ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமான முதல் படம். ஆனால் மூன்றாவது படமாக வெளியாகியிருக்கிறது.
‘4th Period Mystery’ என்கிற கொரியன் திரைப்படத்தின் காப்பிதான் இந்தப் படம். முறைப்படி அனுமதி பெற்று படத்தை உருவாக்கினார்களா..? என்பது தெரியாததால் ‘காப்பி’ என்கிற வார்த்தை இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் படிப்பில் கில்லி. அதே நேரம் உடன் படிக்கும் மாணவியான ஸ்ரீதிவ்யாவை ஒன் சைடாக லவ்விக் கொண்டும் இருக்கிறார். இந்தப் பள்ளியின் சார்பாக மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டிகளுக்குச் சென்று ஜெயித்து வருபவர் என்பதால் பள்ளியில் இவருக்கு நல்ல பெயருண்டு.
ஒரு படிப்பாளி இருந்தால் இன்னொரு கெடுப்பாளியும் வகுப்பில் இருப்பாரே..? இருக்கிறார். ஷாரிக் ஹாசன். குணத்தில் பிரகாஷுக்கு நேரெதிர். இவருடைய அப்பா புகழ் பெற்ற சூப்பர் ஸ்டாரான நடிகர். அதனால் இவர் மீது பள்ளி நிர்வாகத்திற்கும், பிரின்ஸிபாலுக்கும் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு.
பிரகாஷுக்கும், ஷாரிக்கிற்கும் இடையில் மோதல் பிறக்கிறது. பிரகாஷின் நெருங்கிய நண்பனான ஷாவை பிளாக் மெயில் செய்து பிரகாஷ் என்ன செய்யப் போகிறார் என்பதை முன்பே தெரிந்து கொண்டு அதன் மூலமாக பிரகாஷை நோஸ் கட் செய்வதே தொழிலாக வைத்திருக்கிறான் ஷாரிக்.
இந்த நேரத்தில் அதே பள்ளியில் ஆசிரியர்களாக இருக்கும் சுஜா வாருணியும், திருமுருகனும் காதலிக்கிறார்கள். இவர்கள் தனிமையில் உல்லாசமாக இருந்த்தை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து வைத்துக் கொள்ளும் ஷாரிக், அதை வைத்துக் கொண்டு இருவரையும் பிளாக் மெயில் செய்கிறான்.
மேலும் தன்னுடன் படிக்கும் சக மாணவிகளையே மோசம் செய்யும் அளவுக்குப் போகிறான். உடன் படித்த ஒரு மாணவியின் தங்கையான குட்டிப் பெண்ணை நீச்சல் குளத்தில் தள்ளி சாகடிக்கும் அளவுக்கு சாடிஸ்ட்டாகவும் இருக்கிறான். இப்படி பள்ளியில் இவனுக்கு எதிரிகள் ஏராளம்.. ஏராளம்..
திடீரென்று ஒரு நாள் தன் வகுப்பறையில் பென்சிலால் குத்தப்பட்டு செத்துக் கிடக்கிறான் ஷாரிக். அந்த நேரத்தில் உள்ளே வரும் பிரகாஷ் அவனைக் காப்பாற்ற முயல.. இவன்தான் கொலையாளியோ என்று அனைவரையும் நினைக்க வைக்கிறது அந்தச் சூழல்.
இவரைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறார் ஸ்ரீதிவ்யா. இருவரும் இணைந்து துப்பறிகிறார்கள். உண்மைக் குற்றவாளி யார் என்பதை கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதுதான் இந்த திரில்லர் டைப் கதையின் முடிவு.
கொரியப் படத்தின் காட்சிகளை சீன் பை சீன் அப்படியே எடுத்திருக்கிறார்கள். ஆனாலும் பரவாயில்லை. அந்த திரில்லிங்.. சேஸிங்.. படபடப்பு.. எல்லாவற்றையும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். இதனாலேயே படம் தப்பித்திருக்கிறது..!
ஜி.வி.பிரகாஷுக்கு முதல் படம் என்பதோடு அவருடைய தோற்றமே பிளஸ் டூ பையனுக்கானது என்பதால் தேறியிருக்கிறார். எந்தக் காட்சியிலும் சோடை போகவில்லை. இயக்குநரின் அருமையான இயக்கத்தினால் நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இதேபோல் ஸ்ரீதிவ்யா. படம் முழுவதிலும் வியாபித்திருக்கிறார். இவர் வரும் காட்சிகளில் கவனம் முழுக்க தன் பக்கமே ஈர்த்திருக்கிறார். மாணவி உடையிலும் ஒரு கவர்ச்சியை ஈட்டியிருக்கிறார். நடிப்பும் சரளமாகவே வந்திருக்கிறது.
வில்லனாக அறிமுகமாகியிருக்கும் நடிகர் ரியாஸ்கான்-நடிகை உமாரியாஸ் தம்பதியரின் மகனான ஷாரிக் ஹாசனும் நன்றாகவே நடித்திருக்கிறார். வில்லத்தனம் முகத்தில் அப்படியே ஒட்டிக் கொண்டுள்ளது. சில காட்சிகளில் ரசிகர்களுக்கே கோபம் வருவதை போல இவரது ஆக்சன் காட்டுகிறது. வெல்கம் பிரதர்..
ஒரேயொரு காட்சியில் வந்தாலும் அந்தக் கெத்து குறையாமல் அசத்தியிருக்கிறார் நடிப்பு ராட்சஸியான ஊர்வசி. பள்ளியை சோதனையிட வந்திருக்கும் உயர் கல்வி அதிகாரியான ஊர்வசி அந்தப் பள்ளியில் இருக்கும் காட்சிகள் முழுவதிலும் திரைக்கதை சூப்பர். மிகத் திறமையாக நுணுக்கமாக கவனித்து அனைத்து கதாபாத்திரங்களையும் இதில் கோர்த்திருக்கிறார் இயக்குநர். கொரியப் படத்திலிருந்து இந்தக் காட்சிதான் முற்றிலும் அன்னியப்பட்டது என்றே சொல்ல்லாம்.
டி.பி.கஜேந்திரனும், விடிவி கணேஷும் இருந்தும் படத்தில் சிரிப்பலை இல்லாமல் அங்கேயும் பள்ளிக் கதைதான் ஓடுகிறது. தனியார் பள்ளிகள் எதை போதிக்கின்றன..? யாருக்காக நடத்தப்படுகின்றன.. எப்படி நடத்தப்படுகின்றன..? பீஸ் கட்டாமல் தவிக்கும் பெற்றோர்களை அவைகள் எவ்வாறு நடத்துகின்றன என்பதையெல்லாம் அவ்வப்போது வெளிப்படையாக்கி ஒரு விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார் இயக்குநர்.
பணம் கட்டி படிக்க வைத்தால் மட்டும் போதாது.. பிள்ளைகள் பள்ளியில் என்ன செய்கிறார்கள்..? ஏது செய்கிறார்கள்..? அவர்களுடைய நடத்தை என்ன என்பதையெல்லாம் தினமும் கவனிக்க வேண்டும் என்கிறார் இயக்குநர். நல்ல விஷயம்தான்.. இப்படியொரு நல்லதை சொல்வதற்குத்தான் ஒரு கொலையுடன் கூடிய கதையாக தேர்வு செய்திருக்கிறார் போலும்.
ஆனாலும் பிள்ளைகள் பார்க்க வேண்டிய இந்தப் படத்தில் இருக்கக் கூடாத காட்சிகளையும் வைத்திருப்பதால் படம் ‘யு / ஏ’ சர்டிபிகேட் வாங்கியிருக்கிறது. இது தவிர்க்க முடியாத்து. திருமுருகன் – சுஜா வாருணி விவகாரம், குளத்தில் சிறுமியை சாகடிப்பது போன்ற காட்சிகளெல்லாம் மாணவர்கள் தியேட்டரில்கூட பார்க்க்க் கூடாத விஷயமாச்சே..? இயக்குநர் வேறு மாதிரி யோசித்திருக்கலாம்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்தான். ஆனால் தியேட்டரைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்துபோனதே..? பின்னணி இசையை ஊர்வசியின் ரவுண்ட்ஸ் காட்சியில் பெரிதும் ரசிக்க முடிந்தது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப் பெரிய பலம். ஒளிப்பதிவு என்ற விஷயம் இருப்பதே தெரியாத அளவுக்கு கச்சிதமாக எடுத்திருக்கிறார்.
படத்தின் எடிட்டரான ஆண்டனியும் பாராட்டுக்குரியவர்.. திரில்லர் டைப் கதை என்பதால் அடுத்தடுத்த காட்சிகளின் இணைப்பை தெரியாத அளவுக்கு நறுக்கியாக வேண்டும் என்பதையும் மனதில் வைத்துதான் கச்சிதமாக தொகுத்தளித்துள்ளார். குறிப்பாக ஊர்வசி ரவுண்ட்ஸ் வரும் காட்சியில் கத்தரிக்கோலை கனகச்சிதமாக பயன்படுத்தியிருக்கிறார் ஆண்டனி. பாராட்டுக்கள் ஸார்..
முடிவு எதிர்பாராதது என்றாலும் இந்த எதிர்பாராத முடிவு எதிர்பார்த்ததுதான். இதுதானே சினிமா. இருந்தாலும், கல்வியை தனியார் பள்ளிகள் சேவை மனப்பான்மையுடன்தான் சொல்லித் தர வேண்டும். விற்பனை செய்யக் கூடாது என்பதை அபிஷேக்கின் கேரக்டர் மூலமாக நமக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இந்த ஒரு நல்ல விஷயத்துக்காகவே இந்தப் படம் பாராட்டுக்குரியது. சுடப்பட்ட கதையாக இருந்தாலும் அதை முழுமையாக தந்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மணி நாகராஜ். வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
‘பென்சில்’ – கூர்மையாகத்தான் இருக்கிறது.









