full screen background image

நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் திடீர் மரணம்

நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தன் திடீர் மரணம்

இயக்குநரும், நடிகருமான பிரதாப் போத்தன் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை காலமானார். அவரது வயது 70.

பிரதாப் போத்தன் ‘மூடுபனி’, ‘அழியாத கோலங்கள்’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘வறுமையின் நிறம் சிவப்பு’, ‘மை டியர் மார்த்தாண்டன்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘திருமதி ஒரு வெகுமதி’ உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். மேலும் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். 

சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

கடந்த 1985-ம் ஆண்டு வெளியான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ திரைப்படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றார். தமிழில் ‘சீவலப்பேரி பாண்டி’, ‘வெற்றி விழா’, ‘மை டியர் மார்த்தாண்டன்’, ‘ஜீவா’, ‘மகுடம்’, ‘லக்கிமேன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.

மோகன்லால் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 1997-ம் ஆண்டு வெளிவந்த ஒரு ‘யாத்ராமொழி’ படம்தான் இவர் கடைசி இயக்கிய படமாகும்.

நடிப்பில் அவர் கடைசியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான மம்முட்டி நடித்த ‘சிபிஐ 5 தி பிரைன்’ படத்தில் நடித்திருந்தார். மேலும், அவர் மோகன்லாலின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பரோஸ்: நிதி காக்கும் பூதம்’ படத்திலும் நடித்து வந்தார்.

பிரதாப் போத்தன் 1985 இல் நடிகை ராதிகாவை காதலித்து மணந்தார். ஆனால் அடுத்த வருடமே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் பிரதாப் போத்தன் அமலா சத்யநாத் என்பவரை மணந்தார். ஆனால், 2012-ம் ஆண்டில் இவரையும் விவாகரத்து செய்தார். பிரதாப் போத்தனுக்கு ஒரு மகள் மட்டுமே இருக்கிறார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் இன்று காலை திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையில் கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அவரது வீட்டில் பிரதாப்போத்தனின் உடலுக்கு இயக்குநர்கள் மணிரத்னம், ராஜீவ் மேனன், பி.சி.ராம் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

Our Score