full screen background image

பரமசிவன் பாத்திமா – சினிமா விமர்சனம்

பரமசிவன் பாத்திமா – சினிமா விமர்சனம்

‘தமிழ்க்குடிமகன்’ திரைப்பட புகழ் இசக்கி கார்வண்ணன், லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்து இயக்கி இருக்கும் படம்தான் இந்த ‘பரமசிவன் பாத்திமா’.

இந்தப் படத்தில் விமல் கதையின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாயாதேவி நடித்திருக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பாடல்கள் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஜாதியை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வந்துள்ள. இப்போதும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது அதையும் தாண்டி மதத்தையும் முன் வைத்து படங்கள் வரத் தொடங்கி இருக்கின்றன. அதில் முதல் படமாக இந்தப் பரமசிவன் பாத்திமா’ படத்தை சொல்லலாம்.

இதுவரையிலும் சுற்றி வளைத்துதான் இந்து மதப் பிரச்சாரத்தை செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுது திரைப்படம் வாயிலாகவும் இந்து மதத்தை முன் வைத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களின் மத மாற்ற முயற்சியை கடுமையாக எதிர்த்தும், அப்படி மதமாற்றம் செய்யப்பட்டவர்களும் கடைசிவரையிலும் உள்ளுக்குள் இந்துவாகவே வாழ்ந்து மறைந்தார்கள்.. மறைகிறார்கள்… என்பதை சொல்ல வந்திருப்பதுதான் இந்த பரமசிவன் பாத்திமா படம்.

திண்டுக்கல் அருகே இருக்கும் சிறுமலை என்ற கிராமத்தில்தான் இந்த திரைப்படம் முழுமையாக படமாக்கப்பட்டுள்ளது. அந்த மலைதான் இந்தப் படத்தின் கதை களம்.

அந்த மலையில் மூன்று ஊர்கள் இருக்கின்றன. ஒன்று ‘சுப்ரமணியபுரம்’. இன்னொன்று ‘யோகோபுரம்’. இன்னொன்று ‘சுல்தான்புரம்’. இதில் ‘சுப்பிரமணியபுரம்’தான் முதலில் அனைத்து மக்களும் ஒன்றாக வாழ்ந்து இருந்தபோது இருந்திருக்கிறது.

ஆனால் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் அந்தப் பகுதிக்கு வந்த கிறிஸ்தவர்கள் சர்ச், பள்ளிக்கூடம் கட்டும்பொழுது கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் அவர்களுக்கெல்லாம் வேலை வாய்ப்பிலும், பள்ளியிலும், கல்வியிலும் முன்னுரிமை தரப்படும் என்று சொல்லி அவர்களை மன மாற்றம் செய்து, மதமாற்றமும் செய்தார்களாம்.

அப்படி மதம் மாற்றம் செய்யப்பட்டவர்கள் எல்லாம், யோகோபுரம்’ என்கின்ற ஊருக்கு தனியாக வந்து குடி பெயர்ந்து விட்டார்கள். அந்த ஊரில்தான் இப்போது சர்ச் இருக்கிறது. உண்மையாக அந்த சர்ச் இருந்த இடத்தில் முன்பு மாரியம்மன் கோவில்தான் இருந்திருக்கிறது. ஆனால் கிறிஸ்தவர்கள் சர்ச் கட்டிய பிறகு அந்த மாரியம்மன் சிலையை இப்போது மேரியம்மாளாக மாற்றி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்த இரண்டு ஊர்களுக்கு இடையில் சதாசர்வகாலமும் சண்டைகளும், மோதல்களும் நடந்து கொண்டே இருப்பதால் இருதரப்பிலுமே அந்நியர்கள் உள்ளே பிரவேசிக்க கூடாது என்று போர்டை ஊரின் எல்லையில் வைத்திருக்கிறார்கள். அப்படி இருந்தும் இரு தரப்பிலும் சண்டைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் அந்த ஊரில் நடக்கும் திருமணத்தின்போது புது மாப்பிள்ளையை அன்றைய இரவில் விமலும், சாயாதேவியும் சேர்ந்து கொலை செய்து விடுகிறார்கள். போலீஸ் வருகிறது. விசாரிக்கிறது.  ஆனால் கொலையாளிகள் யார் என்று தெரியவில்லை.

இரண்டாவதாக இன்னொரு திருமணமும் நடைபெறுகின்ற சூழலில், அந்த புது மாப்பிள்ளையான கூல் சுரேஷூம் இதேபோல் விமல்-சாயா தேவியால் படுகொலை செய்யப்படுகிறார்.

இப்பொழுது அந்த ஊருக்கு வரும் இன்ஸ்பெக்டர் இந்தக் கொலையாளிகளை கண்டுபிடிக்காமல் நான் மலையில் இருந்து இறங்கமாட்டேன் என்று சொல்லி அங்கேயே டேரா போட்டு அமர்ந்து விடுகிறார்.

ஊருக்குள்ள இருந்து யாரையும் வெளியில்விடாமல், வெளியிலிருந்து யாரையும் ஊருக்குள்ள அனுமதிக்காமல் தன்னுடைய விசாரணையை தொடங்குகிறார் இன்ஸ்பெக்டர்.

இவருடைய விசாரணை என்னவானது.. விமலும், சாயாதேவியும் இவர்களை ஏன் கொலை செய்தார்கள்… இதற்கெல்லாம் விடை கிடைத்ததா.. இல்லையா… என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

நாயகன் விமலும், சாயாதேவியும் முதலில் அறிமுகமாகும்போது மனிதர்களாகத்தான் தோன்றுகிறது. ஆனால், போகப் போக அவர்கள் வேற்று உலகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மை தெரியும்போது அடடா என்கின்ற ஒரு சின்ன ஆச்சரிய உணர்வும் நமக்குள் தோன்றுகிறது.

நடிகர் விமல் எப்படி இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் என்று தெரியவில்லை. விமல், பாதிரியார் எம்.எஸ்.பாஸ்கரிடம் பேசுகின்ற பல வசனங்களும், கிறிஸ்தவ மதமாற்றம், இந்து மத கொள்கைகள், இந்து கடவுள்கள் பற்றிய வசனங்கள் கதைக்குத் தேவையானதாக இருந்தாலும் ஒரு மதத்தினரை தாழ்த்தி மற்றொரு மதத்தினரை உயர்த்தி பேசுகின்ற இந்த மத வெறுப்புப் பேச்சு நிச்சயம் சினிமாவில் ஏற்கத்தக்கதல்ல.

இவரைவிடவும் சாயா தேவிதான் இந்தப் படத்தில் உண்மையாகவே நடித்திருக்கிறார். அவருக்கு அதற்கான ஸ்கோப் நிறையவே கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் கொல்லப்படுகின்ற அந்தக் காட்சியில் அவருடைய நடிப்பும், துடிப்பும் நமக்கே ஒரு பாவத்தை ஏற்படுத்திவிட்டது.

இப்படி படுகொலை செய்யப்பட்டவர்கள் பழிக்குப் பழி வாங்குவதில் எந்த தவறும் இல்லை என்பது போல அந்தக் காட்சிகளை மிகவும் உயிர்ப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர்.

பாதிரியாராக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் திருநெல்வேலி தமிழை அவ்வளவு அழகாக உச்சரித்து கடைசிவரையில் படு ஸ்பீடாகவே பேசி முடித்திருக்கிறார்.

கிறிஸ்தவராக மாதம் மாறியும் உள்ளுக்குள் இந்து மத கடவுள்கள் இறங்கி சாமியாடுகின்ற நிலைமையில் இருக்கும் மனோஜ்குமார் ஒரு பக்கம் நமக்கு சிறிய நகைப்பையும் கொடுத்திருக்கிறார். இவருடைய மனைவியாக நடித்திருக்கும் ஆதிரா அந்த ஒரேயொரு காட்சியில் அனைவரையுமே அசர வைத்து விட்டார் என்றே சொல்லலாம். மனோஜ் குமாருக்கு சாமி வந்தவுடன் அவரது வீட்டுக்குள்ளே சுத்தி சுத்தி கதறும் ஆதிராவின் அந்த ஒன் வுமன் ஷோ பாராட்டுக்குரியது.

நடிகராக அறிமுகமாகியிருக்கும் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். வில்லத்தனத்தை முகத்தில் காட்டிவிட்டு, சண்டை காட்சிகளிலும் கூலாக நடித்துவிட்டு, படத்தையும் மிகவும் கலர்ஃபுல்லாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சுகுமார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் சேஷ்விதாவும், இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் விமல் ராஜூவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பாசமிக்க அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனியும், கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் காதல் சுகுமாரும், அலப்பறை செய்யும் துபாய் ரிட்டர்ன் மாப்பிள்ளையான கூல் சுரேஷும், தீவிர மதுப் பிரியராக நடித்திருக்கும் வீரசமரும் அவரவர் நடிப்பை அட்சரம் குறையாமல் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் இயக்குநரான இசக்கி கார்வண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டராக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். அவர் படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அவரே நடித்திருக்கிறார் என்பது ஏற்கக் கூடியதுதான். ஆனால், படத்தின் வியாபாரத்திற்காக வேறு ஒரு பெரிய நடிகரை இந்தக் கேரக்டரில் நடிக்க வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்திற்கும் ஒரு கவன ஈர்ப்பு கிடைத்திருக்கும் என்பதையும் சொல்லிக் கொள்கிறோம்.

சுகுமாரின் அழகான ஒளிப்பதிவில் அந்த மலை கிராமம் அட்டகாசமாக காட்சி அளிக்கிறது. அதிலும் பல இடங்களில் ஒளிப்பதிவு ரம்மியமாகவும், அப்படியே கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலவும் இருப்பது ஆச்சரியத்தையும் தருகிறது.

இசையமைப்பாளர் தீபன் சக்ரவர்த்தியின் இசையில் பாடல்கள் அத்தனையும் அழகு. நா மல்லி என்கின்ற பாடல் சிறப்போ சிறப்பு. மற்றைய பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான். சிறந்த இசை என்றே சொல்லலாம். பின்னணியிசையிலும் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு இசையமைத்து இருக்கிறார்.

படத்தில் பல இடங்களில் வசனங்கள் அனைத்துமே மதமாற்றம், மதப் பிரச்சாரம், இந்து மத ஆதரவு, கிறிஸ்தவ மத எதிர்ப்பு என்று போய்க்கொண்டே இருப்பதால் எதை கட் செய்தாலும் இன்னொரு இடத்தில் கட்டாகிவிட சூழலில் இருப்பதாலும் படத் தொகுப்பாளர் மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படத் தொகுப்பு செய்து கொடுத்திருக்கிறார்.

கிறிஸ்தவ மத எதிர்ப்பு என்கின்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டுமே வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், மதமாற்றம் என்பதை கிறிஸ்துவ அமைப்பினர் இந்து மக்களை மிரட்டி செய்தார்கள் என்ற ஒரு பொய்யையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

உண்மையில் மதமாற்றம் என்பது தனி மனிதர்களின் உரிமை. அது இந்துவாக இருந்தாலும் சரி, கிறிஸ்டியனாக இருந்தாலும் சரி… முஸ்லிமாக இருந்தாலும் சரி. யாராக இருந்தாலும் எனக்கு இந்த மதம் பிடிக்கவில்லை. இன்னொரு மதத்திற்கு செல்கிறேன் என்று சொல்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு.

அப்படி அவர்கள் இன்னொரு மதத்திற்கு போன பின்பு பழைய மதத்தை மறக்க முடியாமல் தவிக்கிறார்கள் என்று சொல்வதுதான் இயக்குநரின் இப்போதைய கண்டுபிடிப்பு. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவர் கிறிஸ்தவ மதத்தை பழித்து பேசுவதும், இந்து மதத்தை உயர்த்தி பேசுவது முற்றிலும் தவறான ஒரு செயல்.

பல இடங்களில் பொய் பொய்யாகத்தான் சொல்லி இருக்கிறார். உண்மையில் கிறிஸ்துவ பள்ளிகளும், கிறிஸ்தவ கல்லூரிகளும்தான் தமிழ்நாட்டில் மாணவர்களை படிக்க வைத்து ஒரு தலைமுறையையே உயர்த்திவிட்டது. அதற்கு பின்புதான் மற்றைய அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் இந்த வரலாற்று உண்மையை மறைத்து விட்டு ஏதோ கிறிஸ்துவ மிஷனரிகள் இந்தியாவில் மதமாற்றத்துக்காகவே பள்ளிகளையும், கல்லூரிகளை ஆரம்பித்தார்கள் என்று ஒரு கேடுகெட்ட பொய்யை இந்தப் படத்தின் மூலமாக சொல்ல வைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காகவே இயக்குநரை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

ஒரு மதத்தை உயர்த்துவதற்காக, இன்னொரு மதத்தை தாழ்த்தி பேசுவது எந்த வகையிலும் ஜனநாயகம் அல்ல. இந்தப் படத்தை சிறப்பாக இயக்கம் செய்திருந்தாலும் ஒரு தவறான கருத்தை முன் வைத்திருக்கும் விஷயத்திற்காகவே இந்தப் படத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். நிராகரிக்கிறோம்..!

Our Score