full screen background image

‘எனக்கு போட்டியே நான்தான்’ – தம் கட்டும் சந்தானம்..!

‘எனக்கு போட்டியே நான்தான்’ – தம் கட்டும் சந்தானம்..!

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தை விநியோகஸ்தர்களைவிடவும், தயாரிப்பாளர்களும், நடிகர்களும் மட்டுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

 இது காமெடி ஹீரோவான சந்தானம் தனி ஹீரோவாக நடிக்கும் முதல் படம். இந்தப் படம் நன்றாக ஓடினால் சந்தானம் தனி ஹீரோவாகவே தன் ஆவர்த்தனத்தை நடத்துவார் என்பதால் எப்படி வலையில் மீனை சிக்க வைப்பது என்று வியாபார தயாரிப்பாளர்களில் ஒரு தரப்பு யோசனையில் இருக்கிறது. இன்னொரு பக்கம் காமெடிக்கு இவரும் வந்துவிட்டாரா போட்டியாக.. இனி அடுத்து நாம காமெடி குரூப்புக்கு மாறிடலாமா என்று தனி ஹீரோக்களையும் நிச்சயம் யோசிக்க வைக்கும்.

இந்த சூழ்நிலையில் இந்தப் படத்தின் பிரஸ்மீட்டுக்கு ரெயின் ட்ரீ ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சந்தானம். படத்தின் இசையமைப்பாளர், எடிட்டர், தயாரிப்பாளர், இயக்குநர் நால்வரும் ரத்தினச் சுருக்கமாக தங்களது பேச்சை முடித்துக் கொள்ள சந்தானம் மட்டும் நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்.

“உங்களையெல்லாம் ரொம்ப நாளா சந்திக்கணும்னு ஒரு பிளான் இருந்துச்சு.. பட்.. ஷூட்டிங் வேலைகள் தொடர்ந்து வந்துக்கிட்டே இருந்த்தால சந்திக்க முடியலை.. இந்தச் சூழல்ல இந்தப் படத்தை வைச்சாவது உங்களைச் சந்திக்கணும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இந்தச் சந்திப்பு..” என்றவர் படத்தின் தயாரிப்புப் பணிகள். தற்போதைய நிலவரம்வரைக்கும் சொற்பொழிவாற்றிவிட்டு கேள்விகளைச் சந்திக்கத் தயாரானார்.

ரொம்ப நாளாச்சே என்பதால் பத்திரிகையாளர்கள் பல மூலைகளிலிருந்து கேள்விகளை வீசியெறிய பல கேலி, கிண்டல்களுக்கிடையே பதட்டமே படாமல், கோப்படாமல் பதிலளித்தார் சந்தானம்.

ஹீரோ வேஷம் எப்படி..?

கதாநாயகனாக நடிச்சதே, ஒரு புது அனுபவம்தான். இந்தப் படத்துல கதாநாயகியுடன் டான்ஸ் ஆடியிருக்கிறேன். ஆனா அது, டூயட் மாதிரி இருக்காது. கனவு பாடலும் அல்ல. கதைக்குப் பொருத்தமான ஒரு பாடல். அவ்ளோதான்.. எனக்காக எந்தவித மாற்றமும் படத்துல செஞ்சுக்கலை..

அடுத்தது என்ன..?

ஆரம்பத்தில் நான் டி.வி.ல ஷோ பண்ணிக்கிட்டிருந்தேன். அதன் பிறகு சினிமால ‘காமெடியன்’ ஆனேன். இப்ப ஹீரோ ஆகியிருக்கிறேன். இப்பவும் காமெடியனா நடிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன்.. ஏன், நாளைக்கு டைரக்சன்கூட பண்ணுவேன். சினிமா வேலையை நான் திருப்தியாக செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இந்தச் சினிமாவுக்குள்ள இருக்கணும் அவ்வளவுதான்..!

ஹீரோ வேஷம்-காமெடியன் வேஷம் எது பெஸ்ட்டு..?

கதாநாயகனாக நடிக்கிறதுதான் கஷ்டமானது. காமெடியனாக நடிக்கும்போது நாலு பன்ச் டயலாக் அடிச்சிட்டு போயிட்டா ஓகே. ஆனா கதாநாயகனா நடிக்கணும்னா சண்டை போடணும். டான்ஸ் ஆடணும். நாயகன் அவதாரம் எடுக்கும்போது அதையெல்லாம் கொஞ்சமும் சொதப்பா பண்ணனும். அந்தப் பயம்தான் காரணம்…

நீங்க ஹீரோவாயிட்டீங்க.. மத்த ஹீரோக்களுக்கெல்லாம் கோபமா..?

அப்படி நான் நினைக்கலை. எல்லா கதாநாயகர்களும் என்னுடன் நட்பாகத்தான் இருக்கிறார்கள். நான் ஹீரோவா நடிக்கப் போறேன்னு சொன்னவுடனேயே ஆர்யா அட்வைஸெல்லாம் செஞ்சாரு.. உதயநிதியும் சொன்னாரு.. அவங்க சொன்ன மாதிரி கொஞ்சம் உடம்பை பிட் செஞ்சு கேமிராவுல ஹீரோவா பதிவாகுறதுக்கு ஏத்த மாதிரி வந்து நின்றிருக்கேன்.

அவங்கள்ல சில பேரு அவங்களோட படத்துக்கே பன்ச் டயலாக்கு.. காமெடி டயலாக்ஸ் வேணும்னு என்கிட்ட கேட்டிருக்காங்க.. நானும் போன்லயே நிறைய சொல்லியிருக்கேன். ஆர்யா, உதயநிதி, ஜீவா இப்படி பலருக்கும் சொல்லியிருக்கேன். அந்த பிரெண்ட்ஷிப் அப்படியேதான் இருக்கு.

பேட்டியே கொடுக்கிறதில்லைன்னு உங்க மேல நிறைய புகார் வந்திருக்கே..?

2012 தீபாவளி டைம்ல எல்லா டிவி சேனல்களையும் கும்பகோணத்துக்கு கூப்பிட்டே பேட்டி கொடுத்தேன். இப்பக்கூட நீங்க யூடியூப்புல தேடி பாருங்க.. நிச்சயமா 12 சேனல்களுக்காச்சும் அன்னிக்கு பேட்டிகளை வரிசையா கொடுத்தேன். இப்ப நேரமில்லாததால   வர முடியாத சூழலே தவிர.. வரவே கூடாதுன்னு நான் நினைக்கலை..

பல பெரிய ஹீரோயின்கள்கூட நடிச்சிருக்கீங்க. அவங்களையெல்லாம் இதுல நடிக்க வைக்காம புதுமுகங்களை நடிக்க வைச்சிருக்கீங்களே..?

பிரபல கதாநாயகிகளுக்கு அண்ணனாக–நண்பனாக பல படங்களில் நடித்து இருக்கிறேன். அவங்களேய இதுல எனக்கு ஜோடியாக நடிக்க வைத்தால், ரசிகர்கள் கம்பேர் பண்ணிப் பார்த்து கத்திருவாங்க. ஆடியன்ஸுக்கு அது பிடிக்காது. அதனாலதான் புது கதாநாயகியோட நடிச்சிருக்கேன்.

உங்களுக்குப் போட்டியா யாரை நினைக்குறீங்க..?

எனக்கு போட்டின்னு யாரையுமே சொல்ல முடியாது. நான் என்னைக்கு ஓ.பி. அடிக்க ஆரம்பிக்கிறேனோ அப்போ ரசிகர்களே என்னை ஓரங்கட்டிருவாங்க. உழைக்கும்வரை நான் நம்பர் ஒன். வாழ்க்கையில் எப்பவும் உழைத்துச்சுக்கிட்டே இருக்கவே சிலர் விரும்புவார்கள். அப்படித்தான் நானும். எனக்கு நான்தான் போட்டி.

ரொம்பவே தம் கட்டி பேசினார் சந்தானம். இந்தப் படம் அவரது நடிப்பு கேரியரையே மாற்றக் கூடிய படம் என்பதால் இது ரீலீஸான பின்புதான் சந்தானத்தின் எதிர்காலம் என்னவென்பது தெரிய வரும்..!

Our Score