ஜன சேனா..! டாலிவுட்டின் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நேற்று ஆரம்பித்திருக்கும் புதிய கட்சியின் பெயர்.
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரும், தற்போதைய மத்திய அமைச்சருமான சிரஞ்சீவியின் சொந்தத் தம்பியான இந்த பவன் கல்யாண், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கூட்டுக் குடும்பத்தில் இருந்து பிரிந்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
சிரஞ்சீவி திருப்பதியில் பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்தபோது அதில் ஆக்டிவ்வாக இருந்தார் பவர் கல்யாண். அன்றைய அரசியல் சூழலில் பவன் கல்யாணின் சொந்த வாழ்க்கையும் எதிர்க்கட்சிகளில் பேசப்பட.. பிரஜா ராஜ்யம் கட்சி ஆரம்பித்த பின்பு ஒரு நாள்.. 3-வயதில் பையன் இருக்கும் நிலையில் தான் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த தோழியான ரேணுகா தேசாய்க்கு தாலி கட்டி அன்றைக்குத்தான் மனைவியாக்கினார்.. அன்றைக்கே அரசியலின் பின் விளைவுகள் என்னவென்பது அவருக்குத் தெரிந்திருக்கும்.
கட்சியில் சிரஞ்சீவியின் மைத்துனர் அல்லு அரவிந்தின் ஆதிக்கம் பிடிக்காமல் கொஞ்சம், கொஞ்சமாக விலக ஆரம்பித்தவர் சிரஞ்சீவி கட்சியை காங்கிரஸுடன் இணைத்தபோது முற்றிலுமாக தொடர்பை துண்டித்துக் கொண்டார்.
இப்போது தெலுங்கானா பிரச்சினை கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் கடந்த 2 மாதங்களாக பவன் கல்யாண் சென்ற இடங்களிலெல்லாம் பேசும் வார்த்தைகள் அரசியல் கலந்தே வந்து கொண்டிருக்க.. அவரது ரசிகர்களிடத்தில் அதனை வீசி பல்ஸ் பார்த்ததாக சொல்கிறது தெலுங்கு மீடியா.
ஒரு சரியான சமயத்தில் தானும் தலைவராக வேண்டும் என்று நினைத்திருந்த பவனுக்கு இதுதான் சரியான தருணமாக தென்பட்டுள்ளது. மாநிலத்தை இரண்டாக உடைத்த காங்கிரஸ் கட்சி இப்போது அங்கே பலவீனமாகத்தான் உள்ளது. தனித் தெலுங்கானா கேட்ட சந்திரசேகரராவின் தெலுங்கானா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட காங்கிரஸ் அதிர்ச்சியில் இருக்கிறது. இவரை நம்பித்தான் ஜெகன்மோகன் ரெட்டியை குப்புறத் தள்ளி, தெலுங்கானா தொகுதிகளை மொத்தமாக அள்ளிவிடலாம் என்று கனவு கண்டிருந்தது. அதில் வேட்டு விழுந்துவிடவே.. இப்போது கூடுதலாக பவனின் கட்சியும் கொஞ்சம் சேதாரத்தைச் செய்யப் போகிறது.
ஒரு பக்கம் தெலுங்கு தேசம்.. இன்னொரு பக்கம் ஜெகன்மோகன் ரெட்டி.. இன்னொரு பக்கம் சந்திரசேகர ராவ்.. அடுத்து பா.ஜ.க… கடைசியாக பவன் கல்யாணின் ஜன சேனா.. இத்தனையையும் தாண்டி சீமந்திரா, தெலுங்கானாவில் காங்கிரஸ் தற்போதைய நாடாளுமன்றத்த தேர்தலில் ஒற்றைப்படை எண்ணிக்கையைத் தாண்டி சீட்டுக்களைப் பிடித்துவிட்டால் அது நிச்சயம் இமாலய வெற்றிதான்..!
தெலுங்குலக சினிமா ரசிகர்கள் தங்களது ஸ்டாரை அரசியலிலும் கை தூக்கிவிடுவார்கள் என்ற நம்பிக்கை சிரஞ்சீவிக்கு கிடைத்த தோல்வி மூலமாகவே தெரிந்துவிட்டது. பின்பும் எதற்கு இந்த கட்சி..? அதுதான் சொந்தப் பகை.. “உங்களுக்கு கட்சியை நடத்தத் தெரியவில்லை. அதனால் தோற்றுவிட்டீர்கள். நான் நடத்திக் காட்டுகிறேன் பாருங்கள்…” என்று தனது அண்ணன் சிரஞ்சீவிக்கு கொடுத்திருக்கும் சமிக்ஞைதான் இந்த புதிய கட்சியின் அறிவிப்பு.
இந்த பவர் ஸ்டார் பவன் கல்யாண், முதலில் தனது சொந்த அண்ணனை சமாளிக்கிறது இருக்கட்டும்… புதிதாக உதயமாகியிருக்கும் சீமாந்திரா மாநிலத்தின் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவராக பாலையா என்கிற நடிகர் பாலகிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளராம். மொதல்ல இவரை எதிர்த்து அங்க அரசியல் நடத்திக் காட்டட்டும்.. அப்புறம் காங்கிரஸை பார்க்கலாம்..!