ரெட் கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம்.நடராஜன், என்.ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் பட ம் ‘நகர்வலம்’.
இத்திரைப்படத்தின் நாயகனாக ‘காதல் சொல்ல வந்தேன்’ பாலாஜியும், நாயகியாக தீக்சிதா என்கிற புதுமுகமும் நடித்துள்ளனர். மேலும், பாலா, யோகிபாபு, நமோ நாராயணன் ‘வேட்டை’ முத்துக்குமார், இயக்குநர் மாரிமுத்து, ரிந்துரவி, ‘அட்டக்கத்தி’ வேலு, ‘மதுபானக்கடை’ ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – தமிழ்தென்றல், இசை – பவன், படத்தொகுப்பு – மணிகண்ட பாலாஜி , கலை – தேவா, சண்டை பயிற்சி – ‘ஃபயர்’ கார்த்திக், நடனம் – கல்யாண், நந்தா, விமல்ராஜ், பாடல்கள் – மோகன் ராஜன்.
இதில் சென்னையின் பூர்விக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் கானா பாடலை நீண்ட நாட்களுக்குப் பிறகு, ‘கானா புகழ்’ இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடியுள்ளார். இப்படத்தில் நடிகர் பசுபதி ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
படத்தின் இயக்குநரான மார்க்ஸ் படம் பற்றி பேசுகையில், “சென்னை நகரில், குடிநீர் விநியோகிக்கும் மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான நாயகன், பல ஏரியாக்களுக்கு குடிநீர்விட செல்லுகையில், ஓர் ஏரியாவின் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் உண்டாகும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை. அதனை சென்னை மக்களின் வாழ்வியலுடன் கலந்து யதார்த்தமாகவும், சுவாரஸ்யமாகவும் திரைக்கதை அமைக்கப்பட்டு, படமாக்கப்பட்டுள்ளது..” என்றார் .
சென்னை நகரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளான அண்ணாநகர், சைதாப்பேட்டை, கே.கே.நகர், கண்ணகி நகர் ஹவுசிங் போர்டு ஏரியா போன்ற இடங்களில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகின்றது.