full screen background image

“ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள்”-மஞ்சு விஷ்ணு மீது பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு

“ஓட்டுக்குப் பணம் கொடுக்கிறார்கள்”-மஞ்சு விஷ்ணு மீது பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு

தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ அமைப்பிற்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் 10-ம் தேதி காலை ஹைதராபாத்தில் நடைபெறுவதையொட்டி அங்கு தேர்தல் பிரச்சாரம் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்தத் தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், நடிகர் மஞ்சு விஷ்ணு தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இரு அணியினரும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் மஞ்சு விஷ்ணு அணியினர் தபால் வாக்குகளில் மோசடி செய்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று அளித்த பேட்டியில், “தபால் வாக்கு என்பது ஹைதராபாத்தில் இருந்து வெகு தொலைவில் வாழ்ந்து வரும் வயதில் மூத்த நடிகர்களுக்கானது.

மஞ்சு விஷ்ணு மற்றும் அவரது தந்தையான நடிகர் மோகன்பாபுவும் இணைந்து இந்த வாக்குகளை கபளிகரம் செய்யும் வேலையைச் செய்து வருகிறார்கள்.

50-க்கும் அதிகமான பல்வேறு ஊர்களில் வசித்து வரும் மூத்த கலைஞர்களிடமிருந்து இவர்களே கையெழுத்து வாங்கி வருகிறார்கள். கூடவே அவர்களின் வாக்குகளுக்காக பணத்தையும் கொடுத்து வருகிறார்கள். இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல். இது பற்றி தேர்தல் அலுவலர் விசாரணை நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அதோடு இல்லாமல் சங்கத்திற்கு தனது குழுவினருடன் நேரில் வந்து தேர்தல் அலுவலரிடம் இது பற்றி புகாரும் அளித்தார்.

Our Score