பரியேறும் பெருமாள் – சினிமா விமர்சனம்

பரியேறும் பெருமாள் – சினிமா விமர்சனம்

தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

இந்தப் படத்தில் கதிர், ‘கயல்’ ஆனந்தி, யோகிபாபு, லிஜேஷ், மாரிமுத்து, லிஸி ஆண்டனி, சுகந்தி நாச்சியாள் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – ராமு, பாடல்கள் – விவேக், மாரி செல்வராஜ், நடன இயக்கம் – சாண்டி, சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், இணை தயாரிப்பு – சி.வேலன், ஆர்.ராகேஷ், எழுத்து, தயாரிப்பு – பா.ரஞ்சித், இயக்கம் – மாரி செல்வராஜ்.

இன்றைய புதிய தலைமுறையினர் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய தமிழகத்தின் தலையாயப் பிரச்சினையான சாதிய அட்டூழியங்களை மையக் கருத்தாக்கி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ்..!

தென் தமிழகத்தில் ஆதிக்கச் சாதியினரான முக்குலத்தோருக்கும், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் இடையே காலம்காலமாக முட்டல்கள்.. மோதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

அடக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட இன மக்கள் தங்களது பொருளாதார, சமூக நிலையை உயர்த்திக் கொள்ள இத்தனையாண்டு காலமும் எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது என்பதை இப்போது தமிழகமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அப்படியொரு போராட்ட உணர்வோடு வக்கீலாக மாற வேண்டும் என்கிற வெறியோடு திருநெல்வேலி சட்டக் கல்லூரிக்கு படிக்க வரும் ‘பரியேறும் பெருமாள்’ என்கிற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவனின் கதைதான் இது.

‘பரியேறும் பெருமாள்’ என்னும் கதிருக்கு திருநெல்வேலி பக்கத்தில் இருக்கும் புளியங்குளம்தான் சொந்த ஊர். அந்த ஊரில் காலம் காலமாக வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட இனத்தில் அந்த இனத்தின் பெயரை உரக்கச் சொல்லவும், அவர்களது தாழ்ந்த நிலையை எழுப்பிவிடவும், அடிமைத்தனத்தை எதிர்த்துக் குரல் கொடுக்கவும் ஒரு படித்த ஆள் இல்லாததை மனதில் வைத்து தன் இனத்துக்காக, தன் மக்களுக்காக வாழ வேண்டும்.. படித்து வக்கீலாக அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற வேட்கையோடு சட்டக் கல்லூரியில் வந்தமர்கிறார் கதிர்.

இங்கே அவருக்கு ஒரேயொரு பிரச்சினை.. அவரது ஆங்கில அறிவின் போதாமை. இதற்காக அதே வகுப்பில் படித்து வரும் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ‘ஜோதி மகாலட்சுமி’ என்னும் ஆனந்தி கதிருக்கு உதவ முன் வருகிறார். தன்னிடமெல்லாம் ஜோதி போன்ற அழகான பெண்கள் பேச வருவார்களா என்கிற ஆச்சரியத்தில் மூழ்கும் கதிர், ஆனந்தியின் உதவியைப் பெற்றுக் கொள்கிறார். அவரது உதவியால் ஆங்கிலத்தைக் கற்றும் கொள்கிறார்.

ஆனந்தியோ உயர் சாதியைச் சேர்ந்த பெண். அவரது தந்தை மாரிமுத்து சாதிய பிடிப்பாளர். அவரது மகன்களும் அப்படியே.. இவரது தம்பி மகனான லிஜிஸூம் அதே வகுப்பில்தான் படித்து வருகிறார்.

ஆனந்தி மிகவும் வெள்ளந்தியானவர். ஏதோ ஒரு காரணத்துக்காக அவருக்கு கதிரை மிகவும் பிடித்துப் போய்விடுகிறது. கதிரின் அப்பாவித்தனம் அவரை மேலும் அவர் பக்கம் ஈர்க்கிறது. இந்த ஈர்ப்பின் விவரம் மாரிமுத்துவரையிலும் செல்கிறது.

ஆனந்தியின் அக்காள் திருமணத்திற்கு அழைப்பிற்கிணங்க வரும் கதிரை தனி அறையில் வைத்து அடித்து, உதைத்து அவரது முகத்தில் சிறுநீர் கழித்து அவமானப்படுத்துகிறார்கள் மாரிமுத்துவின் மகன்கள்.

இந்த அவமரியாதையை தாங்க முடியாமல் கதிர் ஆனந்தியைவிட்டு விலகிச் செல்கிறார். ஆனந்தியோ உண்மை தெரியாமல் கதிரின் விலகலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறார். இடையில் ஆனந்தியின் அண்ணனான லிஜிஸ் கல்லூரியில் கதிரை மேலும் மேலும் டார்ச்சர் செய்ய.. கதிர் தாங்க முடியாத மனவலிக்கு உள்ளாகிறார்.

கதிரின் தந்தை பிரின்ஸிபாலை பார்க்க வந்தபோது அவரை லிஜிஸும் அவரது ஆட்களும் அவமானப்படுத்த.. கதிரின் கோபம் கட்டுக்கடங்காமல் போகிறது. அதே நேரம் ஆனந்தி கதிருடன் மேலும் நெருக்கமாவதை அறிந்து கதிரை தீர்த்துக் கட்டவும் முடிவு செய்கிறார் மாரிமுத்து.

இதற்காக சாதிய கொலைகளைச் செய்வதையே முழு நேரத் தொழிலாக வைத்திருக்கும் கராத்தே வெங்கடேசனை அணுகுகிறார்கள் மாரிமுத்து தரப்பினர். அவரும் கதிருக்கு நாள் குறித்துக் காத்திருக்கிறார்.

இந்த நிலைமையில் கதிர் செய்வது, செய்தது என்ன..? ஆனந்தியுடனான அவரது காதல் என்ன ஆனது..? அப்பாவின் நிலைமைக்காக பழி வாங்கினாரா இல்லையா என்பதுதான் இந்தப் ‘பரியேறும் பெருமாளின்’ திரைக்கதை.

படத்தின் முதல் காட்சியில் அந்தச் சிறு தண்ணீர் குட்டையில் நாய்களுடன் சரிக்கு சரியாக அமர்ந்து நாய்களைக் குளிப்பாட்டிவிட்டு தூரத்தில் ஆதிக்கச் சாதியினர் வருகிறார்கள் என்றவுடன் வேண்டாவெறுப்பாக எழுந்து செல்வதும், அவர்கள் வந்தவுடன் அந்தக் குட்டையில் சிறுநீர் கழித்து தங்களது வெறுப்புணர்வைக் காட்டுவதும் உண்மைத்தனமான காட்சி..! இந்த ஒரு காட்சியே படம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டிவிட்டது.

படம் நெடுகிலும் ஜாதியக் குறியீடுகள் எப்படியெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர்.

தனது தந்தை ‘கரகட்டாக்கார கலைஞர்’ என்பதை வெளியில் சொல்ல சங்கடப்பட்டு ‘வண்டி மாடு வைத்திருக்கிறார்’ என்றே சொல்லி வரும் கதிரின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். அந்த வலி தெரியும். புரியும்.

‘கரகாட்டம்’ என்பது தமிழர்களின் ஆதி கலைகளில் ஒன்றாக இருந்தாலும் அதில் ஈடுபடுவர்களில் பெரும்பாலோர் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதும், வெளியில் சொன்னால் தனது சாதி தெரிந்துவிடும் என்று சொல்லி அதனை மறைக்கப் போராடும் கொடுமையெல்லாம் இந்த நாட்டில்தான் நடக்கும்.

சாதி வெறி கொழுப்பாக மாறி கதிரின் உடன்பிறவா தம்பியாக இருக்கும் ‘கருப்பி’ என்னும் நாயை தண்டவாளத்தில் கட்டி வைத்து பலியாக்கும் காட்சி மகா கொடூரம்.

‘டாக்டர் அம்பேத்கராகப் போகிறேன்’ என்று கதிர் சொன்னவுடன் பிரின்ஸிபால் அதனை அவரது அப்ளிகேஷனிலேயே எழுதி வைக்கச் சொல்லும் குதர்க்கமும் ஒரு சாதி வடிவிலான குரோதம்தான்.

பேருந்தில் கதிர் தனது சொந்த ஊர் ‘புளியங்குளம்’ என்றவுடன் கராத்தே வெங்கடேன் சட்டென்று எழுந்து நின்று கொள்ளும் காட்சியும் ஒரு குறியீடுதான்.

மற்றவர்களையெல்லாம் லாக்கெப்பில் அடைத்து வைக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நரி வேட்டைக்குப் போன தாழ்த்தப்பட்ட மக்களை ஸ்டேஷன் வாசலின் ஓரத்திலேயே குந்த வைத்து விசாரிப்பதும் ஒரு குறியீடுதான்.

ஆங்கிலம் தெரியாத காரணத்தினாலேயே, “கோட்டால சீட் வாங்கிட்டு வந்து நம்ம உசிரை வாங்குறாங்க…” என்று ஆங்கில ஆசிரியர் பேசுவதுகூட சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடுதான்.

‘இளையராஜாக்கள் கபடிக் குழு’ என்று எழுதப்பட்ட சுவர் விளம்பரம் கதிருக்கானது என்றால், ஆனந்தியின் அக்காள் கல்யாணத்தில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டரில் இருக்கும் நடிகரின் புகைப்படத்தை அவர்களது சாதியின் குறியீடாகவும் உணர வைத்திருக்கிறார் இயக்குநர்.

கிளைமாக்ஸில் மாரிமுத்து குடித்த பால் இல்லாத டிகாஷன் டீ டம்ளரும், பால் கலந்த டீயைக் குடித்த கதிரின் டம்ளரும் குளோஸப்பில் காட்டப்படுவதுதான் உச்சக்கட்ட குறியீடு..!

சாதி மீறல் திருமணங்களில் சம்பந்தப்பட்டவர்களை யாருக்கும் தெரியாமல் படுகொலை செய்வதையே தொழிலாக செய்யும் கராத்தே வெங்கடேசன், “அப்படி கொலை செய்வதை குலச் சாமிக்கு செய்யும் படையலாக நினைத்துதான் செய்கிறேன்…” என்றெல்லாம் சொல்வது சாதி வெறியர்களைக் காட்டுமிடம்.

அந்த உன்னதமான கலைஞனான கதிரின் அப்பாவின் வேட்டியை உருவி அவரை நட்டநடுரோட்டில் ஓட விடும் கொடுமையைச் செய்வது சாதி வெறியின் உச்சக்கட்டம்.

இப்படி சாதி வெறி எந்த அளவுக்கு நமது மக்களிடையே புரையோடிக் கிடக்கிறது என்பதையும் படத்தில் ஆங்காங்கே சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

அப்பாவிக் களையுடனும், அந்த இனத்து இளைஞர்களுக்கே உரித்தான ஒதுங்கிப் போகும் தன்மையுடனும் படம் முழுவதுமே வலம் வருகிறார் கதிர். ஆங்கிலம் தெரியாத அவமானத்தில் வகுப்பில் கூனிக் குறுகுவதும், ‘கோட்டாவில் சீட் வாங்கிட்டு வந்து உயிரை எடு்க்குறாங்க’ என்று ஆங்கில வகுப்பு பேராசிரியர் சொல்லி முடிப்பதற்குள்ளாக பெஞ்சில் தாவிக் குதித்து மற்ற மாணவர்களின் நோட்டுக்களையெல்லாம் கொடுத்து ‘இதை ஒரு நிமிஷம் பாருங்க.. ஒரு நிமிஷம் பாருங்க’ என்று கத்திக் கூப்பாடு போட்டு தனது கோபத்தைக் காட்டுமிடத்தில் மனதைப் பிசைய வைத்திருக்கிறார் கதிர்.

இந்த இடத்தில் இயக்குநரின் அபாரமான இயக்கத் திறமையும், ஒளிப்பதிவாளரின் பணியும், படத் தொகுப்பாளரின் கச்சிதமான தொகுப்பும் காட்சிக்கு மேருகேற்றியிருக்கின்றன.

கல்யாண மண்டப அறைக்குள் அடி வாங்கி அவமானத்துடன் அவர்களைப் பார்க்க மறுத்து அவர்கள் போனவுடன் திரும்பிப் பார்க்கும் கதிரின் நடிப்பு பிரமாதம். இதேபோல்தான் பெண்கள் பாத்ரூமுக்குள் தள்ளிவிடப்பட்டு விழுந்தவுடன் முகத்தைத் தரையில் பொத்திக் கொண்டு அலறி துடிக்கும் அவரது நடிப்பால் கவர்ந்திழுத்திருக்கிறார் கதிர்.

கராத்தே வெங்கடேசனால் தாக்கப்பட்டு சாவின் விளிம்புவரையிலும் சென்று திரும்பியவர் பதிலுக்குத் திருப்பித் தாக்கினாலும் கொலை செய்யும் அளவுக்கெல்லாம் போக மனசில்லாமல் மாரிமுத்துவை வார்த்தைகளால் விளாசிவிட்டுப் போகும் காட்சியில் ஒரு நொடிகூட திரையில் இருந்து கண்களை அகற்ற முடியவில்லை. அத்தனை கச்சிதமாக நடித்திருக்கிறார் கதிர். இயக்குநரின் அபாரமான இயக்கத் திறமைக்கு இந்தக் காட்சியும் ஒரு சான்று.

வெள்ளந்தியான ஒரு பொண்ணாக சமர்த்தாக நடித்திருக்கிறார் கயல் ஆனந்தி. அம்பாசமுத்திரத்தில் இருந்து வந்துபோகும் நிலைமையிலும் சாதிய வேறுபாடுகளைக்கூட புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குழந்தைத்தனத்துடன் இருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச்சுதான் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம்.

எதற்காக கதிர் தன்னிடமிருந்து ஒதுங்கிப் போகிறார் என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் திரும்பத் திரும்ப கதிரை நெருங்குவதும், அவர் மேல் தனக்கிருக்கும் காதலை அவர் வெளிப்படுத்தும் அந்தக் காட்சியில் அவரது நடிப்பும் பாராட்ட வைக்கிறது.

மகள் மீதான பாசமே சாதிப் பற்றோடு தான் இருப்பதற்கான காரணமாக மாரிமுத்துவின் நடிப்பு காட்டுவதிலும் ஒரு அர்த்தமுள்ள திரைக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர்.

“இனிமேல் என் மகள் பின்னாடி சுத்துறதை பார்த்தால் உன்னையும் கொன்றுவானுங்க. என் மகளையும் கொன்றுவானுங்கடா…” என்று கதறல் குரலில் அலறும் மாரிமுத்து பெற்ற தகப்பன்களின் வலியை அந்த ஒரு நிமிடத்தில் சொல்லியிருக்கிறார்.

கிளைமாக்ஸில் கதிரின் உறுதியான குணம் காரணமாகவும், யாரையும் கொல்லாமல் விட்டுவிட்டுப் போகும் அந்த நல்லெண்ணத்திற்காகவும் கடைசியில் மனம் மாறும் மாரிமுத்துவின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் அருமை.

வேறு சாதிக்காரராக இருந்தாலும் கதிரின் கூடவே இருந்து அவரது இணை பிரியா நட்பாக இருக்கும் யோகிபாபுதான் படத்தின் இடையிடையே வரும் நகைச்சுவைகளுக்கு பொறுப்பாளராகிறார்.

“சின்ன c-யா.. பெரிய C-யா?” என்று யோகிபாபு கேட்கும் காட்சியில் தியேட்டரே கை தட்டலில் அதிர்கிறது. அடுத்து அதே ஆங்கில பேராசிரியரைப் பார்த்து “சரி வந்து உக்காரு…” என்று மெல்லிய குரலில் சொன்னபடியே எழுந்துபோகும் காட்சியிலும் தியேட்டர் கை தட்டல்களால் அதிர்கிறது.

இறுக்கமான முகத்துடன், கண்டுபிடிக்கவே முடியாத தந்திரக்காரனாக கொலைகளை தொடர்ந்து செய்து வரும் கராத்தே வெங்கடேசன் போன்ற சாதி வெறியர்கள் ஊருக்கு ஊர் இருப்பார்கள். இருக்கிறார்கள். ஒவ்வொரு கொலையையும் பக்கவாக பிளான் செய்து செய்து முடிப்பதெல்லாம் இடையிடையே தமிழகத்தில் இதுவரையிலும் நடைபெற்ற பல ஆணவக் கொலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

கடைசியான கதிரின் ஆபரேஷனில் தான் தோல்வியடைந்ததை உணர்ந்து எதிரிகளிடம் அடி வாங்கியும் உயிர் வாழ வேண்டுமா என்றெண்ணி தன்னை முடித்துக் கொள்ளும் அந்தக் கணம், இந்தச் சாதி என்னும் பித்து எத்தனை மனிதர்களை எப்படியெல்லாம் பைத்தியமாக்கி வைத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

கதிரின் தந்தையாக நடித்திருக்கும் கலைஞர் தங்கமுத்துவின் அபாரமான நடிப்பு படத்தை மிக உயர்வாகக் கொண்டு போயிருக்கிறது. ஆண் உடல். ஆனால் கலைக்காக மாறிவிட்ட பெண் தன்மையுடன் இருக்கும் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் படத்தில் கிடைத்த மிகப் பெரிய அதிர்ச்சி.

அவரை அவமானப்படுத்தி ரோட்டில் ஓட விடும் காட்சியில் அந்தப் பெரியவர் காட்டியிருக்கும் நடிப்பு பதைபதைக்க வைத்திருக்கிறது. உண்மையில் உயர் சாதி வெறியர்களை இப்படியே ஓடவிட்டு அடிக்க வேண்டும் என்கிற வெறியையும் நமக்குள் ஊட்டுகிறது அந்தக் காட்சி. இயக்குநரின் கோப ஆவேசத்தை அந்தக் காட்சியில் காணலாம். தங்கமுத்துவின் நடிப்புக்கு ஒரு சல்யூட்.

ஒரேயொரு காட்சியென்றாலும் கலகலக்க வைத்திருக்கிறார் சண்முகராஜன். போலி அப்பாவாக இருந்தாலும் பிரச்சினையை முடித்து வைக்க பிரின்ஸிபால் அறைக்குள் வைத்து கதிரை நாலு சாத்து சாத்திவிட்டு போகும் காட்சியில் தியேட்டரே கலகலப்பாகிறது.

‘தரமணி’யில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தாலும் நமது மனதுக்குள் இன்னமும் தேவதையாய் அமர்ந்திருக்கும் லிஸி ஆண்டனி இதில் பேராசிரியராக நடித்திருக்கிறார். “நானும் அந்த தேவதைகள் லிஸ்ட்ல இருக்கேனா..?” என்று அவர் கதிரிடம் கேட்கும்போது “அதெப்படி இல்லாமல் இருப்பீர்கள்…?” என்று கதிரையும் முந்திக் கொண்டு ரசிகர்களைச் சொல்ல வைத்திருக்கிறது இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சும், நடிப்பும். சில குளோஸப் ஷாட்டுகளில் மிக அழகாக மிளிர்ந்திருக்கிறார் லிசி. வாழ்த்துகள்.

இரண்டு காட்சிகள் என்றாலும் இரண்டாவதில் குடி போதையில் இருக்கும் கதிரை “வெளியே போ…” என்று ஆக்ரோஷமாய் கத்தும் பேராசிரியராக நடித்திருக்கும் சுகந்தி நாச்சியாளுக்கும் நமது வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்.. அவரது திரையுலகப் பணி மேலும் தொடரட்டும்.

மூன்றாவது வருடத்தில் பிரின்ஸிபாலாக வரும் பூ ராமு “எங்கப்பா செருப்பு தைச்சவரு. நான் காலேஜ்ல படிக்கும்போதும் எனக்கும் இதையேதான் செஞ்சாங்க. ஆனாலும் அத்தனையையும் பொறுத்துக்கிட்டு மேலும், மேலும் படிச்சேன். பாஸ் பண்ணேன். பேராசிரியரா ஆனேன். இப்போ இந்த சீட்ல வந்து உக்காந்திருக்கேன். அன்னிக்கு என்னை விரட்டுனவன்ல்லாம் இன்னிக்கு என்னை ‘ஸார்.. ஸாரு’ங்குறான். நீயும் விடாமல் படி. அப்படியும் பிரச்சினை வந்தால் உன் எதிர்ப்பை எப்படி காட்டணுமோ அப்படிக் காட்டு.. போ…” என்று கதிருக்கு அறிவுரை சொல்லியனுப்பும் காட்சி அத்தனை ஜாதிக்காரர்களுக்குமான ஒரு பாடம். புரிந்து கொண்டவர்கள் நிச்சயம் சாதிகளை மறந்து வாழ்க்கையில் உயரலாம்.

படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி ஷாட்வரையிலுமான ஒளிப்பதிவே இது எந்த மாதிரியான படம் என்பதை காட்டுகிறது. படத்தின் காட்சிகள் பெரும்பாலும் பகல் காட்சிகளே இருப்பதும், கல்லூரி காட்சிகள் அதிக நேரம் பிடித்திருப்பதாலும் ஒளிப்பதிவில் குறையில்லாமல் படமாக்க நிரம்ப மெனக்கெட்டு உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர்.

சிற்சில குளோஸப் காட்சிகளே படத்தின் திருப்பு முனைகளாக இருப்பதும், அவற்றை கச்சிதமாகப் படம் பிடித்திருப்பது இயக்குநருக்கு பேருதவியாக இருந்திருக்கிறது. தங்கமுத்து நடுரோட்டில் ஓடி வரும் காட்சியை லாங் ஷாட்டில் படமாக்கியிருக்கும்விதத்தை ‘அற்புதம்’ என்றே சொல்ல வேண்டும்..!

ஆங்கில பேராசிரியரிடம் கதிர் மல்லுக்கட்டும் காட்சி, அறைக்குள் அடி வாங்கும் காட்சி, கராத்தே வெங்கடேசனின் படுகொலை காட்சிகள், கடைசியான கிளைமாக்ஸ் காட்சிகள்வரையிலும் படத் தொகுப்பாளரின் பெயரைச் சொல்கிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள் ஸார்..!

பாடல் வரிகள் அனைத்துமே சுத்தத் தமிழில் எளிதில் புரியும்வகையிலும் இசைக்கப்பட்ட இசையில் வடிவமைக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ‘கருப்பி’ பாடலும், அதற்குண்டான பாடல் காட்சிகளும் மனதைப் பிசைகின்றன. நாயாகவே இருந்தாலும் அதற்கும் மனிதருக்குரிய மரியாதையைக் கொடுத்து ஈமச்சடங்கை நடத்தும் குணத்தை காட்டியிருப்பதற்கு இயக்குநருக்கு நன்றி.

பின்னணி இசையில் பல காட்சிகளில் உயிர் கொடுத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு, படத் தொகுப்பும் உயிர்ப்புடன் இருந்த அதே காட்சிகளில் பின்னணி இசையும் அப்படியொரு தவிப்பை நமக்குக் கொடுத்திருக்கிறது.

படத்தின் மிகப் பெரிய பலமாக அமைந்திருப்பது வசனங்கள்தான். அதிலும் மிக நாகரிகமான வசனங்களாக மட்டுமே பேச வைத்திருக்கிறார் இயக்குநர்.

“எதுல சார் நாங்க குறைஞ்சி போயிட்டோம்.. எல்லாருமே இங்கே கோழி குஞ்சுகதான் சார்…”

“ரூமுக்குள்ள தூக்குப் போட்டுச் சாவறதுக்கு இப்படியாவது சண்டை போட்டு சாவட்டும்…” என்று கல்லூரி பிரின்சிபல் ‘பூ’ ராமு சொல்வது..

“பல தடவை உங்கப்பாவைத் தூக்கிட்டுப் போய் பாவாடையை அவுத்துப் பார்த்துட்டு ஆம்பளைன்னவுடனேயே அப்படியே தூக்கிப் போட்டுட்டு போயிருக்காங்க..” என்று கதிரின் அம்மா சொல்லும் பரிதாப வசனம்..!

“உங்க பொண்ணு குடுத்து வெச்சவ சார், அவ நினைச்சதை நினைச்ச நேரத்துல பேசுற சுதந்திரம் இருக்கு…”

“அது என்னன்னு தெரியறதுக்குள்ளையேதான் நீங்க நாயடிக்கிற மாதிரி அடிச்சு, கிழிச்சு தொங்க விட்டுட்டீங்களே சார்…”

“நீங்க நீங்களா இருக்கறவரைக்கும் நாங்க நாயா இருக்கறவரைக்கும் இங்கே எதுவுமே மாறப் போறதில்லை ஸார்..” என்கிற யதார்த்த உண்மையை கிளைமாக்ஸில் கதிர் சொல்லி முடிக்கும் அற்புத காட்சிக்காகவே இயக்குநர் மாரி செல்வராஜை மனதார, உளமார பாராட்ட வேண்டும்.

தனது முந்தைய படங்களை போலவே இந்தப் படத்திலும் சாதியின் பெயர்களைச் சொல்லாமலேயே படத்தை தயாரித்து அளித்திருக்கிறார் தயாரிப்பாளர் பா.ரஞ்சித். சாதிகளைக் குறிப்பிட்டால் சென்சாரில் பிரச்சினை வரும் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால் நமது புதிய இளைய சமுதாயத்தினருக்கு, அதுவும் நகரத்தில் வாழும் புதிய இளைஞர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் புரியவே புரியாது.

இவர்களுக்குப் புரியும்வகையிலாவது அட்லீஸ்ட் சாதிகளின் ஏற்றத் தாழ்வுகளால் நடக்கும் களேபரம்தான் இந்தப் படத்தின் கதை என்பதை சில வசனங்களிலாவது சொல்லியிருக்கலாம்.

இன்றைய நிலைமையில் இந்தியா முழுமைக்குமே இது போன்ற புளியங்குளங்கள் நிறையவே உண்டு. அங்கே இவர்கள் மாதிரியான ‘பரியேறும் பெருமாள்’களும், ‘ஜோதி மகாலட்சுமி’களும் உண்டு..!

எளிமையான அந்த மக்கள் இப்போதும் கூலிக்கு வேலை பார்த்து, கிடைப்பதை பகிர்ந்துண்டு, கிடைக்கும் நேரத்தில் ஆதி தமிழர்களின் வாய் மொழி நாட்டுப்புறப் பாடல்களை தங்களது அடுத்தத் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கும்விதமாய் ஆடலும், பாடலுமாய் தங்களது வாழ்க்கையைக் கழிக்கிறார்கள். இந்த வாழ்க்கையைக்கூட அவர்களை வாழ விடாமல் செய்வதுதான் தற்போது ஆதிக்கச் சாதியினரின் அரும்பெருஞ் செயலாக இருந்து வருகிறது.

“ஒடுக்கப்பட்ட சாதியினரை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒடுக்கியே வைத்திருப்பீர்கள்…?” என்கிற வினாவைத்தான் இந்தப் படத்தில் எழுப்பியிருக்கிறார் இயக்குநர்..!

இந்த வினாவுக்கான விடையை படம் பார்க்கும் தமிழகத்து மக்கள் தங்களுக்குள்ளும், தங்களது வீட்டிற்குள்ளும், வெளியிலும், பொதுவிடங்களிலும் கேட்க ஆரம்பித்தால் தமிழ்ச் சமூகத்தில் சாதி என்னும் பேயை கொஞ்சம், கொஞ்சமாக விரட்டிவிடலாம்..!

இக்காலத்திற்கேற்ற திரைப்படத்தை காவியமாய் படைத்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜுக்கும் அவரது குழுவினருக்கும் படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர், இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் நமது நன்றி கலந்த வணக்கங்கள்..!

‘பரியேறும் பெருமாள்’  மிக, மிக அவசியமாக பார்க்க வேண்டிய படம்.

தவறவிடாதீர்கள் மக்களே..!

Our Score