மீண்டும் ஒரு பேய் படம். ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக பேய்களை விரட்டியடிக்கும் கதையம்சம் கொண்ட படமாம். ‘பேய்கள் ஜாக்கிரதை’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
ஸ்ரீசாய் சர்வேஷ் எண்டர்டெயின்மென்ட் சார்பில் ராகவன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இவரது உடன் பிறந்த தம்பியான ஜீவரத்தினம்தான் ஹீரோ. இவருக்கு ஈஷான்யா ஜோடியாக நடிக்கிறார்.
மேலும் தெலுங்கு நடிகர் நரேஷ், தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ஜான் விஜய், ஆடுகளம் ஜெயபாலன், தருண் குமார், பிளாக் பாண்டி போன்றோரும் நடித்திருக்கின்றனர்.
ஒளிப்பதிவு – மல்லிகார்ஜூன், படத்தொகுப்பு – சுரேஷ் அர்ஷ், கலை – வி.ராஜா, இசை – மரிய ஜெரால்டு, பாடல்கள் – கபிலன் வைரமுத்து, விவேகா, நடனம் – அசோக்ராஜா, சண்டை – டேஞ்சர் மணி, மக்கள் தொடர்பு – நிகில், தயாரிப்பு – ஜி.ராகவன், இயக்குநர் -கண்மணி.
இயக்குநர் கண்மணிக்கு மிகப் பெரிய பேக்கிரவுண்ட் இருக்கிறது. இயக்குனர் சரணின் இயக்கத்தில் வெளிவந்த ‘பார்த்தேன் ரசித்தேன்’, ‘ஜெமினி’, ‘ஜே ஜே’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய்வர் இவர். தமிழில் ‘ஆஹா எத்தனை அழகு’, ‘ஓடிப் போலாமா’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். கூடுதலாக ‘நா உப்பிரி’, ‘கால் செண்டர்’ ‘சீனோடு’, சமீபத்தில் வந்து வெற்றி பெற்ற ‘பீருவா’ ஆகிய தெலுங்கு படங்களையும் இயக்கிய அனுபவமும் கொண்டவர். இவர் மீண்டும் தமிழில் இயக்கும் படம்தான் இந்த ‘பேய்கள் ஜாக்கிரதை.’
தன்னை ஒரு பேய் முப்பது வருடமாக கொலை செய்ய முயல்வதாகவும் அந்தப் பேயிடம் இருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு இருப்பதாகவும் அந்த பேயினால் எப்போது வேண்டுமானாலும் தனக்கு ஆபத்து வரலாம் என்றும் நம்பும் கேரக்டர் தம்பி ராமையா. பேயே இல்லை என்ற கருத்து உடைய இளைஞன்தான் ஹீரோ. இந்த இரண்டு பேரும் சந்தித்து கருத்து மோதல் நடத்திக் கொள்ளும் சூழ்நிலையில் ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவம் காரணமாக பேயே இல்லை என்கிற முடிவுக்கு தம்பி ராமையாவும் பேய் நிஜமாகவே இருக்கிறது என்ற முடிவுக்கு ஹீரோவும் வருகிறார்கள். இருவரில் யார் சொல்வது உண்மை..? பொய்..? என்பதுதான் திரைக்கதையாம்.
”ஏராளமான பேய்ப் படங்கள் இப்போது வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தில் எல்லாவற்றையும்விட என்ன ஸ்பெஷல்..?’ என்று இயக்குநரிடம் கேட்டதற்கு, ”தயாரிப்பாளரிடம் கதையை சொன்னபோது தயாரிப்பாளர் ராகவனும் இப்படிதான் கேட்டார். ஆனால் நான் கதை சொல்லி முடித்த உடன் ‘இந்தப் படத்தைதான் கண்டிப்பாக தயாரிக்கனும்’னு சொன்னார்.. அந்த அளவுக்கு அவரையே ஈர்த்துவிட்டது. படத்தைப் பார்த்தீர்களேயானால் நிச்சயம் அந்த வித்தியாசம் உங்களுக்கே தெரியும்..” என்றார் இயக்குநர் கண்மணி.
பல குறும் படங்களுக்கு இசை அமைத்த அனுபவம் வாய்ந்த மரிய ஜெரால்டு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். படத்தில் வரும் மூன்று பாடல்களில் ஒரு பாடல் மிக விசேஷமானது. கவிஞர் விவேகா எழுதிய அந்தப் பாடலை தம்பி ராமைய்யாவும் நான் கடவுள் ராஜேந்திரனும் பாடி இருக்கிறார்கள் என்பதுதான் அந்த விசேஷமான செய்தி.
“ஒபாமாவை ஒதுங்கச் சொல்லு; அப்பாயின்ட்மென்ட் இல்ல.. அப்பாலிக்கா வரச் சொல்லு..
பில்கேட்சை பின்னால நிக்கச் சொல்லு; பிசியா இருக்கோம்.. அப்பாலிக்கா பாக்கச் சொல்லு.. “
– என்ற இந்தப் பாடல்தான் படத்தின் ஹைலைட்டாம்..
“பாடணும் என்று சொல்லும்போது பயந்து கொண்டேதான் வந்தார் ராஜேந்திரன் . ஆனால் அவர் குரலுக்கும் கேரக்டருக்கும் பொருத்தமான பாடல் அது. ரொம்ப நல்லா வந்திருக்கு..” என்கிறார் இசையமைப்பாளர் மரிய ஜெரால்டு.
இந்தப் பாடல் காட்சியில் ராஜேந்திரன் ரஜினி கெட்டப்பிலும், தம்பி ராமையா கமல் கெட்டப்பிலும் நடித்திருக்கிறார்களாம்..!