சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜெய் பீம்’ படத்திற்கு சென்சாரில் ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
நடிகர் சூர்யா தனது 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து, நடித்துள்ள 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை ‘கூட்டத்தில் ஒருவன்’ படத்தின் இயக்குநரான டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வருகிற நவம்பர் மாதம் 2-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்திற்கு சென்சாரில் ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் 164 நிமிட (2 மணிநேரம் 44 நிமிடம்) நேரம் கொண்டுள்ளது.
சூர்யா நடித்துள்ள படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்படுவது இது 3-வது முறையாகும். ஏற்கனவே அவர் நடித்திருந்த ‘நந்தா’, ‘ரத்த சரித்திரம்’ ஆகிய படங்கள் ‘ஏ’ சான்றிதழ் பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.