“என் வீடு போல செட் போட்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது…” – விஜய் சேதுபதியின் கிண்டல்..!

“என் வீடு போல செட் போட்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது…” – விஜய் சேதுபதியின் கிண்டல்..!

மெட்ராஸ் எண்ட்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘96’.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரசாத் லேபில் நேற்று மதியம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் படத்தின் டிரெயிலரும் இரண்டு பாடல் காட்சிகளும் திரையிடப்பட்டன.

டிரெயிலரை பார்த்து புரிந்து கொண்ட கதைப்படி விஜய் சேதுபதி புகைப்படக் கலைஞர். அதிலும் இயற்கை நிகழ்வுகளை புகைப்படமாக்கும் ஆர்வம் உள்ளவர். அவருடைய பள்ளி வயது காதலியை பின்னாளில் பார்க்க நேர்ந்து அவருக்கும், அவரது காதலிக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகள்தான் இத்திரைப்படத்தின் கதையாகத் தோன்றியது.

96 movie team

விஜய் சேதுபதியின் ஆரம்ப கால வெற்றிப் படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இப்படம் முழுக்க, முழுக்க காதல் படமாக உருவாகியுள்ளது. படத்தின் டைட்டிலான ‘96’ என்பது இந்தக் கதை நிகழும் ஆண்டு ‘1996’ என்பதைக் குறிப்பது போல தெரிகிறது.

இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதி முதல் முறையாக திரிஷாவுடன் ஜோடி சேர்ந்திருப்பது ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் கெமிஸ்ட்ரி எப்படியிருக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பையும் தமிழ்த் திரையுலகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிகழ்வில் பேசிய படத்தின் கலை இயக்குநர், “நான் 12-ம் வகுப்பு படிக்கும்போதுதான் ‘மெளனம் பேசியதே’ படம் வெளியானது. அப்போதே த்ரிஷாவைப் பார்த்து, நானும் எனது நண்பர்களும் “எனக்குத்தான்.. எனக்குத்தான்…” என்று சொந்தம் கொண்டாடினோம். ஆனால், இன்று அவங்களோட படத்தில் நான் பணி புரியும் வாய்ப்புக் கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி..” என்றார்.

DSC_7792

இசையமைப்பாளர் கோவிந்த வசந்தா பேசும்போது, “நான் த்ரிஷாவின் தீவிர ரசிகன். ரீரெக்கார்டிங்கின்போது அவரை திரையில் பார்த்தபோது இசையமைப்பதைக் காட்டிலும், அவரை ரசிப்பதில்தான் ஆர்வமாக இருந்தேன்…” என்றார்.

நாயகி த்ரிஷா பேசும்போது, “இந்தப் படம் ஒரு ஹீரோயினுக்காகவே எழுதப்பட்ட படம். நான் விஜய் சேதுபதியுடன் போட்டி போட்டு நடிக்கவில்லை. அவர் கேஷூவலாக நடித்திருக்கிறார்…” என்றார்.

DSC_7875

நாயகன் விஜய் சேதுபதி பேசியபோது, “த்ரிஷாவை எல்லோரும் ‘சீனியர்’ என்கிறார்கள். பொதுவாக ஹீரோயின்கள் சின்ன வயதிலேயே சினிமாவுக்குள் வந்து விடுவார்கள். அதுபோல்தான் திரிஷாவும் எனக்கு முன்பாகவே சினிமாவுலகத்துக்கு வந்துவிட்டார். ஆனால், திரிஷா என்னைவிட ஏழு வருடங்களாகவது இளையவராக இருப்பார்.

நான் எப்போதும் வெளிப்படையாக பேச மாட்டேன். ஏனென்றால் நான் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன். த்ரிஷாவை பார்த்தால் சின்ன வயசில் இருந்து எனக்கு பயம். நான் வீட்டுப் பாடம் செய்யவில்லை என்றால் என் அம்மா த்ரிஷாவை காட்டிதான் பயமுறுத்துவார்கள்.

திரிஷா நடித்த முதல் படமான ‘லேசா லேசா’ ரிலீஸானபோது நான் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் நான் சினிமாவில் நுழைவேன் என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இந்தப் படத்தில் திரிஷாவுடன் நடித்தது எனக்குக் கிடைத்த புதுமையான அனுபவம். அவர் நடித்த ‘கில்லி’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ இரண்டு படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒவ்வொரு காட்சிக்கும் அவ்வளவு மெனக்கெட்டு நடித்திருக்கிறார்கள்.

திரிஷா, தமன்னா, நயன்தாரா மூவருடனும் நடித்தபோதுதான் அவர்களின் டெடிகேஷன், உழைப்பு பற்றித் தெரிந்தது. அதனால் இந்த மூன்று பேரும் இன்றைக்கும் சினிமாவில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படம் இயக்குநர் பிரேம் மூலம்தான் தொடங்கப்பட்டது. ‘செக்கச் சிவந்த வானம்’ படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்க…’ என்று சொல்லியிருந்தேன். அசேபோல இந்த ‘96’ படத்துக்கும் என்னால சொல்ல முடியலை. ஏனென்றால், இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு அப்படியாகிவிட்டது. இதுவே என்னை இப்போது பயமுறுத்துகிறது.

1996-ம் ஆண்டு தஞ்சாவூரில் பிளஸ் டூ படித்து முடித்த மாணவ, மாணவிகள் 20 வருடங்கள் கழித்து சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். அப்போது அவர்களில் இருவரான நாயகன் எனக்கும், நாயகியான திரிஷாவுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்தக் கதை ஒரே இரவில் நடந்து முடியும் கதை. படம் பார்ப்பவர்களையும் அவர்களது பழைய பள்ளிக் கால நினைவுகளை அசை போட வைக்கும்.  சின்ன வயது விஜய் சேதுபதி, திரிஷாவாக நாங்கள் நடிக்கவில்லை. அதற்கெல்லாம் வெயிட்டையெல்லாம் குறைத்து மெனக்கெடணும். இயக்குநரும் அதை விரும்பவில்லை. அதனால் வேறு ஆர்ட்டிஸ்ட்டுகள் அதில் நடித்திருக்கிறார்கள்.

vijay sethupathy-trisha

எத்தனை கதைகளில், எத்தனை கேரக்டர்களில் நடித்தாலும் போரடிக்காதது காதல்தான். காதலால்தான் இந்த உலகமே இயங்குகிறது. காதலுக்காக பலரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நானும் காதலித்து திருமணம் செய்தவன்தான். இந்தப் படத்தில் சொல்லப்படும் காதல் நிச்சயமாகப் பேசப்படும்…” என்றார் விஜய் சேதுபதி.

மேலும் தொடர்ந்து நடந்த கேள்வி பதில் சீஸனில், தனது வீட்டில் நடந்தது வருமான வரித்துறை சோதனை அல்ல என விளக்கமளித்தார் விஜய் சேதுபதி.

DSC_7891

இது தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “எனது வீட்டில் நடந்தது சோதனையே இல்லை. அதுவொரு சாதாரண சர்வேதான் என்று வருமான வரித் துறை அதிகாரிகளே கூறினார்கள். வருமான வரித் துறையில் சர்வே என ஒன்றிருப்பது குறித்து எனக்கே இப்போதுதான் தெரியும்.

நான் நேற்று மதியம்தான் குடும்பத்துடன் வாரணாசியில் இருந்து திரும்பினேன். கடந்த மூன்று வருடங்களாக முன் பணமாகவே வருமான வரியை நான் கட்டி வருகிறேன். ஆனால் ரிட்டன் தாக்கல் செய்யவில்லை. எனது ஆடிட்டர் திடீரென போய் ரிட்டன் தாக்கல் செய்ததால், வருமான வரித் துறையினர் வீடு தேடி வந்துவிட்டனர். இதுதான் நடந்தது.

அதற்குள் ஐடி ரெய்டு என தகவல் பரவிவிட்டது. அதுவும் ஒரு பப்ளிசிட்டிதான். பொதுவாக தவறான செய்திகள்தான் வேகமாக பரவும். நாம் காசு கொடுத்தால்கூட அது கிடைக்காது. இதுதான் இப்போதைக்கு டிரெண்ட். பிறகு நம் ஊரில் சமீபகாலமாக கண்டதை பேசினால்தான் பப்ளிசிட்டி கிடைக்கும் என்று பப்ளிக்கா கத்திப் பேசிட்டு, ‘அப்புறம் நான் பேசல; என்னோட அட்மின் பேசினாரு’ என்று சொல்லலாம். இல்ல… ‘மிமிக்கிரி பண்ணிட்டாங்க’ன்னு சொல்லலாம். அது மாதிரி அது என் வீடே இல்ல. என் வீடு போல செட் போட்டு செக் பண்ணியிருக்கலாம்” என சொல்லி விட்டுச் சிரித்தார் விஜய் சேதுபதி.

 

Our Score