full screen background image

“முதல்வர் ஜெயலலிதாவை ஓட்டு போட அழைப்பேன்..” – நடிகர் விஷால் ‘தில்’லான அறிவிப்பு..!

“முதல்வர் ஜெயலலிதாவை ஓட்டு போட அழைப்பேன்..” – நடிகர் விஷால் ‘தில்’லான அறிவிப்பு..!

நேற்று காலை சேலத்தில் நாடக நடிகர்களை சந்த்து நடிகர் விஷால் வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதில் இருந்து சில பகுதிகள் இங்கே :

“நாங்கள் ஓட்டுக் கேட்பதற்காக மட்டும் இங்கே வரவில்லை, உங்களைச் சந்தித்து நடிகர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிவிப்பதற்காகத்தான் வந்திருக்கிறோம். 

சேலத்துக்குள் நீங்கள் செல்லவே முடியாது என்றெல்லாம்   நாங்கள் இங்கே வருவதற்குள் அவ்வளவு மிரட்டல்கள் வருகின்றன. எங்களுக்கு ஒரு விசயம் புரியவே இல்லை. உங்களைச் சந்திப்பது அவ்வளவு பெரிய குற்றமா..? இல்லை உங்களை சந்திக்கவே கூடாதா..? இல்லை உங்களை இவ்வளவு நாட்களாக யாரும் சந்திக்காமல் புதிதாக நடக்கிறதா..? ஒரே குழப்பமாக இருக்கிறது.

உங்களுக்கும், எங்களுக்கும் ஒரே வித்தியாசம்தான் இருக்கிறது அது சம்பளம் என்று கருணாஸ் பேசும்போது சொன்னார். அதே போல ஒரு ஒற்றுமை இருக்கிறது.. அது என்ன தெரியுமா..? தைரியம். 

நானும் இப்படித்தான்.. முதன்முதலாக நடிகர் சங்கத்துல ஏதோ பிரச்சினை ஒளிஞ்சிருக்கு அதை கேட்க போறேன்னு சொன்னப்போ உனக்கு எதுக்குடா அந்த வேலை உன் வேலைய பாருன்னு எங்க அம்மா சொன்னாங்க. ஆனால் இப்போ அவுங்களே நீ தைரியமா போய் தட்டி கேளு,  நாங்க இருக்கோம்னு ஊக்கப்படுத்துறாங்க. அதே போலத்தான் நீங்களும். நான் முதன்முதலா கிளம்புனது போல என்னதான் சொல்றாங்கனு கேட்போம்னு நீங்க வந்திருக்கீங்க.  அவுங்க நடத்துற  கூட்டத்துக்கு போனா உங்களை சங்கத்துல இருந்தே நீக்கிடுவோம்னு எல்லாம் மிரட்டியும் நீங்க வந்துருக்கீங்க.. அந்த தைரியம்தான் உங்களுக்கும் எங்களுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை.

சம்பளம் மட்டும்தான் வேறுபாடே ஒழிய சாயம் பூசின கலைஞர்கள்தான் நாம், நாடகத்திலிருந்துதான் சினிமாவுக்கு பலபேர் வந்திருக்கிறார்கள்.  அப்படிப்பட்ட நாடகக் கலைஞர்களுக்கும்  திரைப்பட நடிகர்களுக்கும் இடைவெளியை ஏற்படுத்தியது யார்..?  எங்களை மிரட்டுகிறார்கள்.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.. நாங்கள் எதற்கும் அஞ்சப்போவது இல்லை. தேர்தலில் நிற்போம் ஒரு வாக்கு வித்தியாசத்தில்  தோற்றால் கூட மீண்டும் போய் கேட்போம்.

முதலில் அலுவலகத்தில் முறையாக கேட்டேன். தவறு என்றார்கள். அடுத்து அலுவலகத்திற்கு போய் கேட்டேன். தவறு என்றார்கள். அடுத்து வீட்டு வாசலில் போய் நின்று கேட்பேன். தேர்தலில் நிற்பது என்பது முடிவாகிவிட்டது. வெற்றித் தோல்வியைப் பற்றி கவலைப்படவில்லை.

நடிகர் சங்கத்திற்கு முறையாகத்  தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடக நடிகர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். சேலம் நாடக நடிகர்களுக்கு ப்ளாட் தருகிறோம் என்று சொல்லி ரித்தீஸிடம் உதவி கேட்டிருக்கிறார்கள். அவரும் 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். ஆனால் அந்தப் பணம் சேலத்துக்கும் வரவில்லை. சங்கத்துக்கும் வரவில்லை. எங்கே போனது என்று கேட்டால் நாங்கள் எதிரி.

இத்தனை நாட்களில்   நாங்கள் என்றைக்காவது சரத்குமார் அண்ணனையோ, ராதாரவி அண்ணனையோ அசிங்கமாக திட்டியிருக்கிறோமா..? கமல் சார் எவ்வளவு பெரிய நடிகர்..?   அவரைத்  திட்டினால் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. தைரியம் இருந்தால் எங்களைப் போல கேமிரா முன்னாடி நின்று ராதாரவி பேசட்டும்.

தேர்தல் நடத்தும்  இடம் தேர்வு செய்கிறோம் என்று ஒரு முட்டுச் சந்தை தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்குள் யாரும் போய் வரவே முடியாது. கார் போனால் சுற்றித்தான் வர முடியும்.  ரஜினி சார் ஓட்டு போட்டுவிட்டு வந்து தெருவில் நிற்பாரா..?

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அனைத்து முன்னனி நடிகர்களையும் திரட்டி கூட்டம் நடத்துவோம். அப்போது எங்கள் அணியின் முழுத் தோற்றமும் வெளியுலகத்திற்கு தெரியும். 

எங்களுடைய குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான்.. நாடக நடிகர்களும் நடிகர் சங்கமும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். ஆதலால் யோசித்து முடிவெடுங்கள். நீங்கள் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்ல மாட்டோம் உங்கள் நலனை மனதில் வைத்து சிந்தித்து முடிவெடுங்கள் என்று சொல்கிறோம். விரைவில் சங்கத்தின் மூத்த உறுப்பினர் என்கிற முறையிலும் தமிழக முதல்வரையும் சந்தித்து நடிகர் சங்க பிரச்சினைகளை எடுத்துக்கூற இருக்கிறோம். அப்போது வாக்களிக்க அவரையும் அழைப்போம்..”  என்று பேசி முடித்திருக்கிறார்.

Our Score