full screen background image

இசைக் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி..! வைரமுத்துவின் பாடலை பாடிய பவதாரணி..!

இசைக் குடும்பத்தில் அடுத்த அதிர்ச்சி..! வைரமுத்துவின் பாடலை பாடிய பவதாரணி..!

தெனாலிராமனுக்கு அடுத்து ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் பிரமாண்டத் தயாரிப்பு ‘அனேகன்’.  ‘கனா கண்டேன்’, ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’  ஆகிய வெற்றி படங்களை இயக்கிய கே.வி. ஆனந்த் இப்படத்தை இயக்குகிறார்.

இதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். பல மாறுபட்ட தோற்றங்களில்  வருவது போன்ற கதையாம். தனுஷ் நடித்த படங்களிலேயே இதுதான் மிக அதிகப் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் தனுஷடன் முதல் முறையாக நவரச நாயகன் கார்த்திக் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். சென்ற ஆண்டு பாலிவுட்டில் இஷாக் படத்தின் மூலம் அறிமுகமான AMYRA DASTUR இந்தப் படத்தில் ஹீரோயினாக தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகமாகிறார். மேலும் ஐஸ்வர்யா தேவனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கூடவே, ஆஷிஷ் வித்யார்த்தி, முகேஷ் திவாரி, தலைவாசல் விஜய், ஜெகன், வினயா பிரசாத், லேகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கே.வி.ஆனந்தின் ஆஸ்தான வசனகர்த்தாக்களான சுபா இரட்டையர்கள்தான் இதற்கும் வசனம் எழுதியிருக்கிறார்கள். ஆண்டனி எடிட்டிங் செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் இந்த வருடத்தின் சிறந்த பாடல்களாக இருக்கும் என்கிறார் ஹாரிஸ்.

பாண்டிச்சேரியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் என்று நீண்டு கடைசியாக தெற்காசிய நாடுகளையே ஒரு ரவுண்ட் அடித்திருக்கிறதாம். இதுவரையிலும் 90 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னமும் இரண்டு பாடல் காட்சிகளும், கிளைமாக்ஸும் மட்டும்தான் பாக்கியாம். மிக விரைவில் திரைக்குக் கொண்டு வரும் வேலையில் படபடப்புடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ‘அனேகன்’ பட டீம்.

pavatharanee

இதில் ஹைலைட்டான விஷயம், இந்தப் படத்திற்காக வைரமுத்து எழுதிய ‘ஆத்தாடி ஆத்தாடி’ என்ற பாடலை இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி பாடியிருக்கிறார் என்பதுதான். ஏற்கெனவே இசைஞானியின் குடும்பத்தில் வைரமுத்து செய்து வரும் குழப்படி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாக பல புகார்கள் வந்துள்ள நிலையில் இந்தச் சம்பவமும் அதை உறுதிப்படுத்துகிறது.

தன்னுடைய மகன்களான கபிலன் வைரமுத்து, மதன் கார்க்கி ஆகியோருடன் இளையராஜா இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வைரமுத்து ஒரு மேடையில் வேண்டுகோள்விடுத்தார். இந்தச் செய்தி இசைஞானியின் காதுகளுக்காச்சும் சென்றதா என்பது சந்தேகம்தான்.

அடுத்து வைரமுத்து யுவன்சங்கராஜாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றப் போவதாக செய்திகள் வெளியாயின. இந்தச் செய்தி தனக்கு இனிக்கவில்லை என்று தனிப்பட்ட முறையில் தனது வருத்தத்தைத் தெரிவித்தார் யுவனின் அண்ணன் கார்த்திக்ராஜா. ஆனாலும் வைரமுத்து, யுவனுடன் பணியாற்றுவது உறுதியாகிவிட்டது.

pavatharanee-2

இப்போது பவதாரணியின் முறை. இவர் எப்படி இதற்கு ஒத்துக் கொண்டாரென்று தெரியவில்லை. ஒருவேளை படத்தின் விளம்பரத்திற்காகவா..? அல்லது மிகப் பெரிய தொகையைக் கொடுத்து பவதாரணியை மடக்கினார்களா என்பதும் புரியவில்லை. ஏனெனில் இசைஞானியின் குடும்பத்திலேயே அவர் மீது அதிக ஒட்டுதலும், பாசத்துடனும் இருக்கும் பவதாரிணி தனது தந்தையின் பரம எதிரி வைரமுத்துவின் பாடலை பாடியிருப்பதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..!

ஏதோ இருக்கும்..!

Our Score