full screen background image

பாபநாசம் – சினிமா விமர்சனம்

பாபநாசம் – சினிமா விமர்சனம்

மலையாளத்தில் 4.5 கோடியில் தயாரிக்கப்பட்டு 54 கோடியை வசூலித்த சூப்பர் ஹிட் படம். எந்த மொழியில் வேண்டுமானாலும் இந்தப் படத்தின் கதையை வைத்து படமெடுக்கலாம் என்பதற்கு உத்தரவாதம் தரக்கூடிய அளவுக்கான சிறப்பான கதை. இயக்கம் தெரிந்த இயக்குநர். சிறந்த கதையின் நாயகனாக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கும் உன்னத கலைஞன் கமல்ஹாசனுக்கு பம்பர் பரிசாகக் கிடைத்துள்ளது இந்த படம்.

தன் குடும்பம், தன் பிள்ளைகள் என்று குறுகிய வட்டத்திற்குள் வாழும் ஒரு சராசரி தந்தை தனது மகள்களுக்காக ஒரு பக்கம் போராடுகிறார். இன்னொரு பக்கம் பணம், செல்வாக்கு இருந்தும் தனது ஒரே மகனை காணவில்லை என்கிற பதைபதைப்போடு போராடுகிறார் ஐ.ஜி. கீதா.

அதிகார வர்க்கம் தனது அனைத்துவிதமான சக்திகளையும் பயன்படுத்தும் என்பதை தான் பார்த்த சினிமாக்கள் மூலம் புரிந்து வைத்திருக்கும் 4-ம் வகுப்பு வரையிலுமே படித்த சுயம்புலிங்கம் என்கிற தந்தை அதனை எப்படியெல்லாம் தவிர்க்கிறார்.. ஏமாற்றுகிறார் என்பதும், தங்களை ஏமாற்றுகிறான் என்பது தெரிந்தும் ஒரு சிறிய ஆதாரம்கூட கிடைக்காமல் அல்லாடும் போலீஸும், அதிகார வர்க்கமும் இன்னொரு பக்கமாக திரைக்கதை சுவாரஸ்யமாக விரிகிறது.

3 மணி நேர படமென்றாலும் கடைசிவரையிலும் போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர். மலையாள மூலத்தோடு ஒப்பிட்டுப் பார்ப்பது தேவையில்லாதது என்றாலும் மூலத்தைவிடவும் 15 நிமிடக் காட்சிகளை கூடுதலாக வைத்து தமிழ் ரசிகர்களுக்கு சிச்சுவேஷனை இன்னும் கொஞ்சம் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர். இந்த அளவுக்கு தமிழச் சினிமா குறித்தும், தமிழ் ரசிகர்கள் குறித்தும் புரிந்து வைத்திருப்பதற்கு அவருக்கு எமது பாராட்டுக்கள்.

கொஞ்சம் சிக்கனக்காரர். ஆனால் கருமியில்லை. ஒரு கூலியாளாக ஊருக்குள் வந்து இன்றைக்கு அந்த ஊருக்கே கேபிள் டிவி சர்வீஸ் செய்து தருபவர். 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். சொந்த வீடு இருக்கிறது. மனைவி, இரண்டு மகள்கள்.. அழகான குடும்பம்.

கடுமையாக உழைத்து முன்னேறியிருப்பதால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்களை கண்டாலே கோபம். அநியாயங்களை எதிர்க்க நினைப்பவர். அதிகார பலத்தை வெறுப்பவர்.. இப்படிப்பட்டவருக்கு வாழ்நாள் முழுக்க ஓசியிலேயே ஹோட்டலில் சாப்பிடவும், அதிகாரத்தை வைத்து காசு சம்பாதிக்க நினைக்கும் கான்ஸ்டபிள் பெருமாள் எதிரியானதில் சந்தேகமில்லை. தன்னை நிறைய முறை இண்டர்கட் செய்து நோஸ்கட் செய்யும் சுயம்புலிங்கம் மீது வெறுப்புடன் இருக்கும் பெருமாள் “மவனே.. ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது உன்னை பார்த்துக்குறேன்…” என்று கருவுகிறார்.

அதுவரையில் செல்போன்கூட வைத்துக் கொள்ள விரும்பாத சுயம்புலிங்கத்தின் குடும்பத்திற்கு செல்போன் மூலமாகவே வில்லங்கம் வருகிறது. மூத்த மகளான செல்வி பள்ளியில் டூர் போன இடத்தில் போலீஸ் ஐ.ஜி. ஆஷா சரத்தின் மகனான ரோஷனின் கண்ணில் படுகிறாள். அவளது அழகு அவனை ஆட்கொள்கிறது. அவள் குளிக்கும்போது மறைந்திருந்து வீடியோ எடுக்கிறான் ரோஷன். அதைக் காட்டி மகளை அடைய நினைக்கிறான். கொட்டுகின்ற மழையின் இரவில் அந்த போராட்டம் நடக்க.. என்ன ஏதென்று யோசிப்பதற்குள் அவனது உயிர் பிரிகிறது.

காலையில் வந்து பார்க்கும் சுயம்புலிங்கம் குறுகிய நேரத்தில் சுய நினைவுக்கு வந்து தனது குடும்பத்தைக் காப்பாற்றும் அனைத்து வழிகளையும் தான் பார்த்த சினிமாக்களின் மூலம் கிடைத்த அறிவினால் கண்டறிகிறார். அதனைச் செயல்படுத்துகிறார்.

இன்னொரு பக்கம் தனது மகன் காணாமல் போனது பற்றி விசாரிக்கத் துவங்கும் ஐ.ஜி. கீதாவிடம் சுயம்புலிங்கம் அவளது மகனின் மாருதி காரை ஓட்டிச் சென்றதை தான் பார்த்த உண்மையைச் சொல்கிறார் கான்ஸ்டபிள் பெருமாள்.

இதற்குப் பின் சுயம்புலிங்கத்தைச் சுற்றிச் சுற்றி வருகிறது விசாரணை.. மனிதர் அசராமல் போலீஸை கலங்கடிக்கிறார். இறுதியில் கண்டு பிடித்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்த சுவையான திரைக்கதையின் முடிவு..!

சுயம்புலிங்கமாகவே உருமாறியிருக்கிறார் கமல். அவருக்குப் பொருத்தமான கேரக்டர்தான். அந்த மீசை கெட்டப்பை மறந்துவிட்டால் பாபநாசத்தான் மாதிரியேதான் இருக்கிறார். கமலின் நடிப்பை பற்றியெல்லாம் விமர்சனம் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவர்தான் என்றாலும் படத்தின் திரைக்கதையமைப்பின்படி அவரது ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு வலியைத் தாங்கிக் கொண்டிருக்கும் தந்தையின் அடையாளம் இருக்கிறது.

வயதாக, வயதாக மனிதர்களின் முகத்தில் மாற்றம் வரத்தான் செய்யும். கமலுக்கு நிறையவே வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக அவருடைய கண்ணின் பிரமாண்டம், ‘என்ன கண்ணுடே’ என்று சொல்ல வைக்கிறது. இத்தனையாண்டு கால கமல்ஹாசனின் பட அனுபவத்தில் மிக எளிமையான அறிமுகக் காட்சி இதுவாகவும் இருக்கலாம்..

ஸ்டேஷனுக்கு ஜாமீன் கையெழுத்து போட வந்த நிலையில் சினிமா பாடல் எந்தப் படத்தில் வந்தது.. எந்த ஆண்டு..? யார் இயக்குநர்..? என்றெல்லாம் சொல்லிவிட்டு அமைதியாகும் கமலின் முகத்தில் இருந்துதான் இத்தனை கதையும் விரிகிறது. எதுவும் நடக்காதது போல அமைதியான அதே முகத்தில்தான் மறுபடியும் படம் முடிவடைகிறது.. சிறப்பான திரைக்கதையாக்கம்.

கவுதமியிடம் கொஞ்சல், கெஞ்சல், வழிசல்.. என்று மகள்களிடம் பாசத்தைக் காட்டுவது.. பணம் என்றவுடன் யோசிப்பது.. “5000 ரூபாய்க்கு செலவு வைச்சீட்டீங்களே.,..?” என்று அங்கலாய்ப்பது.. தான் கருமி அல்ல. சிக்கனக்காரன் என்பதை அவ்வப்போது சில வசனங்களின் மூலம் காட்டுகிறார் கமல்.

பதைபதைக்கும் அந்தக் காட்சி நடந்த பின்புதான் கதையின் ஓட்டம் தீவிரமாகிறது. எதற்கும் பயப்படாமல், சனலப்படாமல் அனைத்து கில்லி வேலைகளையும் தானே செய்துவிட்டு போலீஸுக்கு எப்படியெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று அவர் சொல்லிக் கொடுக்கும் அந்த கிளாஸ்.. இத்தனையாண்டு கால நடிப்பில் ஒரு துளி. கொஞ்சமும் மிகையில்லை.

“எந்த சூழலிலும் உங்களை ஜெயிலுக்கு அனுப்ப நான் விடமாட்டேன்..” என்ற அவருடைய உறுதியான பேச்சு.. ரசிகர்களையே தாக்குகிறது.  கிளைமாக்ஸில் மலையாளத்தைவிடவும் அதீத உணர்ச்சிப்பெருக்கில் “நான் மிகப் பெரிய சுயநலக்காரன். எனக்கு என் குடும்பம் தவிர வேற எதுவும் முக்கியமில்லைன்னு நினைச்சு வாழ்ந்துட்டேன். வளர்ந்துட்டேன். அதுதான் இத்தனைக்கும் காரணமாயிருச்சு. ஆனா நீங்க அப்படியில்லை. தான் செய்த பாவங்களையெல்லாம் இந்த பாபநாச தீர்த்தம் நாசம் செய்யும்” என்று தன்னை குறை சொல்லி பேசுவதும், ஐ.ஜி.யும், அவரது மனைவியும் புரிந்து கொண்டு அவரைக் கடந்து செல்லும் காட்சியில் அப்போதே கை தட்ட வைக்கிறது.

ஆனந்தின் நீண்ட நெடிய வசனத்திற்கு தனது உடல் மொழி எதையும் காட்டிவிடாமல் இருந்துவிட்டு தன்னுடைய பேச்சில் வெடித்து அழும் நிலைக்கு வந்து தன்னை நிறுத்திக் கொண்டு பதிலளித்து தனது பாவத்தைத் தீர்க்கும் கமலின் நடிப்பையெல்லாம் எந்த விமர்சனத்தாலும் சொல்லிவிட முடியாது.. சல்யூட் டூ யூ ஸார்..!

கவுதமியின் முதிர்ச்சியடைந்த முகம் பல நேரங்களில் நம்மை கவராமல் இருக்க.. அதேபோல் அவருக்குக் குரல் கொடுத்த நடிகை சரண்யா பொன்வண்ணனின் ஹிஸ்கி வாய்ஸ் வசன உச்சரிப்பும்தான் நம்மை அநியாயத்திற்கு சோதிக்கின்றன. மீனாவே நடித்திருந்தால் ‘டபுள் ஓகே’ என்று சொல்லியிருக்கலாம்.

கமலுக்கு பின்பு எனில் அது நிச்சயம் ஐ.ஜி.யாக நடித்த ஆஷா சரத்தின் நடிப்புதான்.  மிகையில்லாத போலித்தனமில்லாத ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு.. அதே சமயம் பட், பட்டென்று நறுக்குத் தெரித்தாற்போல் அவர் பேசும் அரை வசனங்களால் படத்தின் டெம்போ கூடிக் கொண்டே செல்கிறது..

ஆகஸ்ட் 2-ம் தேதியையே எல்லாரும் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருக்க.. ஒருவர் ஆரம்பித்தவுடன் ,கெட் அவுட், என்று அவர் கத்தியதில் சோகத்திற்கு பதில் கைதட்டல்கள் பறக்கின்றன. தனது ஒரே மகனை இழந்த தவிப்பில் அவர் நிற்க.. தனது குடும்பத்தை இழக்கக் கூடாது என்கிற தவிப்பில் கமல் நிற்க..  இந்த ஆடுபுலி ஆட்டத்தில் கமலுக்கு ஈடு கொடுத்து ஆடியிருக்கிறார்.

கிளைமாக்ஸில் பதவியை ராஜினாமா செய்துவிட்டதால் எந்த தோரணையும் இல்லாமல் சாதாரண அம்மாவாக தனது மகனின் கதியை அறிய விரும்பி காத்திருந்து பேசுவதிலும் மின்னுகிறார்.  இவருடைய நடிப்புத் திறனை பார்த்து கமலே ஆச்சரியப்பட்டு ‘தூங்காவனம்’ படத்தில் டாக்டர் வேடத்தை கொடுத்திருக்கிறாராம். வெல்டன் மேடம்..

நிவேதா தாமஸின் நடிப்பும் குறிப்பிடத்தக்கது. அழகும், நடிப்பும் ஒன்று சேர்ந்து வந்திருக்கிறது. இவரது தங்கையான எஸ்தர் அனில், கமலிடம் சென்று ‘தப்பா சொல்லிட்டனப்பா..?’ என்று சொல்லி கேட்கும் நடிப்பில் நம்மையும் கொஞ்சம் கண் கலங்க வைத்திருக்கிறார்.

இதில் இருக்கும் அனைத்து நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பிலும் குறை சொல்ல ஏதுமில்லை. பெருமாளாக நடித்திருக்கும் கலாபாவன் மணியின் நடிப்பு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கமல் குடும்பத்தினரை அடித்து. உதைத்து இம்சித்து விஷயத்தை வரவழைக்க செய்யும் முயற்சியில் பயங்கரமாக இருப்பது, பின்னணி இசையைவிடவும் கலாபாவன் மணியின் வில்லன் முகம்தான். 

ஆஷா சரத்தின் கணவராக நடித்திருக்கும் ஆனந்த் மகாதேவன், கமலின் கேபிள் டிவி அலுவலகத்தில் வேலை செய்யும் ஸ்ரீராம், மாமனார் டெல்லி கணேஷ், மாமியார் சாந்தி வில்லியம்ஸ், மச்சின்ன் அபிஷேக், சார்லி, வையாபுரி, நெல்லை சிவா, வில்லனான ரோஷன் என்று நட்சத்திரப் பட்டாளமே சேர்ந்து இந்தப் படத்தை நகர்த்தியிருக்கிறது. அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்..!

மலையாளத்தில் ஒளிப்பதிவு செய்த அதே சுஜித் வாசுதேவ்தான் இதனையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ‘பாபநாசம்’ என்றவுடன் நெல்லை மாவட்டத்தின் கண் கவர் காட்சிகளை கவர் செய்திருப்பார்கள் என்று நினைத்தோம். கொஞ்சம்தான் இருக்கிறது. ‘திரிஷ்யம்’ படத்தில் வரும் அதே வீட்டிலேயே படத்தை எடுத்தார்களோ என்னவோ? அதுவும், இதுவும் ஒன்றாகவே தெரிகிறது.

எடிட்டர் அயூப்கானின் எடிட்டிங் படத்திற்கு மிகப் பெரிய பலம். பல காட்சிகள் அடுத்தடுத்து வேக வேகமாக நகர்ந்தாலும் அதில் இம்மிளயவும் சலிப்பில்லாமல் தொகுத்திருக்கிறார்.

இன்னொரு பக்கம் தைரியமாக வசனத்தை ‘தின்னவேலி’ பாஷையில் கொடுத்து அசர வைக்கிறார் இயக்குநர். இதே பாஷையில் எடுக்கப்பட்ட ‘கடல்’ படம் இந்த ஒரு காரணத்திற்காகவே.. வசனங்கள் புரியாததாலேயே ரசிகர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. தெரிந்திருந்தும் படக் குழுவினர் மிகத் தைரியமாக இதனை தொட்டிருக்கிறார்கள் என்றால் மிகவும் தைரியந்தான்.

அண்ணன் ஜெயமோகனின் எளிமையான வசனங்கள்.. நண்பர் சுகாவின் வசன உச்சரிப்பு உதவி.. இதுவும் படத்திற்குக் கிடைத்த பலங்களில் ஒன்றுதான்.. நல்ல வேளையாக பிள்ளைகள் பேசும் வசனங்களை எளிமைப்படுத்தியிருப்பதன் மூலம் குழப்பம் வராமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜிப்ரானின் இசையில் பாடல்களைவிடவும் பின்னணி இசை கேட்கும்படி இருந்தது. பாடல்களெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி பல மாமாங்களாகிவிட்டதால் அதனை விட்டுவிடுவோம்.. ஆனால் பாடல் காட்சிகளை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள்.  துணிக்கடையில் கவுதமி தனது பெண்களுடன் புதிய உடையில் நடந்து வரும் காட்சியில் கமல் காட்டும் எக்ஸ்பிரஷன்.. ‘வாவ்’ என்று சொல்ல வைக்கிறது..

இது போன்ற குடும்பச் சூழல்களை முதலில் காட்டவிட்டு பின்பு அக்குடும்பத்திற்கு ஏற்படும் கெடுதல்களை காட்டினால் மக்கள் நெகிழ்வார்கள் என்பது உலக சினிமா இயக்குநர்களின் அரிச்சுவடி பாடம். இதனை இப்படத்தில் இயக்குநர் ஜீத்து ஜோஸப் கச்சிதமாகக் கையாண்டிருக்கிறார்.

இயக்குநர் ஜீத்து ஜோஸப்பின் பண்பட்ட இயக்கத்தை பாரட்ட வார்த்தைகளே இல்லை. அத்தனை அற்புதமான இயக்கம். ஒரு சிறிய விஷய்த்தைக்கூட மிஸ் செய்துவிடாமல் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டும் வகையில் காட்சிகளை அடுத்தடுத்து வைத்திருக்கிறார். திரைக்கதையும், இயக்கமும் ஒரு சேர ரசிகர்களை கை தட்ட வைத்திருக்கின்றன.

படத்தில் லாஜிக் எல்லை மீறல்கள் இல்லாமல் இல்லை. ஆனால் மலையாளத்தில் மக்கள் அதனை மிக இயல்பானதாகவே எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். தமிழில் போலீஸ் ஸ்டேஷனில் நடக்கின்ற அட்டூழியங்களெல்லாம் மக்கள் மனதில் ஆழமாகப் பதிவாகியிருப்பதால் இதில் வரும் முதற்கட்ட போலீஸ் விசாரணையெல்லாம் நமக்கு ஜூஜூபியாக தெரிகிறது.

எஃப்.ஐ.ஆரே போடாமல் விசாரிப்பது. தென் மண்டல ஐ.ஜி. என்பதால் அவரே நேரடியாக இறங்கி விசாரிப்பது. தனக்கு சந்தேகமாக இருக்கிறது என்றாலும் ஆதாரம் இல்லாமல் கை வைக்க முடியாது என்று இன்ஸ்பெக்டர் அருள்தாஸ் ஐ.ஜி.யிடமே சொல்வது. கவுதமி அவசரப்பட்டு தேதியை சொல்லி அருள்தாஸிடம் மாட்டிக் கொள்ள.. ஸ்கூல்ல இருந்து போன் வந்திருக்கு என்று கமல் சொல்லி சமாளிப்பது.. இத்தனை டிவிக்கள் இருந்தும் அதில் இது சம்பந்தமான காட்சிகள் வராதது.. மீடியாவை பயன்படுத்தியிருந்தாலே இதில் பாதி காட்சிகள் தேவையில்லாமல் போயிருக்கும்..

கமல் கைது செய்யப்பட்டு இப்போது ஜாமீனில் விடப்பட்டிருக்கும் நிலைமையை சற்று அழுத்தமாகச் சொல்லியிருக்கலாம். மேலும், சன் டிவி செய்திகளில் ‘சுயம்புலிங்கம்தான் கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது’ என்றெல்லாம் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம்.

இந்த அளவுக்கு திரைக்கதையின் சிறு பகுதிகள் இடறல்களாக இருந்தாலும் இந்தத் தவறுகள் வெளியில் தெரியாதவண்ணம் கதாபாத்திரங்களின் நடிப்பு நம்மை கவர்ந்திழுக்கிறது.

படத்திற்கு மிகப் பெரிய பலமாக  அமைந்திருக்கிறது நடிகர்களின் கேரக்டர் ஸ்கெட்ச்.  கமல்ஹாசனின் குடும்பத்தையே ஹை கிளாஸ் சொஸைட்டியாக மாற்றியிருந்தால்  வெற்றி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. மிடில் கிளாஸ்.. அதற்கும் கீழே உள்ளவர்கள் அதிகார வர்க்கத்தை எதிர்த்து எப்படியெல்லாம் போராடுகிறார்கள். போராட வேண்டும் என்கிற ஒரு விஷயத்தை இந்தப் படம் சொல்வதுதான் படத்தின் மிகப் பெரிய பலம். இதனால்தான் தியேட்டர்களிலும் ரசிகர்கள் அதிகம் கொண்டாடுகிறார்கள்.

அதேபோல் ஆஷா சரத்தின் மீதான அனுதாபமும் கிடைக்காமல் இல்லை. கவுதமி சொல்வதுபோல “அவங்களும் ஒரு அம்மாதானே..? ஒரே பையனை இழந்துட்டாங்க.. அவங்க பாவமில்லையா..?” என்பதற்கு “ஒருவேளை.. நம்ம பொண்ணு செத்து அந்தப் பையன் தப்பிச்சிருந்தான்னா அவங்க உன்னை மாதிரி நினைப்பாங்கன்னு நினைச்சியா..?” என்று கமல் கேட்கும் கேள்வியில் இருப்பதுதான் அதிகாரம் படைத்தவர்களுக்கும், அதிகாரம் இல்லாதவர்களுக்கும் இடையேயான வித்தியாசம்..!

தொழில் நுட்பம் வளர, வளர அதன் இன்னொரு பக்க விளைவாக இது போன்ற குற்றங்களும் பெருகிக் கொண்டேதான் வருகின்றன. இதனை முற்றிலும் தவிர்க்க முடியாது என்றாலும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள் முன்னெச்சரிக்கையாக இருந்தால் இதனை தடுக்க முடியும். தவிர்க்க முடியும்.

குடும்பமே முக்கியம் என்று வாழும் இந்தியச் சமூகத்தில் பெண் குழந்தைகளை பெற்றெடுத்து வளர்த்து வரும் அனைத்து பெற்றோர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்.  அவர்களது பிள்ளைகளுக்கும் இதுவொரு முன்னெச்சரிக்கையாகவும் இருக்கும்.

அதே சமயம் ஆஷா சரத் போன்ற தாய்களும் சுயநலம் சார்ந்தில்லாமல் யோசித்துப் பார்த்து தங்களது மகனின் தவறை ஒப்புக் கொண்டு அவர்களைத் திருத்த முயன்றாலே அது, இந்தப் படத்தின் உண்மையான வெற்றியாக இருக்கும்.

கமலுக்கு மட்டுமல்ல தமிழ்ச் சினிமாவுக்கும் இதுவொரு முக்கியமான படம்தான்..!

குடும்பத்துடன் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!  மிஸ் பண்ணிராதீங்க மக்களே..!

Our Score