நடிகை த்ரிஷா நாயகியாக நடித்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ என்னும் திரைப்படத்தில் அதிமுக, திமுக கட்சிகளை மறைமுகமாகத் தாக்கியிருக்கிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சமீபத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியகியுள்ளது.
இந்தப் படத்தில் த்ரிஷா, நந்தா, வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன், சாம்ஸ், சோனா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் திருஞானம் இயக்கியுள்ள இத்திரைப்படம் அரசியல் களத்தை மையமாகக் கொண்டது.
ஒரு முதலமைச்சர் வேட்பாளரை கொலை செய்துவிட்டு தான் முதலமைச்சராக வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் நினைக்கிறார். இதேபோல் வாரிசு அரசியலை எதிர்க்கும் நல்ல மனிதரான தனது தந்தையை கொலை செய்துவிட்டு தான் அடுத்த முதல்வராக வேண்டும் என்று அந்தக் கட்சித் தலைவரின் மகன் நினைக்கிறார். இவர்கள் இருவரின் ஆசைகளும் நிறைவேறினவா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
படத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வேல.ராமமூர்த்தி மருத்துவமனையில் சீரியஸாக இருக்கும்போது “அவர் நன்றாகவே இருக்கிறார். சீக்கிரமாக வீட்டுக்கு வந்துவிடுவார்…” என்று மருத்துவமனை நிர்வாகத்தைக் கட்டாயப்படுத்தி சொல்ல வைப்பது போலவும் காட்சிகள் உள்ளன.
அதேபோல் “நாங்க என்ன தலைவர் ‘இட்லி சாப்பிட்டாரு’, ‘ஜூஸ் குடிச்சாரு’ன்னு பொய்யா சொல்லச் சொல்றோம். ‘நல்லாயிருக்காரு’ன்னு ஒரு அறிக்கைதான விடச் சொல்றோம்…” என்று கட்சியின் நிர்வாகிகளில் ஒருவரான சாம்ஸ் சொல்வதுபோல வசனமும் வைத்திருக்கிறார்கள்.
இது முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது நடந்த சம்பவங்களைக் கிண்டல் செய்வதுபோல அமைந்துள்ளது.
வாரிசு அரசியலை முற்றிலும் தான் எதிர்ப்பதாக வேல.ராமமூர்த்தி சொல்ல.. அதற்கு எதிர்மாறாக மற்றைய தலைவர்கள் எண்ணுவதாகவும் காட்சிகள் உள்ளன. மேலும் அவரது மகனே இதை எதிர்த்து.. “இது ராஜ வம்சம்தான். அப்பனுக்கு அடுத்து மகன்தான் அரியணை ஏறணும்…” என்றெல்லாம் சொல்லி அப்பாவை விஷ ஊசி போட்டுக் கொல்லும் காட்சியெல்லாம் படத்தில் இருக்கிறது.
படத்தின் முற்பாதியில் இன்றைய அரசியல் நிலவரத்தை கேலியும், கிண்டலும் செய்யும் காட்சிகள் நிறைய உள்ளன. அப்பாவி தொண்டர்களின் உண்மையான பாசத்தையும், அன்பையும் அரசியல்வாதிகள் எப்படி தங்களது சுயலாபத்துக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
மேலும் இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக படத்தின் டைட்டிலில் அனைத்து பெயர்களின் எழுத்துக்களிலும் ஒரு கருப்பு, ஒரு சிவப்பு என்று வர்ணம் பூசியிருக்கிறார்கள். இது தமிழகத்தை இதுவரையிலும் ஆண்டு கொண்டிருக்கும் திராவிட கட்சிகளையே குறிப்பதாகப் படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள்.
இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் முன்கூட்டியே இது பற்றிய செய்திகள் பரவியிருக்கும். ஆனால், இப்போது சப்தமில்லாமல் ஓடிடி தளத்தில் வெளியானதால்தான் இந்தப் ‘பரமபதம் விளையாட்டு’ படம் பற்றிய பரபரப்பு வெளியில் பரவவில்லை என்று தெரிகிறது.