் பிடித்து இருக்கிறார்கள். அதேபோல் சண்டை காட்சிகளை இதைவிடவும் துல்லியமாக, வேகமாக படம் பிடிக்க முடியுமா என்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு கேமரா டிபார்ட்மெண்ட் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறது.

புது தில்லி, கோவா, நேபாளம், திருச்செந்தூர், காயல்பட்டிணம் என்ற பல ஊர்களையும் அழகுபட பதிவாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும், திரிஷாவின் அழகை காட்டுவதிலும் மற்றைய நட்சத்திரங்களை கேமராவில் அழகாக பதிவு செய்திருப்பதிலும் வித்தகர் என்கின்ற தன் பெயரை மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன். ஒளிப்பதிவாளருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.

பெரிய பாய் ரகுமான் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு முன்பே ஹிட் என்றாலும் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த ‘தீ’ பாடிய ‘முத்த மழை’ பாடல் படத்திலேயே இல்லை என்பது மிகப் பெரிய சோகம். ஏன் அதை கட் செய்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் ‘சிங்குச்சா’ பாடல் நம்மையும் கொஞ்சம் உற்சாகத்தோடு படத்தை பார்க்கவும், தாளம் போடவும் வைத்தது. ‘அஞ்சு வண்ணப் பூவே’ என்ற காதல் பாடலும் மிக அழகாக படம் பார்க்கப்பட்டிருந்தது.

மிக முக்கியமான காட்சிகளிலெல்லாம் பின்னணி இசை அசத்தல் என்றே சொல்ல வேண்டும். அதிலும் ஜோஜூ ஜார்ஜூடனான சண்டைக் காட்சியின்போது அவரது பின்னால் கமல் வந்து நிற்கின்ற பொழுது எழுகின்ற பின்னணி இசை அசத்தல். அதேபோல் சிம்புவின் அறிமுக கட்சியிலும் சூப்பரான ஒரு பின்னணி இசையை அமைத்திருக்கிறார் ரகுமான்.

அன்பறிவு சகோதரர்கள் சண்டை காட்சிகள் அத்தனையையும் ஏ-1 ரகமாகப் படமாக்கியுள்ளனர். அதிகமான ரத்தத்தையும் சிந்த வைத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொடூரமான முறையிலும் கொலைகளை காட்டி இருக்கிறார்கள். இதையெல்லாம் நிச்சயம் தவிர்த்திருக்கலாம். U/A சர்டிபிகேட் வாங்கி இருந்தாலும் இந்த படத்திற்குக் கண்டிப்பாக A சர்டிபிகேட்டுதான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் U/A-வை எப்படி கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை.

படத்தின் படத் தொகுப்பாளர் மிகுந்த பிரயத்தனப்பட்டுத்தான் இந்தப் படத்தை எடிட்டிங் செய்திருப்பார். நிச்சயம் மணிரத்னம் மிக அதிகமான காட்சிகளைத்தான் படமாக்கிக் கொடுத்திருப்பார். வந்தவற்றை அழகாகத் தொகுத்து கொடுத்து காட்சிகளின் தொடர்புகளை கட்  ஆகிவிடாமல் தடுத்து ஓரளவுக்கு படத்தை ரசிக்கும்படியாகவே கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர்.

படத்தின் மிகப் பெரிய பிரச்சனையே படத்தின் கதைதான். ஏற்கனவே விக்ரம் படம் இதே பாணியில் கேங்ஸ்டர் படமாகவும், துப்பாக்கி சண்டையாகவும் .அடிதடி வெட்டு குத்தாகவும் வந்து வெற்றி பெற்றது. அடுத்த செக்கச் சிவந்த வானமும் இதேபோல் துப்பாக்கி சண்டையுடன் வந்துதான் வெற்றி பெற்றது. அதனால், இந்த படத்தைக் துப்பாக்கி சண்டையாகவே கொண்டு போய் விடுவோம். இன்றைய இளசுகள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்று நினைத்து இந்தப் படத்தையும் அது போலவே எடுத்திருக்கிறார் மணிரத்தினம்.

கதை இப்படி இருந்தாலும் திரைக்கதை ஓட்டம் மிக வேகமாக நகர்ந்தாலும், நம் மனதில் அந்தக் கதாபாத்திரங்கள் எதுவும் நேர்முறையாக அமரவில்லை என்பதுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய சோகம்.

நாயகன் திரைப்படத்தில் வேலு நாயக்கர் எத்தனையோ பேருக்கு உதவி செய்கிறார். அந்த உதவியை வாங்கியவர்கள் அவரை பாராட்டுகிறார்கள். வாழ்த்துகிறார்கள். அதேபோல் படம் பார்த்தவர்களும் வாழ்த்தினார்கள்.

ஆனால், இங்கே அந்த சக்திவேல் செய்வது அனைத்தும் கொலைகள். கொலைகள். கொலைகள். இந்தக் கொலைகளை நியாயப்படுத்திக் கொண்டே இருப்பதால் ஒரு கொலைகாரன் மீது நமக்கு என்ன ஒரு மரியாதையும், பாவமும், பச்சாபாதமும் ஏற்படும்.

இதனால்தான் சக்திவேல் தன்னுடைய மனைவி ஜீவாவின் நிலையை நினைத்து அழும்போது நமக்குள் எந்த ஒரு ஃபீலிங்கும் ஏற்படவில்லை. இது இயக்குநர் மணிரத்தினம் செய்த தவறுதான்.

அதேபோல் மிகப் பெரிய நாயக பிம்பம் கொண்ட சக்திவேல் என்ற அந்தக் கதாபாத்திரம் கள்ளக் காதலியை வைத்துக் கொண்டு, சரசம் பாடிக் கொண்டு, அந்த கள்ளக் காதலையும் நியாயப்படுத்துவது போல “பிபி, சுகர் இருக்குற மாதிரி எனக்கு இப்படி ஒரு வியாதி” என்று சொல்வதை நிச்சயமாக படத்தை பார்க்கும் குடும்பத்தினர் அனைவருமே ஏற்கமாட்டார்கள்.

இப்படி ஒரு கதாபாத்திர ஸ்கெட்ச் கொண்ட ஒரு கேரக்டர் இருந்தாலென்ன… செத்தால்தான் என்ன என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். இந்தக் காரணத்தினால் ரசிகர்களால் இந்தப் படத்தில் கமலஹாசன் என்ற அந்த மாபெரும் நடிகனை மனதில் ஏற்க முடியவில்லை என்பது வருத்தமான விஷயம்.

இதேபோல் அப்பாவின் கள்ளக் காதலியாக… இன்னொரு பக்கம் தனக்கு ஒரு வகையில் சிற்றன்னையாக இருக்கும் ஒரு பெண்ணை தன்னுடைய காதலியாக்கிக் கொள்ளும் சிம்புவின் நடவடிக்கையும் எந்த விதத்திலும் ஏற்கக் கூடியதல்ல. நிச்சயமாக இதை கேவலமான ஒரு செயல் என்றுதான் படம் பார்த்த அத்தனை பேருமே நினைக்கிறார்கள். அதனாலேயே சிம்பு கேரக்டர் மீதும், த்ரிஷா கேரக்டரின் மீதும் எந்த ஒரு ஈர்ப்பும் ரசிகர்களுக்கு ஏற்படாமல் போய்விட்டது. இதற்கு இயக்குநர் மணிரத்னம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

கமல்-அபிராமி, கமல்-திரிஷா சரசமாடுகின்ற அந்தக் காட்சிகளை பார்க்கும் பொழுது ஒரு மாமனாரை வைத்து ஒரு மருமகன், இப்படி எல்லாம் படம் இயக்கி இருக்கிறாரே.. இப்படி ஒரு மாமனாரும், மருமகனும் உலகத்தில் எங்காவது இருப்பார்களா..? இதில் கொடுத்து வைத்தவர் கமலஹாசனா? அல்லது மணிரத்தினமா என்கின்ற ஒரு பட்டிமன்றமும் சாதாரண ரசிகர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

படத்தின் திரைக்கதையை நகர்த்தும் வசனங்கள் பலவும் சுற்றி வளைத்து பேசுவது போலவும், இலக்கியத்தனமாகவும், கமலஹாசன் அவ்வப்போது பேசுகின்ற மேடை பேச்சுகளை போலவும் அமைந்திருப்பது படத்துக்கு மிகப் பெரிய டேமேஜ் என்றுதான் சொல்ல வேண்டும்.

கமலஹாசனின் தீவிர ரசிகர்களுக்கும், அவரது எழுத்தை வாசிப்பவர்களுக்கும் வேண்டுமானால் இந்த வசனங்கள் புரிந்து இருக்கலாம். ஆனால் பி அண்ட் சி தியேட்டர்களில் முதல் வரிசையில் அமர்ந்து படம் பார்க்கும் சாதாரண எளிமையான ரசிகனுக்கு இந்த வசனங்கள் புரியாதது இந்தப் படம் பற்றிய எதிர்மறை பேச்சுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

எப்போதும் தன்னுடைய வசன ஒலிப்பதிவை மிக சன்னமான ஒலியிலேயே வைத்து கொடுக்கும் மணிரத்னம் இந்தப் படத்தில் மட்டும் கொஞ்சம் சவுண்டை கூட்டித்தான் கொடுத்திருக்கிறார் ஆனால் வசனங்கள் புரிவது போல மிக எளிதாக இல்லை என்பதால் இந்தப் பக்கமும் அடி விழுந்திருக்கிறது.

மொத்தமாக இரண்டு முக்கால் மணி நேரத்தை கடைசிவரைக்கும் பார்க்க வைத்திருக்கும் திரைக்கதை ஒன்றுதான் இந்த படத்தின் ஒரு பிளஸ் பாயிண்ட். மற்றவை எல்லாம் உணர்வு ரீதியாகவும், காட்சி ரீதியாகவும் ரசிகர்களுக்கு எந்த ஒரு விளைவையும் உண்டு பண்ணவில்லை என்பதுதான் உண்மை.

‘தக் லைப்’ என்ற இந்தப் படத்தின் பெயர், இந்தப் படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கும் பொருந்திப் போனது சோகத்திலும் சோகம்..!

RATING : 3.5 / 5

Our Score