‘ஆர்வம்’, ‘கனவு’, ‘திறமை’ இம்மூன்றுக்கும் ‘வாய்ப்பிற்கும்’ இடையிலிருக்கும் இடைவெளிக்கு ‘உழைப்பு’ என்ற வார்த்தை பாலமாய் அமைகிறது.
GK சினிமாஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் வெளிவர தயாராக இருக்கிறது ‘பட்ற’ திரைப்படம். இதில் வைதேகி, சாம்பால், புலிபாண்டி என பல புதுமுகங்களுடன் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மிதுன்.
தனது சினிமா கனவு பற்றி பேசும் ஹீரோ மிதுன், “எனக்கு சிறு வயது முதலே சினிமா என்றால் ஆர்வம் அதிகம். நடனம், நடிப்பு என பல்வேறு விதமான பயிற்சிகளை மேற்கொண்டேன்.
ஒரு பிரபல சினிமா ஆல்பத்தில் எனது புகைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் ஜெயந்தன் என்னை அழைத்தார். எனது நடிப்பு மற்றும் உடல் கட்டமைப்பும் இந்த கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக இருக்கும் என்று கூறி என்னை படத்தில் ஒப்பந்தம் செய்தார்.
இறுதி சண்டை காட்சிகாக எனது உடற்கட்டை மேம்படுத்த வேண்டியிருந்தது. அதற்காக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டேன்.
ஷூட்டிங்கிற்கு சில நாட்கள் உள்ள நிலையில் எனது குடும்பத்தில் அனைவரும் ஒரு சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதையறிந்த இயக்குனர் ஜெயந்தன் படப்பிடிப்பை நிறுத்தினார். முழு ‘பட்ற’ குழுவும் எனக்கு மிகவும் பக்க பலமாய் இருந்தனர். நானும் மருத்துவமனையில் இருந்துகொண்டே எனது உடற்பயிற்சிகளை தொடர்ந்தேன்..
கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் ஒரு பெரிய மரப் பலகையால் என் பின் மண்டையில் அடி வாங்க வேண்டும் என்று சண்டை பயிற்சியாளர் ‘மிரட்டல்’ செல்வம் கூறினார். அடிப்பவர் கையில் உண்மையான மரப் பலகையைப் பார்த்த உடனே எனக்கு பயம் வந்து விட்டது. இயக்குநரிடம் ‘டூப் போட்டுக்கலாமா ஸார்..?’ என்று கேட்டேன். ‘இல்லையில்லை.. இந்த காட்சி யதார்த்தமாக அமைய வேண்டும். நீங்களே நடிச்சிருங்க..’ என்று கூறி ஊக்கப்படுத்தினார். அக்காட்சியும் நன்றாக வந்திருக்கிறது.
ஓர் நடிகனாக என்னை நானே வளர்த்துக் கொள்ள ‘பட்ற’ படக் குழுவினர் மிகவும் உதவினர். படத்தின் தயாரிப்பாளர் காந்தி குமார், இயக்குனர் ஜெயந்தன் மற்றும் அனைத்து குழுவினருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்று கொங்கு தமிழ் வாசம் பொங்க கூறினார்.